54) மனிதாபிமானம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

மனிதாபிமானம்

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَليُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ»

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2557)

விளக்கம்:

மனித நேயத்தை இவ்வுலகில் அதிகம் போதித்து நடைமுறைப்படுத்தியது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே! வறிய மக்களிடம் நல்ல முறையில் நடந்து அந்த மக்களை மகிழ்விக்கும் பல அறிவுரைகளை இஸ்லாம் கூறியுள்ளது. நம்மிடம் வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரன் நமக்காக உணவு தயார் செய்து வரும் போது அவனுக்குக் கொடுக்காமல் நாம் மட்டும் நன்றாகச் சாப்பிட்டு விடுகிறோம். அல்லது மிச்சம் மீதி இருப்பதை அவருக்கு வேண்டாவெறுப்பாகக் கொடுக்கிறோம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள், நமக்காக இவ்வாறு உணவு தயாரித்து வரும் வேலைக்காரனை நம் பக்கத்தில் அமர வைத்து அவருக்கும் அதிலிருந்து உண்ணக் கொடுக்க வேண்டும் என்றார்கள். அல்லது குறைந்தபட்சம் ஒரு கவள உணவாவது அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றார்கள். நமக்காகப் பாடுபட்டு அறுசுவை உணவு படைத்த அந்தப் படைப்பாளிக்கும் உணவைக் கொடுத்து மனித நேயத்தைக் காப்போம்.