07) மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது
மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர்கள் கூறுவார்கள்.
ஜின்களுக்கு மறைவான ஞானம் கிடையாது
ஜின்கள் பெயரில் மக்களைச் சுரண்டுவதற்காக பலர் அல்லாஹ்விற்கு நிகரான தன்மைகள் ஜின்களுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். இதுவெல்லாம் இணைவைப்பாகும். சுலைமான் (அலை) அவர்கள் இறந்தது கூடத் தெரியாமல் ஜின்கள் இருந்தன. எனவே ஜின்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்)தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
இறைத் தூதர்களுக்கும் மறைவான ஞானம் கிடையாது
ஆதம் (அலை) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லாத காரணத்தினால்தான் சைத்தானுடைய சதியை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. சைத்தான் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து போனார்கள். மறைவான ஞானம் இருந்திருந்தால் சைத்தான் பொய் சொல்கிறான் என்பதை அறிந்து இறைக் கட்டளையை மீறியிருக்க மாட்டார்கள்.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான்.
தனக்கு மறைவான ஞானம் கிடையாது என்று நூஹ் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.
என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன் (எனவும் நூஹ் கூறினார்.)
இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடக் கூடாது என்ற ஞானம் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இல்லாத காரணத்தினால் இணைவைத்துக்கொண்டிருந்த தன் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று இறைவன் உணர்த்திய போது அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். இதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.
இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.