05) நல்ல விஷயங்கள் இரண்டு

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

நல்ல விஷயங்கள் இரண்டு

قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

இரு விஷயத்தில் தவிர மற்றதில் பொறாமைக் கொள்ளக்கூடாது. 1 ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி அதை அவர் நல்வழியில் செலவு செய்கிறார். 2 ஒரு மனிதருக்கு அல்லாஹ் அறிவாற்றலை வழங்கினான். அவர் அதன் மூலம் (சரியான) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி

நூல்கள்:(புகாரி: 73),(முஸ்லிம்: 1486)

விளக்கம்: நன்மையான விஷயங்களில் போட்டி போடுவதும் அதில் அதிக அக்கறை காட்டுவதும் மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், செல்வம் அதிகம் வழங்கப்பட்டு அதை நல்ல வழியில் செலவழிப்பவரைப் பார்த்துப் பொறாமைப்படலாம். நமக்கும் இவருக்கு வழங்கப்பட்டது போல் செல்வம் இருந்தால் நாமும் அவரைப் போன்று நற்காரியங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கலாமே!

மறுமையில் அதிகமதிகம் நன்மைகளைப் பெறலாமே! என்று எண்ணுவதும் அதற்காக ஆர்வப்படுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, நல்ல அறிவாற்றல் வழங்கப்பட்டு, அதனால் அவர் ஆணவம் கொள்ளாமல் அதன் மூலம் நியாயமான, நேர்மையான தீர்ப்பை வழங்கி வருகிறார்.

மேலும் இவர் பெற்ற கல்வியின் மூலம் பலருக்கு நற்கல்வியும் கற்றுத் தருகிறார். இவரைப் போன்று நாமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது கூடும். கல்வி வேண்டும், அதன் மூலம் நற்காரியங்களைச் செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் ஆசைப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.