26) உண்ணும் ஒழுங்குகள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

உண்ணும் ஒழுங்குகள்

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ»

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும், பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான், இடக் கையால் தான் பருகுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்லிம்: 4108)

விளக்கம்:

மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து விஷயங்களுக்கும் அழகிய வழிகாட்டும் இஸ்லாம். வாழ்வில் தினமும் கடைபிடிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் நல்வழியைக் காட்டுகிறது. சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் வலக் கரத்தாலேயே சாப்பிட வேண்டும். வலக் கரத்தால் தான் குடிக்க வேண்டும்.

இடக் கரத்தால் சாப்பிடுவதும் குடிப்பதும் தீயவர்களின் பழக்கமாகும் மலஜலம் கழித்து, சுத்தம் செய்யும் போது இடது கரத்தைப் பயன்படுத்தும் நாம். அதே கரத்தைச் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவது அருவருக்கத்தக்கதாகும்.

எனவே தான் சாப்பிடுதல் குடித்தல் போன்ற காரியங்களுக்கு வலக்கரத்தையும், மலஜலம் போன்ற அசுத்தங்களைத் தூய்மைப்படுத்த இடக் கரத்தையும் பயன்படுத்த நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள்.