05) நல்ல சொல் ஓர் தர்மம்

நூல்கள்: நாவை பேணுவோம்

நல்ல சொல் ஓர் தர்மம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனின் உடலிலுள்ள ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது. அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்

அறிவிப்பவர்: ஆபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2891)

இறைவன் நமக்கு தந்திருக்கின்ற அருட்கொடைகளுக்காக ஒவ்வொரு நாளும் தர்மம் செய்தாக வேண்டும் என்று நபிகளார் கூறுகின்றார்கள். தினமும் தர்மம் செய்வது எல்லோராலும் இயலாத விஷயம். பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானல்சாத்தியமாகுமே தவிர மற்றவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்றே அவர்களுக்கும் சேர்த்து தினமும் தர்மம் செய்வதற்கு ஒரு வழிமுறையை கற்றுத்தருகின்றார்கள். பிறர் கஷ்டத்தை போக்குவதும் தர்மம் என்று கூறிவிட்டு இது மட்டுமல்ல நல்ல வார்த்தையை பேசினால் அதுவும் ஓர் தர்மம் என்று விளக்குகின்றார்.

இஸ்லாத்தில் நல்ல சொல்லை பேசுவதின் மூலம் தர்மம் செய்த நன்மையை பெற்றுவிட முடியும். நல்லதை மட்டுமே பேச வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதோடு நிறுத்தவில்லை. அதை அனைவரும் ஆர்வமாய் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்காக நல்ல சொல்லை பேசினால் இவ்வாறு தர்மம் செய்த நன்மை உண்டு என அறிவிக்கின்றான்.

தினமும் தர்மம் செய்ய வேண்டும் என்ற நம்மீது விதிக்கப்பட்ட கடமையை நல்ல சொல்லின் மூலம் நிறைவேற்ற முடியும் என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றான். இந்த எளிய தர்மத்தை நாம் செய்கின்றோமா? காசு பணம் செலவழிப்பதின் மூலம் தர்மம் செய்வதாக இருந்தால் ஏதோ இழப்பு ஏற்படுவதைப் போல எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தி விடக்கூடும்.

ஆனால் நல்ல சொல்லின் மூலம் தர்மம் செய்வதில் அவ்வாறு ஏற்படுத்த வாய்ப்பே இல்லை. இது போன்ற ஷைத்தானின் தடை இல்லாமலிருந்தும் கூட இதை செய்வதில் நல்ல சொல்லை சொல்வதில் நமக்கென்ன யோசனை நல்ல சொல்லை சொல்வதின் மூலம் நம்முடைய கடமையும் கழிகின்றது. போனஸாக தர்மம் செய்த கூலியும் கிடைக்கின்றது.