பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா?
பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா?
நிழ்ச்சி தான் ஹராம். உணவு அல்ல.
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது.
அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை ஒருவர் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.
நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.
பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், “இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.