43) போரில் புதுநெறி
43) போரில் புதுநெறி
போரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி குர்ஆன் கூறும் கட்டளைகளைத் தொகுத்துப் பார்த்தால் மனித உணர்வுகள் சாகடிக் கப்படும் போர்க்களத்தில்கூட எப்படிப்பட்ட மனித நேயத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
களத்திற்கு முன்
போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர் என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம்போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான் (களத்தில்) சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். கலகம் கொலையை விடக் கொடியது.
குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.
எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள ஊரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! என்று கூறிக் கொண்டிருக்கிற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (போரைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பினால் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக.அவனே செவியுறுபவன் அறிந்தவன்.
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் கேட்டால், அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவரை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!
உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள்
(ஏகனை) மறுப்போரை நீங்கள் (களத்தில்) சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்! முடிவில் அவர்களை வென்றால், தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்! அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்! அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம். இதுவே (இறைக் கட்டளை).
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்த வசனங்களின் கருத்தை சுருக்கமாகத் தொகுத்துப் பார்த்தால் கீழ்காணும் செய்திகளை அதிலிருந்து நாம் பெறலாம்.
- அமைதியைக் குலைப்பது கொடிய பாவம்.
- அமைதியை நிலை நாட்டவே போர் புரிய வேண்டும்.
- சண்டைக்கு வருவோருடன் மட்டுமே போர் செய்ய வேண்டும்.
- வலியச் சென்று போர் புரியக் கூடாது.
- அநீதி இழைக்கப்பட்டவன் போர் செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போரிட வேண்டும்.
- அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே .
- வீடு, வாசல்களைப் பறித்துக் கொண்டால் மீட்டெடுக்கப் போரிட வேண்டும்.
- சண்டையின்போது தாக்குப் பிடிக்க முடியாமல் எதிரிகள் சமாதானக் கொடி பிடித்தால் அப்போதுகூட அதை ஏற்க வேண்டும்.
- எதிரி யாரேனும் அபயமும் அடைக்கலமும் கேட்டால் மறுக்கக் கூடாது.
- படை பலத்தை பெருக்குவதன் மூலம் போரிடாமலே எதிரிகளை அச்சப்படுத்தி விட வேண்டும்.
எவ்வளவு நியாயமான, சகிப்புத் தன்மையோடு கூடிய சட்டங்களை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பதை, இதனைச் சிந்தித்து பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
களத்தில்
இதேபோன்று களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என நபிகளார் இட்ட கட்டளைகளும் மனித நேசத்தின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுகின்றன.
போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களைக் கொல்லாதீர்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாதீர்கள்!
போரில் ஒப்பந்தங்களை முறிக்கா தீர்கள், போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள், உடல் உறுப்புகளைச் சிதைக்காதீர்கள், குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
எதிரிகள் எதிர்பாராத இரவு மற்றும் அதிகாலைப் பொழுதில் தாக்குதல் நடத்தாதீர்கள்.
போர்க்களத்தில்கூட நம்பிக்கை துரோகம் செய்து விடாதீர்கள்.
யாரையும் தீயிலிட்டு கொலை செய்யாதீர்கள்.
ஏற்படப்போகும் தோல்விக்குப் பயந்து புறங்காட்டி ஓடிவிடாதீர்கள்.
இவையனைத்தும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட போர்ச் சட்டங்கள் ஆகும்.
களத்திற்குப் பின்
போருக்குப் பிறகு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய இஸ்லாத்தின் வழிகாட்டுதல் இதைக்காட்டிலும் அற்புதமானது. உலகில் யார் நடத்தும் போராக இருந்தாலும் செல்வம், பதவி, புகழ், அதிகாரம் என போருக்குப் பின்னர் என்ன கிடைக்கும் என்ற கணக்கின் படியே நடைபெறும்.
இஸ்லாமியப் போர் நெறியில், பின்னர் என்ன கிடைக்கும்? என்பதல்ல. முன்னர் நடந்தது என்ன? என்பதுதான் கணக்கில் கொள்ளப்படும். எதிரிகளின் கடந்த கால கொடுமைகளும் அநீதிகளுமே ஒரு முஸ்லிம் படையை களத்தை நோக்கிக் கொண்டு செல்லும். போர் முடிந்தபிறகு நமக்கு நாடு கிடைக்குமா? செல்வம் கிடைக்குமா? என்ற கணக்கிற்கு இங்கு வேலையே கிடையாது.
அதற்காக போருக்குப் பிறகு கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பொருளல்ல. அவற்றைப் பெருவதற்காக போருக்குச் செல்லக் கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.
போருக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய நன்மை என்று முஸ்லிம்கள் பெறத் துடிப்பதும் துடிக்க வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இறைவனின் திருப்தி. மறுமையில் வெற்றி என்ற ஒன்றே ஒன்றுதான். இதனை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பார்க்கலாம்.
மனிதனின் வாழ்வு குறித்து மறுமையில் விசாரித்து இறைவன் தீர்ப்பளிப்பான். இது இஸ்லாமிய நம்பிக்கை. அதில் ஒரு மனிதரிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.
போரில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மனிதனை அழைத்து உலகில் நீ என்ன செய்தாய்? என்று இறைவன் கேட்பான். அதற்கு அவன் உனக்காகப் போரிட்டு அதிலே என் உயிரையும் அர்ப்பணித்தேன் என்று கூறுவான்.
இல்லை, நீ பொய் சொல்கிறாய். உயிரைக் கொடுத்தது நிஜம். எனக்காகக் என்பது பொய். உலகோர் உன்னை வீரன் என்று புகழ்வதற்காகக் கொடுத்தாய். நீ விரும்பியதைப் போலவே அவர்கள் உன்னைப் புகழ்ந்து விட்டனர். ஆகையால் உனக்கு இங்கே எந்த நன்மையும் இல்லை, செல் நரகத்திற்கு என்று இறைவன் தீர்ப்பளிப்பான்.
போரை வலியுறுத்தும் வசனங்களில் வெறுமனே போர் செய்யுங்கள் என்று கூறாமல் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள் என்றே கூறப்பட்டுள்ளது. போரின் முடிவு வெற்றியோ, தோல்வியோ போராளியின் இலக்கு இறை திருப்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தவர்களைப் போன்றும் ஆகிவிடாதீர்கள், அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிகிறான் என்கிறது திருமறைக் குர்ஆன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
பெருமைக்கான புறப்பாடு அல்லாஹ்வின் பாதையல்ல என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த வசனம்.
உலக ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டு இஸ்லாமியப் படைப் புறப்பட முடியாது. அப்படிப் புறப்பட்டால் அது இஸ்லாமியப் படையாக இருக்க முடியாது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அதனால்தான் உலக வரலாற்றில் வெற்றிக் களிப்பில் நிகழ்ந்த எந்தக் கொடுமைகளும் இஸ்லாமியப் படையின் வெற்றியில் நடைபெறவே இல்லை.
நபிகளாரின் மக்கா வெற்றியை இதற்கு உதாரணம் கூறலாம்.
மக்கா வெற்றி என்பது நபிக்கும் நபித் தோழர்களுக்கும் நினைத்து மறக்கிற சாதாரண வெற்றியல்ல. சொந்த ஊரில் வாழ விடாமல் துரத்தி அடித்த கொடியவர்கள்மீது பெற்ற வெற்றி.
அகதிகளாய் மதினாவிற்கு ஓடிச் சென்ற பிறகும் பத்ர், உஹது என துரத்தி வந்து போர் தொடுத்த போக்கிரிகளின் மீதான வெற்றி. இஸ்லாத்தை ஏற்றதற்காக கவச உடையணிந்து பாலை மணலில் சுட்டுப் பொசுக்கிய வெறியர்கள்மீது பெற்ற வெற்றி.
ஒரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயத்தை சிலை வணக்கக் கூடாரமாக மாற்றி விட்ட பாவிகள் மீது கிடைத்திருக்கும் வெற்றி. கஃபாவில் தொழச் சென்ற நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை போட்டு ஏளனம் செய்த இழிந்தவர்கள் வாழ்ந்த நிலத்தின் மீதான வெற்றி.
கர்வமும், வெற்றியும் தலையைக் கனக்க வைக்கின்ற அளவுக்கு கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி விழாவில் நபிகளார் வெளியிட்ட ஒவ்வொரு அறிவிப்பும், எடுக்கப்பட்ட நடவடிக்கையும், சரித்திரங்கள் சந்தித்திராத அதிசயங் கள்.
கதவுகளைத் தாழிட்டுக் கொண்ட வர் தாக்கப்பட மாட்டார். அபூசுஃப் யானின் வீட்டிற்குள் அடைக்கலம் தேடியவர் பாதுகாப்பைப் பெறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(இவர் அப்போது எதிரிகளின் தலைவராகக் கருதப்பட்டவர்.)
குற்றவாளிகள் பலரும் ஒருவர் பின் ஒருவராக நபிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டனர். நபிகளாரின் தோழரும் பெரிய தந்தையுமான ஹம்ஸாவைக் கொன்ற வஹ்ஷீ இப்னு ஹர்ப் அதற்குக் காரணமான ஹிந்த் பிந்த் உத்பா, கொடிய விரோதி அபூஜஹ்லின் மகன் இக்ரிமா, கஅப் பின் ஜுஹைர், ஹுபார் இப்னு அஸ்வத், உஸைத் இப்னு அயாஸ் என அனைவருக்கும் மன்னிப்பளித்தார்கள்.
மக்கா வெற்றியின் போது நபிகளார் நடந்து கொண்ட விதமே எதிரிகளில் பலருக்கும் மனமாற்றத்தைக் கொடுத்தது. மனமுவந்து இஸ்லாத்தை ஏற்பதற்குக் காரணமாக அமைந்தது.
தோல்வியடைந்த மன்னர்களைத் தூக்கிலிடுதல், விளை நிலங்களை தீயிட்டுக் கொளுத்துதல், பெண்களைக் கவர்தல், பொருட்களைச் சூறையாடுதல், அவமானம் அசிங்கம் என எந்தவகையிலாவது தமது கோப தாபங்களை வெளிப்படுத்துதல், மாற்று மதத்தவராக இருந்தால் அவர்களின் வழிபாட்டுத் தலத்தைக் கூட விட்டு வைக்காமல் தகர்த்தெறிதல்.
இவைகளெல்லாம் நாகரீகம், போர்ச்சட்டம், மனித நேயம் என்று பேசப்படுகிற இன்றுவரைத் தொடர்கிறது. இவையெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கிற காலத்தில் நபிகளார் காட்டிய வழிமுறைகள் இவை.
இதற்குப் பிறகும் கூட இஸ்லாத்தை ஒருவர் விமர்சிப்பாரானால், இதற்கு நிகராக, மனிதகுலத்திற்கு நன்மையைச் சொல்லும் ஒரு கொள்கையை, மதத்தை, வரலாற்றை ஏன் ஒரேயொரு ஆதாரத்தைக் காட்டி விட்டு அதன்பிறகு விமர்சிக்கட்டும்.