18) இணைவைப்பில் விழுவதற்கான காரணங்கள்

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

இணைவைப்பில் விழுவதற்கான காரணங்கள்

தவறான கற்பனைகளாலும் அவசியம் அறிய வேண்டிய விசயங்களை அறியாததாலும் அதிகமான மக்கள் இணைவைப்பில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே இணைவைப்பதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள விசயங்களில் உண்மை நிலையை இவர்கள் அறிந்து கொண்டால் ஒருபோதும் இணைவைக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடைதல்

பாவம் செய்பவர்களால் அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற நம்பிக்கையால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் கையேந்துகிறார்கள். இவர்கள் மகான்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை விட கருணை மிகுந்தவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையே இவர்களை இணைவைப்பில் தள்ளுகிறது.

அல்லாஹ்வின் அளவற்ற கருணையைப் புரிந்து கொண்டால் எவ்வளவு பாவம் செய்தாலும் அவனிடமே பிரார்த்தனை செய்வதை விட்டுவிட மாட்டார்கள். அவனைத் தவிர்த்து மற்றவர்களிடம் செல்வதற்கு இவர்களின் மனம் இடம் தராது.

அல்லாஹ்வின் கருணையில் நிராசயடைதல் பாவமாகும். எவ்வளவு பாவங்கள் செய்தாலும் அதை அல்லாஹ் மன்னிப்பான் என்று நினைத்து திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும்.

என் மக்களே! நீங்கள் சென்று யூஸு பையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் என்றார்.

(அல்குர்ஆன்: 12:87)

வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்? என்று அவர் கேட்டார்.

(அல்குர்ஆன்: 15:56)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன்: 39:53)

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(அல்குர்ஆன்: 17:57)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்கு கூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 4812)

பாவிகளால் இறைவனை நெருங்க முடியாதா?

பெரிய அந்தஸ்த்தில் உள்ள மனிதரை நேரடியாக நெருங்க முடியாது. அவருக்கு நெருக்கமான மனிதரை அனுகி அதன் பிறகு அவரை நெருங்க முடியும். இறைவனை நெருங்குவதாக இருந்தால் இப்படித்தான் நெருங்க முடியும். எனவேதான் இறைவனுக்கு நெருக்கமான மகான்களிடத்தில் முதலில் தொடர்பு கொள்கிறோம் என்று இணைவைப்பவர்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.

இவர்கள் கூறுவது மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் அல்லாஹ்விற்கு அறவே பொருந்தாது. ஏனென்றால் அல்லாஹ் நமக்கு அருகில் நெருக்கமாக இருக்கிறான். நேரடியாகத் தன்னிடம் வேண்டுமாறு கட்டளையிடுகிறான். இடைத் தரகர்களை ஏற்படுத்துவதைக் கண்டிக்கிறான்.

பதவியில் உள்ளவர்களுக்கு நம்மைப் பற்றி தெரியாத காரணத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு ஆள் தேவை. நம்மைப் பற்றி யாரும் அறிய முடியாத அளவிற்கு துல்-யமாக அறிந்துள்ள இறைவனிடம் நம்மைப் பற்றி அறிமுகப்படுத்துவதற்கு யாரும் தேவையில்லை. எனவே நேரடியாகவே அவனிடம் கேட்க வேண்டும்.

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 40:60)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்(என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன்: 2:186)

இடைத்தரகர்களை ஏற்படுத்துதல் வழிகேடாகும்

அல்லாஹ்விடத்தில் நம்மால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது என்ற நம்பிக்கையால்தான் மக்கத்து காஃபிர்கள் இடைத் தரகர்களை ஏற்படுத்தினார்கள். இணைவைப்பாளர்களாக மாறினார்கள். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கிறான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன (என்று கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 6:97)

அல்லாஹ்வின் வல்லமையைப் புரியாமல் இருத்தல்

அல்லாஹ் என்றால் யார். அவனுடைய ஆற்றல் எத்தகையது. அவனுடைய அதிகாரம் எத்தகையது என்பதையெல்லாம் பலர் அறியாமல் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பண்புகளையும், சக்தியையும் புரிந்து கொண்டால் அவனை விட்டுவிட்டு வேறு யாரிடமும் இவர்கள் கையேந்த மாட்டார்கள். பின்வரும் ஆதாரங்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தைத் தெளிவாக விளக்குகிறது.

உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

(அல்குர்ஆன்: 6:46)

அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:38)

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு தீங்கு செய்து விட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(திர்மிதீ: 2440)

நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.

அறிவிப்பவர் : முஃகீரா (ரலி)

(புகாரி: 844)

நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்: என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என் அடியார்களே! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழிதவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.

என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.

என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.

என் அடியார்களே! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது. என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.

என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்து விடப் போவதில்லை.

என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!

என் அடியார்களே! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்து கொள்ளட்டும்!

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

(முஸ்லிம்: 5033)

மறுமையில் மகான்கள் காப்பாற்றுவார்களா?

இறந்துபோன நல்லடியார்களிடத்தில் பிரார்ததனை செய்தால் மறுமையில் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் இணைவைப்பிற்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்படி ஆதாரமில்லாத சொந்தக் கர்பணைகளால்தான் பலர் வழிகெட்டுப் போகிறார்கள்.

கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர்.

(அல்குர்ஆன்: 10:66)

எந்த ஒருவரையும் மகான் என்று நம்மால் முடிவு செய்ய முடியாது. அல்லாஹ்வுடைய நேசர்கள் யார் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஒரு பேச்சிற்கு இறந்து போனவர் இறைநேசர்தான் என்று வைத்துக் கொண்டாலும் மறுமையில் அவர் நம்மைக் காப்பாற்ற மாட்டார். இறை நேசரான ஈஸô (அலை) அவர்களிடம் பிரார்த்தித்தவர்களுக்கு ஈஸா (அலை) அவர்களால் மறுமையில் எந்த நன்மையும் செய்ய முடியாது.

இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றவும் முடியாது. இணைவைப்பு என்ற மாபாதகச் செயலை செய்துவிட்டதால் இவர்களுக்காகப் பரிந்து கூட இறைவனிடம் ஈஸா (அலை) அவர்கள் பேச மாட்டார்கள்.

நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.

(அல்குர்ஆன்: 5:117)

காப்பாற்றுவார்கள் என்று இவர்கள் யாரை நினைத்தார்களோ அவர்கள் மறுமையில் கைகழுவி விடுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன்: 35:14)

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில் எனது அடியார்களை நீங்கள்தான் வழி கெடுத்தீர்களா? அவர்களாக வழி கெட்டார்களா? என்று கேட்பான். நீ தூயவன் உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய்.

(உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர் என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் பொய்யெனக் கருதினார்கள். தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையை சுவைக்கச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 25:17-19)

அல்லாஹ்வையன்றி நீங்கள் இணைகற்பித்தவை எங்கே என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும். எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான்.

(அல்குர்ஆன்: 40:73)

நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக இருந்த சிலர் மறுமையில் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் போது அவர்களை நபியவர்களால் காக்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மறுமை நாளில்) என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள் என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்) ததி-ருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள்.

அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா அலை அவர்கள்) கூறியதைப் போல், நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்.

மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய் என்னும் (அல்குர்ஆன்: 5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 3349)

அனுமதி பெற்றவரே பரிந்துரைக்க முடியும்

அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்பவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மக்களிடத்தில் இல்லை. பரிந்துரையாளர்கள் என்று மக்கள் முடிசெய்பவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்ய முடியாது.

இந்த அதிகாரத்தை அல்லாஹ் தன் கைவசத்தில் வைத்திருக்கிறான். மறுமையில் அல்லாஹ் யாருக்கு பரிந்துரை செய்வதற்கு அனுமதி அளிக்கிறானோ அவர்தான் பரிந்துரை செய்ய முடியும். மற்றவர்களால் அவனிடத்தில் பேசுவதற்குக் கூட முடியாது. மேலும் அல்லாஹ் விரும்பாத விசயத்தில் யாரும் பரிந்துரை செய்ய இயலாது.

எனவே அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துள்ள அல்லாஹ்விடம் மட்டும் கேட்பதுதான் நியாயமானது. அறிவுப்பூர்வமானது.

அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார்தான் பரிந்து பேச முடியும்? அல்குர்ஆன் (அல்குர்ஆன்: 2:255) அவனது அனுமதியின்றி எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனை வணங்குங்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 10:3)

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.

(அல்குர்ஆன்: 20:109)

யாருக்கு அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது.

(அல்குர்ஆன்: 34:23)

மறுமையில் அல்லாஹ் அனுமதித்தப் பிறகுதான் நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

(மறுமை நாளில்) மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை சிம்மாசனத்திற்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும் என்று (இறைவனின் தரப்பி-ருந்து) சொல்லப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3340)

எனவே அனைத் து அதிகாரங்களையும் பெற்ற வல்ல இறைவன் ஒருவனிடம் மட்டுமே நாம் பிரார்த்தித்து நம் வணக்கத்தை அவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும். நம் நம்பிக்கையை அவன் ஒருவன் மீதே வைத்து அவனையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஓரிறைக்கொள்கையில் வாழ்ந்து

மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள்புரிவானாக!