13) நன்மைகள் பறிபோகும்
நன்மைகள் பறிபோகும்
இந்த உலகத்தில் வரதட்சணை வாங்கியவர்கள் மறுமை நாளில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திப்பார்கள். இவனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் இவனுக்கு எதிராக அல்லாஹ்விடம் முறையிடுவார்கள்.
அப்போது இறைவன் இவனுடைய நன்மைகளை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவான். இவனிடம் நன்மைகள் இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவர் செய்த பாவங்களை இவன் தலையில் சுமத்துவான்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார்.
ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்;இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்.
அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)” என்று கூறினார்கள்.
திருப்பிக்கொடுத்து விடுங்கள்
வரதட்சணை கொடுமையின் விபரீதத்தை அறியாத காலத்தில் யாராவது வரதட்சணை வாங்கியிருந்தால் அந்தப் பணத்தை பெண் வீட்டாரிடம் திருப்பித்தருவது அவருடைய கடமையாகும். பொருளுக்குரியவர்களிடத்தில் அதை திருப்பிக்கொடுத்துவிட்டால் மறுமைநாளில் இறைவனிடம் மாட்டிக்கொள்ளமாட்டோம்.
எனவே இவ்வுலகிலேயே செய்த பாவத்துக்கு பரிகாரத்தை தேடிக்கொள்ள வேண்டும் அநியாயமான முறையில் வாங்கிய வரதட்சணைப் பொருளை மாமனார் மாமியாரிடம் திருப்பிக்கொடுப்பதே இதற்கானப் பரிகாரமாகும். திருப்பிக்கொடுக்க முடியாவிட்டால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களை திருப்திபடுத்த வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் சமரசம் செய்து) அதிலிருந்து அவர் (இவ்வுலம்லேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது.
இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவற்றை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விம்தாசாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்).
அறிவிப்பவர் : அபூ ஹுரைர(ரலி)