44) கருணை நாயனின் காருண்ய மார்க்கம்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

44) கருணை நாயனின் காருண்ய மார்க்கம்

இஸ்லாம் கூறுகிற அறிவுரைகள் முதல் கட்டளைகள் வரை அனைத்துச் செய்திகளுமே மனித நேயத்தையும் மனித குல நன்மையையுமே அடிப்படையாகக் கொண்டவை. மனிதர்களுக்குத் தீங்களிக்கிற எந்தவொன்றையும் இஸ்லாத்தில் பார்க்க முடியாது.

நிகரற்ற அன்புடையோன்

இஸ்லாமிய மார்க்கம் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிய மார்க்கம். அந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொண்டால் அதிலிருந்தே அவன் வழங்கிய மார்க்கத்தையும் தெரிந்து கொள்ள லாம்.

மனிதர்கள் தாம் செய்யும் எல்லா காரியத்தையும் இறை நாமத்தோடு துவக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. அதற்காக கற்றுத் தரப்பட்ட வாக்கியமே இறைவனின் இனிய பண்பை உலகிற்கு எடுத்துச் சொல்லி விடும்.

(அல்குர்ஆன்: 6:54)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். இதுவே அந்த வாக்கியம். இறைவன் அருளும் அன்பும் நிறைந்தவன். கனிவும் கருணையும் கொண்டவன். இப்படித்தான் இஸ்லாம் இறைவனை அறிமுகப்படுத்துகிறது.

அகில உலகிற்கும் விதிகளை உண்டா?க்கும் இறைவனுக்கு கருணையு டையவனாகத் திகழ வேண்டுமென்று தனக்குத்தானே ஒரு சட்டமியற்றிக் கொண்டதாகக் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 5:89)

இந்த விதியை அவன் கடைப் பிடிக்கிறான் என்பதை அவனால் வழங்கப்பட்ட சட்டங்கள் அனைத் திலும் பார்க்க முடியும்.

நம்முடைய பெயரை யாரேனும் தவறாகப் பயன்படுத்தி விட்டால் நமக்கு கோபம் வரும். இறைவனின் பெயரில் சத்தியம் செய்யும் மனிதன் தவறுதலாக கவனமற்று செய்து விட்டால் அதற்காக அல்லாஹ் அவரைக் குற்றம் பிடிக்க மாட்டேன் என்கிறான்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)

(முஸ்லிம்: 1952) (திர்மிதீ: 654) (அபூதாவூத்: 2046) (இப்னு மாஜா: 1663) (அஹ்மத்: 8773)

பகல்பொழுது முழுவதும் பசியோடும் பட்டினியோடும் இல்லறத்தைத் தவிர்த்தும் மேற்கொள்ளப்படும் வழிபாட்டிற்குப் பெயர் நோன்பு. நோன்பிருக்கும் ஒருவர் மறதியாக எதையும் சாப்பிட்டுவிட்டால் அதற்காக அவர் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அல்லாஹ் அவரைத் தண்டிக்க மாட்டேன் என்கிறான்.

(அல்குர்ஆன்: 5:89)

நோன்பை முறித்துவிட்டதாக எண்ணி அவர் தன்னை நொந்து கொள்ளவும் தேவையில்லை. ஏனெனில் அவருக்கு மறதியைக் கொடுத்து உணவளித்தவன் இறைவன். எனவே அவர் தனது நோன்பைத் தொடரட்டும். வயிறு முட்ட சாப்பிட்டிருந் தாலும் இவருக்கு நோன்பின் நன்மையை இறைவன் குறைக்க மாட்டான் என்கிறார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

இறைவனுக் குரிய வழிபாட்டில் தவறிழைத்துவிட்ட மனிதன் அந்த பாவத்திலிருந்து விடுபட சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். ஒரு வணக்கத்திற்கு பரிகாரம் இன்னொரு வணக்கம் என்று சொன்னால் நம் உள்ளம் அதை ஒத்துக் கொள்கிறது. ஆனால் இறைவனோ ஏழைக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை கொடுங்கள், அடிமையை விடுதலை செய்யுங்கள் என்று மனித நேயச் செயல்களைசக் கட்டளையிடுகிறான்.

(அல்குர்ஆன்: 7:157)

இறைவனின் கருணைக்கு இதுபோல எண்ணற்ற பல சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இறைவன் எப்படி கருணை வடிவாக இருக்கிறானோ, அதைப் போலவே அவன் தந்த மார்க்கமும் அமைந்திருக்கிறது.

சிரமமற்ற சீறிய நெறி

மார்க்கத்தைக் கற்றுத் தர வந்த மாநபியின் செயல் திட்டத்தைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அவர்களுக்கு நன்மையைப் போதிப்பார்; தீமையை விட்டும் தடுப்பார்; தூயதை அனுமதித்து, தீயதை விட்டும் விலக்குவார்; அவர்களின் சுமையையும் அவர்கள் மீதான விலங்குகளையும் அவர்களை விட்டும் அகற்றுவார் என்கிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி)

(புகாரி: 1150) (முஸ்லிம்: 1306) (நஸாயீ: 1625) (அபூதாவூத்: 1117) (இப்னு மாஜா: 1361) (அஹ்மத்: 11548)

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)

(புகாரி: 671, 5465) (முஸ்லிம்: 867) (இப்னு மாஜா: 925)

அதனால்தான் இறைவனுக்குச் செய்யும் வழிபாட்டின் பெயரால் கூட மனிதன் தன்னை வருத்திக் கொள்ளக் கூடாது என்கிறது இஸ்லாம்.

பசி வயிற்றைக் கிள்ளும் போது பாங்கு சொல்லப்பட்டால், உண்பதற்கே முன்னுரிமை. தூக்கத்தில் தள்ளாடி விழும் நிலை வந்தால், தொழுகையைவிட தூக்கத்திற்கே முதலிடம் என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

(அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி)

(புகாரி: 1865, 6701) (முஸ்லிம்: 3100, 3101, 3102) (நஸாயீ: 3792, 3794) (அபூதாவூத்: 2871) (திர்மிதீ: 1457) (அஹ்மத்: 11597, 11684)

தன்னை வருத்தி இறைவனுக்கு வழிபாடு செய்ய முயன்ற பலரையும் தடுத்து நிறுத்தினார்கள். நடக்க முடியாத பெரியவர் ஒருவர், நடந்து சென்று ஹஜ் செய்ய புறப்பட்டார்.

(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 6704) (அபூதாவூத்: 2870) (இப்னு மாஜா: 2127))

வெயிலில் நின்று இறைவனுக்கு வேண்டுதல் செய்தார் ஒருவர்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)

(புகாரி: 6000, 6469) (முஸ்லிம்: 4942, 4943, 4944) (திர்மிதீ: 3464) (இப்னு மாஜா: 4283) (அஹ்மத்: 8063))

இதனால் உங்கள் உடலை வருத்திக் கொள்வதைத் தவிர யாருக்கு என்ன நன்மை என்று எடுத்துச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களை பண்படுத்தினார்கள்.

இப்படி இஸ்லாம் கற்றுத் தருகிற வாழ்வுமுதல் வழிபாடுவரை அனைத்துச் செய்திகளும் மனிதர்களின் இயல்போடு இணைந்தது. அவன் சிரமப்படக் கூடாது என்ற கரிசனத்தையும், எளிமையானது என்ற இலக்கணத்தையும் உள்ளடக்கியது. இஸ்லாத்தின் எந்தக் கட்டளையை எடுத்து ஆய்வு செய்தாலும், இந்த உண்மையைக் கண்டு கொள்ளலாம்.

உரிமை மீறலும் – உயர்ந்தோனின் மார்க்கமும் படைத்த இறைவனே தன் படைப்பாகிய மனிதன்மீது இத்தனைப் பரிவையும் பாசத்தையும் காட்டும்போது படைக்கப்பட்ட மனிதர்கள் ஒருவர் இன்னொருவர் மீது அத்துமீறுவதையும் அவமரியாதை செய்வதையும் உடலுக்கும் உயிருக்கும் கேடு செய்வதையும் இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

ஒருநாளும் திட்டியறியாத தன் மகனை பக்கத்து வீட்டுக்காரன் தீர்த்துக் கட்ட திட்டமிட்டால் எந்தத் தந்தைதான் ஏற்றுக் கொள்வான்? என் மகனை நான் ஏசியதுகூட இல்லை. எனக்கில்லாத உரிமையை உனக்குத் தந்தது யார் என்று கொந்தளிக்கமாட்டாரா?

ஒரு தந்தைக்கு மகன் மீதிருக்கும் உரிமையையும் பாசத்தையும்விட நம்மைப் படைத்த இறைவனுக்கு நம் மீதான உரிமையும் கருணையும் அதிகமல்லவா? இறைவன் தன்னிடம் உள்ள இரக்கத்தை நூறு பங்குகளாக்கி அதில் ஒன்றே ஒன்றைத்தான் உலகிற்கு வழங்கியுள்ளான். ஒட்டுமொத்த உலகிலும் காணப்படும் அன்பின் வெளிப்பாடுகள் அனைத்தும், அந்த ஒன்றிலிருந்தே வெளிப்படுகிறது என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

(அல்குர்ஆன்: 16:61)

அப்படியானால், இதைவிட 99 மடங்குகளை அதிகம் கொண்டிருக்கும் இறைவனின் கருணை எப்படியிருக்கும்?

அதனால்தான் தன் மகன் செய்யும் பாவத்தை ஒரு தாய் மன்னிப்பதை விட அதிகமாக இறைவன் மன்னிக்கிறான். பாவம் செய்துவிட்ட என் அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்று அறை கூவலிட்டு அழைக்கிறான்.

மனிதர்களின் அநீதிக்காக அல்லாஹ் அவர்களை தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் விட்டுவைக்க மாட்டான். குறிப்பிட்ட காலக் கெடு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கெடு வந்ததும் முந்தாமல் பிந்தாமல் (காரியம் முடிக்கப்படும்) என்கிறான்.

(அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி)

(திர்மிதீ: 2551) (நஸாயீ: 4909) (அஹ்மத்: 8575)

தண்டிக்கத் தகுதியும் உரிமையும் உடைய அல்லாஹ் மனிதன்மீது கொண்ட கிருபையின் காரணமாக அதைத் தள்ளிப் போடுகிறான். ஆனால் நியாயமான சில கட்டங்களைத் தவிர மனிதன் மீது எந்த உரிமையும் இல்லாத ஒருவன் இன்னொருவனைத் தாக்குவதை எப்படி இறைவன் பொறுத்துக் கொள்வான்?

நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் இந்த பூமிப் பந்தையே ஈ, எறும்புகள் கூட இல்லாத சுடுகாடாக, புற்பூண்டுகள் ஏதுமற்ற பொட்டல் காடாக மாற்றி விடும் ஆற்றல் படைத்த இறைவன், தினம் தினம் நாம் செய்யும் தவறுகளைக் கண்டும் கனிவோடு இருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கருணையாளனாக இருக்க வேண்டும்.

இதற்கான சான்றுகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் நிரம்பி வழிகிறது.

பிறருடைய உயிருக்கும் பொரு ளுக்கும் யார் பாதுகாப்பளிக்கிறாரோ அவரே இறை நம்பிக்கையாளர் ஆவார்.

ஒரு விசுவாசி பிறரைக் கொலை செய்யும்போது இறை நம்பிக்கையாளனாக இருக்க மாட்டான்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)

(புகாரி: 6809)

நியாயமற்ற முறையில் யாரையும் கொலை செய்வது பெரும் பாவமாகும்.

(அல்குர்ஆன்: 5:32)

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ இல்லாமல் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்தால், அவர் எல்லா மனிதர்களையும் கொன்றவரைப் போலாவார்.

நபிகளாரின் காலத்தில் யாரேனும் இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால், கீழ்க்காணும் உறுதிமொழியை நபியின் முன்னால் மொழிய வேண்டும். அப்போதுதான் அவர் இஸ்லாத்திற்குள் நுழைய முடியும். அச்சொற்கள் அனைத்துமே மகத்தான மனிதநேயச் செய்திகளாகவே அமைந்திருக்கின்றன.

இறைவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டோம், திருட மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், எவர்மீதும் அவதூறு சொல்ல மாட்டோம், நல்லறங்கள் எதிலும் உங்களுக்கு மாறு செய்ய மாட்டோம், அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்ய மாட்டோம்.

பிற மனிதர்களுக்கு கேடு செய்தவன் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் மதிப்பற்ற மறுமை நாளில் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பான்; என்கிறார்கள் நபிகள் நாயகம் அவர்கள். ஒரு மனிதன் தனக்காக செய்து கொண்ட தொழுகை, நோன்பு, தான தர்மம் போன்ற அனைத்து நல்லறங்களையும் அவனிடமிருந்து பிடுங்கி அவனால் பாதிக்கப்பட்டவருக்கு இறைவன் கொடுத்து விடுவான்.

ஒருவேளை இவனது நன்மைகள் பிறருக்குக் கணக்குத் தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லையெனில் பாதிக்கப்பட்டவனின் பாவங்கள் இவன் தலையில் சுமத்தப்படும். முதலில் தொழுகை நோன்பு என்ற நல்லறங்களோடு சுவனத்தை நோக்கி நடந்து சென்றவன், மனித உரிமைகளுக்குத் தீர்ப்பளிக்கப்பட்ட பின முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவான்.

உலகில் பிறரைத் திட்டியது, அடித்தது, அவதூறு சொன்னது, பிறர் பொருளை அபகரித்தது, உயிரைப் பறித்தது என அனைத்துவிதமான வரம்பு மீறலுக்கும் அங்கே இப்படித் தான் கணக்குத் தீர்க்கப்படும் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கெட்டவன் திவாலாகிப் போனவன் என்று கூறுவதாக இருந்தால் உண்மையில் இவர்தான் திவாலாகிப் போனவர் என்கிறார்கள்.

மனிதர்களின் பார்வையில் தவறாகவே கருதப் படாத ஒரு தவறு புறம். ஒரு மனிதன் இல்லாத நேரத்தில் அவனது குறைகளைச் சொல்லி பிறர் மானத்தையும் மரியாதையையும் விலை பேசி விற்பனை செய்யாத மனிதர்கள் மனித குலத்திலே மிகவும் குறைவு. கேட்டால், நான் என்ன இல்லாததையா சொல்லி விட்டேன். என்று ஒற்றை வரியில் அதற்கு நியாயம் கற்பிப்பார்கள்.

மக்களால் பாவமற்றதாகக் கருதப் படும் இந்த பாவத்தைச் செய்தவர்கள் மறுமையில் செம்பாலான நகங்களைக் கொண்டு தமது முகத்தைத் தாமே கீறிக் கிழித்துக் கொள்ளும் தண்டனை வழங்கப்படும் என்கிறார்கள்.

அற்பத்திலும் அற்பமாகக் கருதப் படும் புறம் பேசுவதின் நிலையே இதுவென்றால் மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் பாவமெல்லாம் எப்படிப்பட்டவை என்பதை சொல் லவே தேவையில்லை.

மனிதர்கள் உண்டு புசித்து உயிர் வாழ்வதற்காக ஆடு, மாடு, கோழி போன்ற ஏராளமான உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். அவற்றை அறுக்கும் வேளையில் கூட ஜீவகாருண்யத்தைப் பேணச் சொல்கிறது இஸ்லாம்.

கூர்மையற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி அறுத்தால், பிராணிகள் பெரும் அவஸ்தை அனுபவிக்கும் என்பதால், கூர்மையான கத்தியை பயன்படுத்தச் சொல்கிறார்கள்.தலையில் அடித்தோ, வயிற்றில் குத்தியோ, மேலிருந்து தள்ளி விட்டோ கொல்லக் கூடாது. முறையாக கழுத்தில் அறுத்தே கொல்ல வேண்டும்.

இதன் மூலம், மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு சொல்லும் நரம்புகள் துண்டிக்கப்பட்டு மூளை செயலிழந்து விடும். மூளை மயங்கிய பின் உடலில் அதன்பிறகு ஏற்படும் எந்த வலியையும் அவற்றால் உணர்ந்து கொள்ள முடியாது. நவீன அறிவியலில் பல்வேறு சோதனைகளின் மூலம் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அரிய உரை ஒன்றை நிகழ்த்தினார்கள். உலகின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்ட இறைவனால் அபய பூமி என்று பாதுகாப்பும், கண்ணியமும் வழங்கப்பட்ட மக்கா நகரில் வைத்து அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட போர்கள் மூலமாகக் கூட மனித உயிர்களை கொல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட துல்ஹஜ் மாதத்தில் உலக முஸ்லிம்கள் எல்லாம் கொண்டாடி மகிழ்கிற ஹஜ்ஜுப் பண்டிகை நாளில் அந்த உரை ஆற்றப்பட்டது.

வரலாற்றில் நபிகள் நாயகத்தின் இறுதிப் பேருரை என்று அழைக்கப்படும் அவ்வுரையில் நபிகள் நாயகம் அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

உங்கள் உயிர், உங்கள் பொருள், உங்கள் மான மரியாதை அனைத்தும் புனிதமானவையாகும். அந்தப் புனிதம் இந்த ஊரின் புனிதத்தைப் போன்றது. இந்த மாதம் மற்றும் இந்த நாளின் புனிதத்தைப்போல உயர்வானது. (இவற்றின் புனிதத்தை எப்படிப் பேணுவீர்களோ அதே போல பிறருடைய உயிர் பொருள் மரியாதை அனைத்தையும் நீங்கள் பேணிக்கொள்ளுங்கள் என்றார்கள்.