16) பெண் வீட்டார் பெண்ணுக்கு நகை போடலாமா?
பெண் வீட்டார் பெண்ணுக்கு நகை போடலாமா?
மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தல் எதுவுமின்றி தந்தை தன் மகளுக்கு திருமணத்தில் அன்பளிப்புச் செய்வது தவறல்ல.
நபி (ஸல்) அவர்கள் தனது மகள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்காவாசிகள் கைதி(களாக இருந்த தங்களது உறவினர்)களுக்காக பிணைத் தொகையை அனுப்பிய போது ஸைனப் (ரலி) அவர்கள் (தனது கனவர்) அபுல் ஆஸ் அவர்களுக்காக செல்வத்தை பிணைத் தொகையாக அனுப்பி வைத்தார்கள். அச்செல்வத்துடன் அவர்களுடைய கழுத்து மாலை ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள்.
அம்மாலை (இதற்கு முன்பு) கதீஜா (ரலி) அவர்களிடம் இருந்தது. கதீஜா (ரலி) அவர்கள் அந்த மாலையுடன் ஸைனப் (ரலி) அவர்களை அபுல் ஆஸிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த மாலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தவுடன் கதீஜா (ரலி) அவர்களை நினைத்து கடுமையாக மனம் இளகினார்கள். மேலும் (நபித்தோழர்களிடம்) ஸைனபுக்குரிய கைதியை அவருக்காக நீங்கள் விடுதலை செய்து அவருக்குரிய (செல்வத்)தை அவரிடமே திருப்பி அனுப்பலாம் என நீங்கள் கருதினால் (அவ்வாறு செய்யுங்கள்) என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள் ஆம் (அவ்வாறே செய்கிறோம்) என்றனர். ஸைனப் (ரலி) அவர்களைத் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபுல் ஆஸிடம் உடன்படிக்கை எடுத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸாவையும் ஒரு அன்சாரித் தோழரையும் அனுப்பி நீங்கள் இருவரும் யஃஜஜ் என்ற பள்ளத்தாக்கில் இருங்கள். உங்களை ஸைனப் கடந்து சென்றால் அவரை உங்களுடன் சேர்த்துக் கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
மகள் தன் தந்தையிடம் விரும்பியதைக் கேட்டுப் பெறுவதும் தறவல்ல. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நீ விரும்பியதை என்னிடம் கேள். தருகிறேன் என்று கூறியுள்ளார்கள்.
முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலி)
மாப்பிள்ளை வீட்டார் மணமகளுக்கு இவ்வளவு நகை போட வேண்டும் என பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துகின்றனர். இந்த அடிப்படையில் தந்தை தன் மகளுக்கு நகைகளை வாங்கிக் கொடுத்தால் இது அன்பளிப்பாகாது. மாறாக அன்பளிப்பு என்ற பெயரில் வாங்கப்படும் வரதட்சனையாகும்.
அன்பளிப்பு என்பது தந்தை தானாக விரும்பிக் கொடுப்பதாகும். அவர் விரும்பினால் கொடுப்பதற்கும் கொடுக்காமல் இஙப்பதற்கும் உரிமை உள்ளது. எவ்வளவு அன்பளிப்புச் செய்ய வேண்டும் என்பதையும் தந்தையே தீர்மானிப்பார். உங்கள் மகளுக்கு நீங்கள் நகை போட வேண்டும். அந்த நகை இவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு எந்த உரிமையும் இல்லை.
ஆனால் இவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள் என்றால் இவள் நம்முடைய வீட்டுக்கு வர இருக்கின்றாள். இவள் அதிகமான நகையுடன் வந்தால் பிறகு அந்த நகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நப்பாசையே இதற்குக் காரணம்.
எனவே இப்படிக் கேட்பவர்கள் வரதட்சணையே கேட்கின்றனர். இதனடிப்படையில் தந்தை மகளுக்கு நகைபோட்டால் தந்தை மகளுக்கு செய்யும் அன்பளிப்பு என்ற போர்வையில் வாங்கப்படுகின்ற வரதட்சனையாகும்.