வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?

கேள்வி-பதில்: வியாபாரம்

வேலை பார்க்கும் கம்பெனிக்கு வாங்கி கொடுக்கும் பொருட்களில் கமிஷன் வைக்கலாமா?

நீங்கள் இவ்வாறு கமிஷன் வாங்குவது நிர்வாகத்திற்குத் தெரிந்து அவர்கள் சம்மதித்தால் வாங்கிக் கொள்ளலாம். அது உங்கள் கம்பெனியினர் உங்களுக்குத் தருகின்ற அன்பளிப்பாக ஆகிவிடும். ஆனால் கம்பெனியினருக்குத் தெரியாமல் கமிஷன் வாங்குவதற்கு அனுமதி இல்லை.

அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்)அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளிலிருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்” என்றுகூறினார்கள்.

பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, “இறைவா, நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மும்முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் – அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி),

நூல் –(புகாரி: 2597)

இந்த ஹதீஸில் ஸகாத் பொருள் குறித்துக் கூறப்பட்டாலும், அதை வசூலிக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர், தமக்கென்று அன்பளிப்பு வழங்கப்பட்டது என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தால் இது கிடைத்திருக்குமா என்று கேட்கின்றார்கள். இந்த அடிப்படையில் கமிஷன் உங்களுக்கென்று வழங்கப்பட்டாலும்,அது அந்தப் பொருளை வாங்கியதற்காகத் தான் வழங்கப்படுகின்றது. எனவே அந்தக் கமிஷனும் கம்பெனிக்குச் சொந்தமானது தான். கம்பெனியினர் சம்மதிக்காத வரை அதைவாங்கிக் கொள்ள உங்களுக்கு அனுமதியில்லை.

(குறிப்பு: 2003 ஜுன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)