குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா?
குறைந்த அளவில் மது விற்கும் இடத்தில் வேலை பார்க்கலாமா?
இஸ்லாத்தில் போதை தரக்கூடிய மது உள்ளிட்ட அனைத்தும் உட்கொள்ளவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
“அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று நான், கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ ரலி,
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த போது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள்” என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
“மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
இந்தச் செய்திகள் மதுபானத்தை விற்பனை செய்வது ஹராம் என்றும், மீறி விற்றால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கின்றது.
இந்தத் தண்டனையில் சில்லறை வியபாபாரம் மொத்த வியாபாரம் என்ற பாகுபாடு கிடையாது. குறைந்த அளவில் மதுவை வியாபாரம் செய்தாலும் அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். தண்டனைக்குரியதாகும்.
அந்தக் கடையில் மது விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் மது விற்பனை பிரிவு அல்லாத வேறு பிரிவுகளில் பணி செய்ய நீங்கள் அமர்த்தப்பட்டால் அதில் தவறில்லை.