08) உயர்ந்த கை
உயர்ந்த கை
உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் சுய மரியாதையுடன் இருக்க விரும்புவாரோ அவரை அல்லாஹ் அவ்வாறு ஆக்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்க விரும்புவாரோ அவரைத் தன்னிறைவு உள்ளவராக அல்லாஹ் ஆக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)
விளக்கம் :
இவ்வுலகில் சிலர் செல்வந்தராகவும், பலர் ஏழையாகவும் உள்ளனர். ஏழைகளாக இருக்கும் பலர் அடுத்தவர்களிடம் சென்று உதவிகளைப் பெறுபவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளவர்கள் ‘நாமும் அடுத்தவர்களுக்கு வாரி வழங்க வேண்டும் எப்போதும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கக் கூடாது என்ற எண்ணமும் அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டும் சுய மரியாதை உள்ளவர்களாக இருப்பதற்கும் ஆசைப்பட வேண்டும்.
சுய மரியாதை உள்ளவர்களாக இருப்பதற்கும் ஆசைப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சுய மரியாதை உள்ளவர்களாகவும் தன்னிறைவு அடைந்தவர்களாகவும் மாற்றுவான்.
மேலும் தர்மம் செய்யும் முன்னர் தம் அடிப்படைத் தேவைகளையும் தம் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தர்மம் செய்யும் போது நமது இரத்த சொந்தங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அவர்களின் தேவையை நிறைவேற்றிய பின்னர் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும்.