15) மன்னிப்பும் பணிவும்
மன்னிப்பும் பணிவும்
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம்: ஒருவர் இறைவழியில் தர்மம் செய்வதால் இவ்வுலகத்தில் அல்லாஹ் மென்மேலும் செல்வத்தை வழங்குவான். அல்லது இவர் செய்த தர்மத்திற்குப் பிரதிபலனாக மறுமை நாளில் மாபெரும் நன்மையை அல்லாஹ் வழங்குவான். தவறு செய்யும் மனிதர்களை மன்னிப்பதன் மூலம் இறைவனின் மன்னிப்பை நாம் பெற்றுக் கொள்ள முடியும் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்” என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். “அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையோன் (அல்குர்ஆன்: 24:22) ➚
நாம் தவறு செய்யும் போது. எப்படி இறைவன் நம்மை மன்னிக்க வேண்டுமென விரும்புவோமோ அதைப் போன்று. மற்றவர்கள் தவறு செய்யும் போது நாம் மன்னிக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், பணவசதி படைத்திருந்தாலும் அல்லாஹ்வுக்காகப் பணிவுடன் நடந்தால் இறைவனிடத்தில் மதிப்பு மரியாதை உள்ளவர்களாக உயர்ந்து கொண்டே செல்லலாம்.