04) மறுமை நாளின் அடையாளங்கள்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

மறுமை நாளின் அடையாளங்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا»

கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைத்திருப்பதும், (சர்வ சாதாரணமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடைபெறுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்:(புகாரி: 80),(முஸ்லிம்: 5186)

விளக்கம்:

இவ்வுலகம் ஆழிக்கப்படுவதற்கு முன்னால் மார்க்கத்திற்கு முரணான பல நிகழ்வுகள் உலகில் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார்கள், அவற்றில் மேற்கூறப்பட்ட நான்கு விஷயங்களும் அடங்கும் அறியாமைக் கால பழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் நடைமுறைப்படுத்தும் நிலை உருவானால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள் இன்றைய காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிறைந்திருப்பதை நாம் காண்கிறோம்.

பெற்ற மகனையே நரபலி கொடுக்கும் கொடுமை நடப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம் மது என்பது ஒரு காலத்தில் வெறுக்கப்பட்டு தூற்றப்பட்ட நிலை இருந்தது ஆனால் இன்று பெரிய மனிதர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இது முதலிடத்தில் இருக்கிறது. இது இல்லையானால் அது விருந்தே இல்லை என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

அடுத்து, விபச்சாரம் இன்று சர்வ சாதாரணமாக நடைபெறுவதைப் பார்க்கிறோம், மேலும் விபச்சாரத்தைத் தடை செய்ய வேண்டிய அரசே இதை ஏற்று நடத்தும் கொடுமையும், இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதைத் தொழிலாக அங்கீகரித்திருப்பதும், இதைச் செய்பவர்களுக்கு நல வரியங்கள் அமைத்து அவர்களை ஆதரித்திருப்பதும் விபச்சாரம் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

எனவே இதுபோன்ற காரியங்கள் பெருகி வரும் போது மறுமை நாளை எண்ணிப் பார்த்து பாவ மன்னிப்புக் கேட்டு நற்காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும்.