19) முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்
முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்
முதலில் பெரியவர்களுக்கே முன்னுரிமை
அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ”பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக் கொண்டிருந்தவாறு கனவு கண்டேன். அப்போது இரண்டு மனிதர்கள் (பல்துலக்கும் குச்சி வேண்டி) என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரை விடப் பெரியவர். அவர்களில் சிறியவருக்கு அக்குச்சியை நான் கொடுத்தேன். அப்போது ‘பெரியவருக்கு முதலில் கொடுங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. எனவே அதை நான் பெரியவரிடத்தில் கொடுத்தேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
சிறியவர்தான் முதலில் பெரியவருக்கு ஸலாம் கூற வேண்டும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும்.
அறிவிப்பவர் ; அபூ ஹுரைரா(ரலி)
தொழவைப்பவர் தனக்கு பின்னாலுள்ளவர்களைக் கவனித்தே
தொழவைக்க வேண்டும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களிலுள்ளனர். தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்.’
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
பெரியவர்களை வீட்டிற்க்குச் சென்று சந்தித்தல்
நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் குறைவாகவே நரைமுடிகள் இருந்தது. ஆனால் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் நபியவர்களை விட வயதில் குறைந்தவர்கள் என்றாலும் மருதாணியாலும், ‘கத்தம்” என்னும் இலைச்சாயத்தாலும் (நரையை மறைக்க) சாயம் பூசிக் கொண்டார்கள். மக்கா வெற்றியின் போது அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான அபூ குஹாஃபாவை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் இந்த வயதானவரை நீங்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் நான் வந்து அவரை பார்த்திருப்பேன் என்று அபூ பக்ர் (ரலி) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாகக் கூறினார்கள். பின்பு (அபூகுஹாஃபா) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரது தலைமுடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெண்மை நிறமாக இருந்தது. அப்போது நபியவர்கள் இதை ஏதேனும் சாயம் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)