08) பெரும்பாவத்தை விட கொடியது

நூல்கள்: வரதட்சணை ஒரு பெண் கொடுமை

பெரும்பாவத்தை விட கொடியது

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்தின் போது பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கும் நடைமுறை இல்லாத காரணத்தால் வரதட்சணை கூடாது என்று நேரடியாக குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படவில்லை. ஆனால் மஹர் தொடர்பான வசனங்களை கவனிக்கும் போது வரதட்சணை பெரும்பாவங்களில் ஒன்று என்பதை அறிய முடியும்.

திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணுக்கு கொடுக்கும் மணத்தொகைக்கு மஹர் என்று கூறப்படும். ஒரு ஆண்மகன் இந்த மஹரை மனைவியிடம் கொடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது ஹராமான செயல் என்று குர்ஆன் வன்மையாக கண்டிக்கின்றது.

وَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا

மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றி-ருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை.

(அல்குர்ஆன்: 2:229)

மனைவிக்கு கொடுத்த மஹரை ஆண் திரும்பப் பெறுவது அக்கிரமம் என்றும் பெரும்பாவம் என்றும் அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

وَاِنْ اَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏
وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏

ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து,66 இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

(அல்குர்ஆன்: 4:20-21)

பெண்ணுக்கு கொடுத்த பொருளை அவளிடமிருந்து பிடுங்குவது பெரும்பாவம் என்றால் இவன் கொடுக்காத பொருளை வரதட்சணையாக வாங்குவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

மஹர் கொடுப்பது ஆண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதா?

திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. இதற்கு மாறாக மாப்பிள்ளை பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. இது ஆண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதா? என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும் உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான். அதற்காக ஆண்கள் மீது அந்தச் சுமையைச் சுமத்தக் கூடாது என்று யாரும் கூற மாட்டோம்.

இதில் கஷ்டத்தைக் கவனத்தில் கொள்வதை விட நியாயத்தைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். சைக்கிள் வாங்குவதை விட கார் வாங்குவது கஷ்டமானது என்பதால் நாம் கார் வாங்காமல் இருப்பதில்லை. கார் மூலம் கிடைக்கும் கூடுதல் வசதி மற்றும் சொகுசுக்காகக் கஷ்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறோம். அது போல் தான் திருமண வாழ்க்கையின் மூலம் ஆண்கள் அதிக வசதியையும், சொகுசையும் இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.

சிறிது நேரம் இருவரும் இன்பத்தை அனுபவிப்பதில் மட்டும் சமமாக உள்ளனர். பின்விளைவுகளைச் சுமப்பதில் சமமாக இல்லை.

இவனது கருவைச் சுமப்பதால் அவள் படும் சிரமங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசவிக்கும் சிரமம், குடும்பத்தாருக்கு சேவை செய்யும் சிரமம் என ஏராளமான துன்பங்களைப் பெண்கள் தான் சுமக்கிறார்கள். ஆணுக்குச் சுகம் மட்டுமே கிடைக்கிறது. எனவே மஹர் கொடுப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தாலும் அவன் கொடுக்க வேண்டும் என்ற நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது.