17) மக்களிடயே நிலவும் இணைவைப்புகள்-4

நூல்கள்: ஏகத்துவமும் இணை வைப்பும்

மார்க்கம் கூறாத முறையில் ஓதிப்பார்க்கக் கூடாது

ஓதிப் பார்ப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் சிலர் அனுமதி கேட்ட போது ஓதிப் பார்க்கும் முறையைத் தன்னிடம் கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள். அதில் குறை ஏதும் இல்லை என்று அவர்கள் அங்கீகாரம் அளித்த பிறகே ஓதிப் பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள். எனவே நம் இஷ்டத்திற்கு ஆதாரமில்லாம் மனதில் தோன்றியவாரெல்லாம் ஓதிப்பார்க்கக் கூடாது. எப்படி ஓதிப்பார்க்க வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. அந்த அடிப்படையில் ஓதிப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அப்போது அம்ர் பின் ஹஸ்ம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தேள் கடிக்காக ஓதிப் பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்தது. (ஆனால்,) தாங்களோ ஓதிப் பார்க்க வேண்டாமெனத் தடை விதித்து விட்டீர்கள்! என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வர்கள் ஓதிப்பார்த்து வ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் அவ்வாறே பயனளிக்கட்டும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 4226)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான முறையில்) ஓதிப் பார்க்கிறவர் அல்லது சூடுபோட்டுக் கொள்பவர் (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கை வைப்பதை விட்டும் விலகி விட்டார்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஃபா (ரலி)

(திர்மிதீ: 1980)

சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம்

நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டி விட்டது. அப்போது அக்குலத்தார் (நபித்தோழர்களிடம் வந்து) உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப் பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? என்று கேட்டனர்.

அதற்கு நபித்தோழர்கள், நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன்வரவில்லை. ஆகவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்க மாட்டோம் என்று கூறினர். உடனே, நபித் தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித் தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார்.

உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டு வந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காத வரை இதை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு அல் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிப் பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித்தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 5736)

112, 113, 114 ஆகிய அத்தியாயங்கள்

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உட-ன் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 5017)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(புகாரி: 4439)

நபியவர்கள் கற்றுக்கொடுத்த பிரார்த்தனைகள்

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக் கொள்ள வேண்டும்.

நானும் ஸôபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸôபித் (ரஹ்) அவர்கள் அபூஹம்ஸôவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன் என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப் பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா? என்று கேட்டார்கள்.

ஸாபித் (ரஹ்), சரி (அவ்வாறே ஓதிப் பாருங்கள்) என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று கூறி ஓதிப் பார்த்தார்கள்.

(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ஸýஹைப் (ரஹ்)

(புகாரி: 5742)

உஸ்மான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) என்னை அழிக்கின்ற அளவிற்கு எனக்கு வ- ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலி ஏற்பட்ட இடத்தில்) ஏழு முறை தடவி அவூது பிஇஸ்ஸதில்லாஹி வகுத்ரதிஹீ மின் ஷர்ரீ மா அஜிது என்று கூறு என்று சொன்னார்கள்.

பொருள் : அல்லாஹ்வின் கண்ணியத்தின் பொருட்டாலும் அவனது ஆற்றலின் பொருட்டாலும் நான் அடைந்த தீங்கிலிருந்து (அவனிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன். நான் இவ்வாறு கூறினேன். எனக்கிருந்த வலியை அல்லாஹ் போக்கினான். எனது குடும்பத்தார்களுக்கும் மற்றவர்களுக்கும் இவ்வாறு செய்யுமாறு நான் ஏவிக் கொண்டே இருக்கிறேன்.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி)

(மாலிக்: 1479)

முகஸ்துதி சிறிய இணைவைப்பாகும்

பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக நல்ல காரியங்களைப் புரிவதும் இணைவைப்பாகும். ஆனால் இது சிறிய இணைவைப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதையும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

எனது சமூகத்தார் விசயத்தில் இணைவைப்பை நான் அஞ்சுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே உங்களுக்குப் பிறகு உங்கள் கூட்டத்தார்கள் இணைவைப்பார்களா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம். இவர்கள் சூரியனையோ சந்திரனையோ கல்லையோ சிலையையோ வணங்க மாட்டார்கள். மாறாக (பிறருக்கு) காட்டுவதற்காக நற்காரியங்களைப் புரிவார்கள். (இதுவும் சிறிய இணைவைப்பாகும்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) .

(அஹ்மத்: 16498)

உங்கள் விசயத்தில் நான் மிகவும் அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதுதான் முகஸ்துதி. மறுமை நாளில் மக்களுடைய செயல்பாடுகளுக்கு கூகொடுக்கப்படும் போது இந்த உலகத்தில் யாருக்காக நீங்கள் நற்காரியங்களைச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். உங்களுக்குக் கூலி அவர்களிடம் உள்ளதா என்று பாருங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் ; மஹ்மூத் பின் லபீத் (ரலி)

(அஹ்மத்: 22523)

பெயரில் இணைவைப்பு இருக்கக் கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஷாஜஹான் (உலகின் அரசன்)‘ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்படுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்துச் சூட்ட வேண்டும். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

(புகாரி: 6205)

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது.

அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானத்தின் தந்தை என குறிப்புப் பெயர் வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விசயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்து கொள்வார்கள்.

(ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பு வழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷ‚ரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷ‚ரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷ‚ரைஹ் (ஷ‚ரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஃ (ரலி)

(நஸாயீ: 5292)

அறியாமைக் காலத்தில் என்னுடைய தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பர் : அப்துர் ரஹ்மான் (ரலி)

(அஹ்மத்: 16944)