27) அருள் நிறைந்த வியாபாரம்
அருள் நிறைந்த வியாபாரம்
விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை (முறித்துக்கொள்ளும்) உரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு அருள்வளம் அளிக்கப்படும். அவ்விருவரும் பொய் கூறி(க் குறையை) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் அருள் வளம் நீக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)
விளக்கம்:
மனிதனின் வாழ்க்கை செழிப்புக்கு வியாபாரம் முக்கியமானதாகும். இந்த வியாபாரத்தின் மூலம் செல்வத்தை ஈட்டி நல்ல வசதியுடன் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். இதனால் இதில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த வியாபாரத்தில் இலாபத்தை மட்டும் மனதில் கொண்டு பொய், புரட்டு, பித்தலாட்டம் என்று அனைத்து முறைகேடுகளையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி, கொள்ளை இலாபம் அடைகின்றனர்.
இது போன்ற பொய்யும் புரட்டும் செய்து. குறைகளை மறைத்துச் செய்யும் வியாபாரத்தில் இறைவனின் மறைமுகமான அருள்வளம் நீக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் பொய் சொல்லாமல் நியாயமான முறையில் குறை, நிறைகளை தெளிவுபடுத்திச் செய்யும் வியாபாரத்தில் இறைவனின் அருள்வளம் கண்டிப்பாகக் கிடைக்கும். உலக இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் படைத்தவனின் அருள் வளத்தைக் கவனத்தில் கொண்டு, நேர்மையான நியாயமான வியாபாரத்தைச் செய்ய வேண்டும்.