21) அண்டை வீட்டார்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

அண்டை வீட்டார்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 6015)

விளக்கம்:

மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அண்டை வீட்டார் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுக்குச் செய்யும் உபகாரங்களின் மூலம் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவர்களுக்குத் தீமை செய்தால் தண்டனைனயும் கிடைக்கும்.

அண்டை வீட்டாரின் உரிமைகளைப் பற்றி நபிகளார் விளக்கும் போது வாரிசதாரர்களுக்கு நாம் எப்படிச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமோ அது போன்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் வீட்டில் குழம்பு வைத்தால் சற்றுக் கூடுதலாக வைத்து அண்டை வீட்டாருக்கும் கொடுத்து உதவுமாறு பணித்துள்ளார்கள். இதுபோன்று பெரிய பொருளாக இருந்தாலும் சரி சிறிய பொருளாக இருந்தாலும் சரி! அண்டை வீட்டாருக்குக் கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரும் வண்ணம் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு தொல்லை தருபவர்கள் இறை நம்பிக்கையாளராக இருக்க முடியாது என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.