29) உழைப்பே உயர்வு

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்
v4

உழைப்பே உயர்வு

عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ»

ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி)

(புகாரி: 2072)

விளக்கம்:

இவ்வுலகில் வாழ்வதற்கு உணவு. உடை, இருப்பிடம் போன்றவை அவசியத் தேவைகளாகும். இதைப் பெறுவதற்கு உழைப்பு முக்கியமாகும். உழைப்பின்றி இவைகளைப் பெற முடியாது. ஆனால் சிலர், தாம் உழைக்காமல் அடுத்தவர்களின் உழைப்பில் காலத்தைத் தள்ளுவதும், சோம்பேறிகளாக வாழ்க்கையை ஒட்டுவதும் பரவலாக இருப்பதை நாம் காண்கிறோம் உண்மையான இறை நம்பிக்கையாளன், உழைத்து அதன் மூலம் வந்த வருமானத்திலேயே சாப்பிட வேண்டும். அந்த உணவே சிறந்த உணவு.

மன்னராக வாழ்ந்த நபி தாவூத் (அலை) அவர்கள் நினைத்திருந்தால் மக்கள் வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். மன்னராக இருந்தவரே உழைத்துள்ளார் என்றால் நாம் உழைப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் உழைப்பின் முக்கியத்துவத்தை நபியவர்கள் தெளிவுபடுத்தும் போது எல்லா இறைத் தூதர்களும் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி: 2262) இறைத்தூதர்கள் அனைவரும் எப்படி உழைப்பாளிகளாக இருந்தார்களோ அதைப் போன்று நாமும் உழைப்பாளிகளாக இருக்க வேண்டும்.