நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ளார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்று கூறும் கபர் வணங்கிகள் தங்களது வாதத்திற்குச் சான்றாக பின்வரும் செய்தியைக் கூறுகின்றார்கள்.
எவரேனும் ஒருவர் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தி(அபூதாவூத்: 2041),(அஹ்மத்: 10815), பைஹகியின் தஃவாதுல் கபீர்-178 உள்ளிட்ட நூற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் மீது ஸலாம் சொல்லும் போதெல்லாம் அவர்களுக்கு உயிர் திரும்ப வழங்கப்படுகிறது என்றால், உலகத்தில் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் தூதர் மீது யாரேனும் ஒருவர் ஸலாம் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்.
எனவே, அல்லாஹ்வுடைய தூதர் தனது கப்ரில் எப்பொழுதும் உயிரோடு தான் உள்ளார்கள் என்று கப்ர் வணங்கிகள் தங்களது வாதத்தை இந்த செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.
இச்செய்தியின் கருத்திலும் கோளாறு இருக்கிறது; அறிவிப்பாளர் தொடரிலும் குறை இருக்கிறது.
முதலில் அறிவிப்பாளர் தொடர் ரீதியான குறையைப் பார்ப்போம். இந்தச் செய்தி நபியவர்களிடமிருந்து பின்வரும் அறிவிப்பாளர் தொடரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
1. அபூஹுரைரா (ரலி)
2. யஸீத் இப்னு அப்தில்லாஹ் பின் குஸைத்
3. அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத்
4. ஹயாத்
5. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ
6. முஹம்மது பின் அவ்ஃப்
இவர்களில் அபூஹுரைரா (ரலி) நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி ஆய்வு செய்யத் தேவையில்லை. அவருக்கு அடுத்து வரக்கூடிய ஐந்து நபர்களில் அபூஸக்ர் ஹுமைத் பின் ஸியாத் என்பவரைத் தவிர மற்ற அனைவரும் நம்பகமானவர்கள்.
அபூஸக்ர் என்பவரைப் பற்றி இமாம்களின் விமர்சனம் நம்பகமானவர் என்றும் பலவீனமானவர் என்றும் இருவிதமாக வந்துள்ளது.
இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று இமாம் அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் நம்பகமானவர். இவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், இவர் பலவீனமானவர் என்றும், இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும் (வேறுபட்ட விமர்சனங்களை) யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தஹ்தீபுல் கமால் 7/368)
இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹம்மாத் கூறியுள்ளார். (தஹ்தீபுல் கமால் 7/370)
இமாம் தாரகுத்னியும், இப்னு ஹிப்பானும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள்.
(தஹ்தீபுத் தஹ்தீப் 3/37)
இவர் என்னிடத்தில் ஹதீஸ் விஷயத்தில் நல்லவர். அவரிடத்தில் இரண்டு ஹதீஸ்களே மறுக்கப்பட்டுள்ளது என்று இப்னுஅதீ கூறியுள்ளார்.
பிறகு மற்றொரு இடத்தில் கூறும் போது அவர் பலவீனமானவர் என்று கூறினார். (மீஸானுல்இஃதிதால்3/612)
ஹுமைத் பின் ஸியாத் (ஸியாதின் மகன் ஹுமைத்) என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹாதிம் பின் இஸ்மாயீல் இவரது பெயரை ஹுமைத் பின் ஸக்ர் (ஸக்ருடைய மகன் ஹுமைத்) என்று கூறுகிறார். ஆனால் அவர் ஹுமைத் பின் ஸியாத் அபூ ஸக்ரு தான். ஹுமைத் பின் ஸக்ரு இல்லை என்று இப்னு ஹிப்பான் தனது ஸிக்காத் (6/189) எனும் நூலில் கூறியுள்ளார்.
ஹுமைத் பின் ஸியாதுடைய பெயர் ஹுமைத் பின் ஸக்ர் என்றும், ஹம்மாத் பின் ஸியாத் என்றும் கூறப் பட்டுள்ளது.
(ஷரஹ்(முஸ்லிம்: 3)/117)
ஹுமைத் பின் ஸக்ர் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் இமாம் கூறியுள்ளார்.
மேலும் இவர் பலமானவர் இல்லை என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அல்லுஅஃபா வல் மத்ரூகீன் 1/238)
மேற்கூறப்பட்ட விமர்சனங்களிலிருந்து ஹுமைத் பின் ஸியாதுடைய பெயரிலும் குழப்பம் இருக்கிறது. அவரைப் பற்றிய விமர்சனங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
மேலும் இந்தச் செய்தியை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
இது போன்று கருத்து வேறுபாடுள்ள நபர் ஒரு செய்தியைத் தனித்து அறிவித்தால் அச்செய்தி முதன்மை ஆதாரமாக எடுக்கின்ற அளவுக்கு ஆதாரப்பூர்வமானதாகக் கொள்ள முடியாது.
இது அறிவிப்பு ரீதியாக உள்ள குறையாகும்.
இந்தச் செய்தியில் கருத்து ரீதியில் உள்ள தவறு என்னவென்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து மனிதர்களும் தங்களது இறப்பிற்குப் பின் பர்ஸக் எனும் திரைமறைவு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வாழ்க்கைக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.
அங்குள்ளவர்கள் இங்குள்ளவர்களை அறிய முடியாது. இங்குள்ளவர்கள் அங்குள்ளவர்களை அறிய முடியாது. இப்படிப்பட்ட மறைமுகமான வாழ்க்கையை இறைவன் இறந்து விட்ட அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றான்.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்பு! என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
பர்ஸக் எனும் வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அப்படியிருக்க யாரேனும் ஸலாம் சொல்லும் போது நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ரூஹைத் திரும்ப வழங்குவதாக ஏன் இச்செய்தி கூற வேண்டும்?
பர்ஸக்கில் ஏற்கனவே உயிருடன் இருக்கின்ற அல்லாஹ்வுடைய தூதருக்கு இறைவன் மீண்டும் உயிரை வழங்குவதாக வருவது இந்த ஹதீஸில் உள்ள கருத்துப் பிழையாகும்.
இவ்வாறு முரண்படும் விதமாக அல்லாஹ்வுடைய தூதர் நிச்சயமாக கூற மாட்டார்கள்.
ஒரு வாதத்திற்கு இறைவன் ரூஹைத் திரும்ப வழங்குவதாக இச்செய்தியில் குறிப்பிப்பட்டிருப்பது பர்ஸகில் இருப்பதைப் போன்ற ரூஹ் அல்ல. இவ்வுலகில் செயல்படுவதைப் போன்ற உயிர் நபியவர்களுடைய உடலுக்கு வழங்கப்படுகிறது என்று அவர்கள் கூறுவார்களேயானால்,
அல்லாஹ்வுடைய தூதர் நாம் சொல்லும் ஸலாமைச் செவியுற வேண்டும்.
செவியுற்றது மட்டுமல்லாமல் நமக்குப் பதில் ஸலாம் சொல்ல வேண்டும்.
அவர்கள் சொல்லும் ஸலாம் நமக்குக் கேட்க வேண்டும். இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றதா என்றால் இல்லை.
நபியவர்களுடைய உடலுக்கு இறைவன் ரூஹை திரும்ப வழங்கி விட்டான் என்றால் அவர்கள் மண்ணறையில் அடங்கியிருக்கத் தேவையில்லை சாதாரணமாக எழுந்து நடமாடலாம், இவ்வுலகில் இஸ்லாத்தின் பெயரால் மக்கள் செய்யும் அனாச்சாரங்களைத் தடுத்து நிறுத்தலாம்.
இவ்வாறு நடைபெறுகின்றதா? இல்லை.
இந்த அடிப்படைகளில் இச்செய்தி கருத்து முரண்பாடு மிக்கதாக இருக்கிறது. மேற்சொன்ன விதத்தில் அறிவிப்பாளர் ரீதியாகவும் விமர்சனம் உள்ளது.
எனவே இந்தச் செய்தி இவர்களின் கருத்திற்கு துளியும் ஆதாரமாகாது.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு எதிர் தரப்பினர் பின்வரும் செய்தியையும் சான்றாகச் சமர்ப்பிக்கின்றார்கள்.
பூமியில் சுற்றித்திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமுதாயத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்தி வைக்கின்றார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த செய்தி(நஸாயீ: 1282),(அஹ்மத்: 4320)உட்பட பல நூற்களில் இடம்பெற்றிருக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
அல்லாஹ்வுடைய தூதரின் மீது மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார்கள் என்றால் அல்லாஹ்வுடைய தூதர் மண்ணறையில் உயிரோடு தானே இருக்கிறார்கள் என்று தங்களது வாதத்தை இந்தச் செய்தியைக் கொண்டு நிறுவுகிறார்கள்.
வானவர்கள் மக்களின் ஸலாமை நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று தான் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நாம் ஏற்கனவே சொன்னது போல் பர்ஸக்கில் அல்லாஹ்வுடைய தூதர் உட்பட அனைவரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
அங்கு வாழ்கின்ற அல்லாஹ்வுடைய தூதருக்கு மக்கள் சொல்லும் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸின் கருத்து தருகிறது.
பர்ஸக்கில் ஷஹீத்கள் பறவை வடிவில் அல்லாஹ்வின் அர்ஷைச் சுற்றி வருவார்கள் என்று ஷஹீத்களுக்கு எப்படி ஓர் தனிச்சிறப்பை இறைவன் வழங்கியிருக்கின்றானோ, அதுபோன்று பர்ஸக்கில் வாழும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தின் ஸலாமை வானவர்கள் எடுத்துச் சொல்வது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பாகும்.
இவ்வாறு விளங்குவதுதான் எதார்த்தமானதாகும். இதைத்தான் இந்த ஹதீஸின் கருத்து தருகின்றதே தவிர இந்த உலகத்தில் கப்ரில் அல்லாஹ்வுடைய தூதர் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, இந்தச் செய்தியும் அல்லாஹ்வுடைய தூதர் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது என்பது நிரூபனமாகி விட்டது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் உள்ளார்கள் என்று வாதிடுபவர்கள் பின்வரும் செய்தியை யும் ஆதாரமாகக் காண்பிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடுகிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
இச்செய்தி முஸ்னதுல் பஸ்ஸார்-1925 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவராவார்.
இவர் பலமானவர் இல்லை என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் ஆதாரமாக எடுக்கத் தகுந்தவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுல் கமால் 18/275).
இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்படக்கூடியவர், செய்திகளை மாற்றியறிவிப்பவர். மேலும் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப் படும் செய்திகளை அறிவிப்பார். இன்னும் இவர் விடப்படுவதற்குத் தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
(மஜ்ரூஹீன் 2/160)
எனவே, இந்தச் செய்தி இந்த அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவரால் பலவீனமடைகிறது.
இவரை ஒரு சிலர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும். இவரின் மீதும் குறையும் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால், நிறையை விட குறை முற்படுத்தப்படும் என்ற ஹதீஸ்கலை விதியின் படி இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்குச் சரியான வலுவான எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இறுதி நாள் வரை அவர்களால் சமர்ப்பிக்கவும் இயலாது.