40) பயங்கரவாதப் பரிவாரமும் பாவப்பட்ட முஸ்லிம்களும்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)
v4

40) பயங்கரவாதப் பரிவாரமும் பாவப்பட்ட முஸ்லிம்களும்

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றுவிட்ட காரணத்தால் அல்லது அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் போனதால் அவர்களை அப்பாவிகள் என்று கூறிவிட முடியுமா என்றொரு கேள்வி எழலாம்.

நியாயமான கேள்விதான். நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத காரணத்தால் ஒருவன் நிரபராதி ஆகிவிட முடியாது. நாம் முஸ்லிம்களை குற்றவாளிகள் இல்லை என்று கூறுவது அந்த அடிப்படையில் மட்டும் உள்ளதல்ல.

இவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதோடு உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

உண்மைக் குற்றவாளி கிடைத்து விட்டால் சம்பந்தப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவனை நிரபராதி என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

ஒட்டுமொத்தமாக நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களில் எண்ணிச் சொல்கிற ஒன்றிரண்டைத் தவிர்த்துவிட்டு அனேகக் காரியங்களை சங்பரிவார அமைப்பினர்தான் செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம்கள் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படாமல் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட அனைத்து குண்டு வெடிப்புகளையும் இவர்களே திட்டமிட்டு செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்குச் சில…..

2009 செப்டம்பர் 29 ஆம் நாள் மராத்திய மாநிலம் மாலேகானில் தடைசெய்யப்பட்ட சிமி அலுவலகத் திற்கு அருகில் குண்டு வெடித்தது. இராணுவத்தில் மட்டுமே பயன்படுத் தப்படும் சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை மோட்டார் சைக்கிளில் வைத்து வெடிக்கச் செய்திருந்தார்கள்.

இதில் கொல்லப்பட்டவர்கள் அனை வரும் முஸ்லிம்கள் இதற்காக மராத்திய அரசால் கைது செய்யப்பட்டவர்களும் முஸ்லிம்கள். அதைக் கண்டு கொதித்துப் போன முஸ்லிம்கள் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கு தீவிரவாதத் தடுப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. புலணாய்வு அதிகாரிகள் தடய அறிவியல்படி சோதனை செய்து, குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் எஞ்சின் நம்பரைக் கண்டுபிடித்தனர்.

அதன்பிறகு அந்த வண்டியை வைத்து குண்டு வெடிப்பின் வரலாற்றையே கண்டுபிடித்தனர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிராக்யா சிங் என்ற பெண் சாமியார் தான் இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவப்பிரிவான ஏ.பி.வி.பி.யிலும் ஹிந்து ஜாக்ரான் மஞ்ச் என்ற பயங்கரவாத அமைப்பிலும் வி.ஹெச்.பி.யின் மகளிர் பிரிவான துர்கா வாஹினியிலும் அங்கம் வகித்தவர்.

குஜராத் அரசின் நிதி உதவியோடு வந்தே மாதரம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர். ராஜ்நாத் சிங், அத்வானி போன்ற சங்பரிவாரின் மேல்மட்ட நிர்வாகிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். 

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்மூலம் மேலும் பல குற்றவாளிகள் சிக்கினர். ஷ்யாம்லால், தர்மேந்திரா, பைராகி, சியாம்சாரு, சிவநாராயணன் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே சங்பரிவாரின் பல்வேறு கிளை அமைப்பின் உறுப்பினர்கள்.

இராணுவத்தில் மேஜர், கர்னல் எனும் உயர் நிலையில் உள்ள புரோகித், பிரபாகர் குல்கர்னி, உபாத்யாய ஆகிய அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்

வழக்குவிசாரணையை முஸ்லிம்களை நோக்கித் திருப்பு வதற்காக குர்ஆன் ஸ்டிக்கர்கள், ஒட்டு தாடி மற்றும் தொப்பிகள், உருது மொழிப் பிரசுரங்கள் போன்றவற்றை குண்டுவெடிப்பின்போது பயன்படுத்தியுள்ளனர்.

2008ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. முதலில் முஸ்லிம்கள் பக்கம் பார்வை திரும்பியது.தீவிர விசாரணைக்குப் பின் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி. குமார், இலட்சுமி நாராயண சர்மா ஆகியோர்தான் குண்டு வைத்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

  • 2002ல் மோவ் நகர் கோவிலில் குண்டு வெடித்தது. அந்த வழக்கில் வி.ஹெச்.பி. தொண்டர்களே கைதாகி தண்டனையும் பெற்றனர்.
  • 2006ஆம்ஆண்டு நாண்டெட் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரரின் வீட்டில் குண்டு வெடித்து இருவர் பலி. ஐவர் படுகாயம் அடைந்தனர்.

விசாரணையின் முடிவில் ஔரங்காபாத் மசூதியில் வெள்ளிக் கிழமையில் வைப்பதற்காக தயாரித்துக் கொண்டிருந்த குண்டு எதிர்பாராத விதமாக வெடித்து விட்டது என்பது தெரிய வந்தது.

அவர்களின் வீட்டை சோதனையிட்ட போது ஔரங்காபாத் மசூதியை பலகோணத்தில் காட்டும் புகைப்படங்கள் அதற்கான வரைபடம், ஒட்டுத் தாடி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், குண்டு வெடித்த இடத்தில் புலனாய்வு அதிகாரிகள், முஸ்லிம்களுக்கெதிரான ஆதாரங்களைப்பொறுக்கி எடுப்பார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்ததும் வலப்புறத்தில் பாஸ்போர்ட், இடப்புறத்தில் லைசென்ஸ், பக்கத்திலே குர்ஆன் பிரதி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, உருதுமொழிப் பிரசுரங்கள், ஜிகாத் வாசகங்கள் அடங்கிய குறிப்புகள் அனைத்தையும் கொண்டு வந்து சம்பவ இடத்தில் போட்டுவிட்டுத்தான் தீவிரவாதிகள் குண்டு வைப்பார்கள்.

ஏனெனில், காவல்துறை குற்ற வாளியின் அட்ரஸை கண்டுபிடிக்க சிரமப்படக்கூடாது என்ற கரிசனம் போலும்! கூடுதல் தகவல் என்னவென்றால், அட்ரஸை அங்கே போட்டுவிட்டு வீட்டில் அமர்ந்து வீடியோ பார்த்துக் கொண்டிருப்பான் தீவிரவாதி! காவலர்கள், கார் பிடித்து போய், கதவை தட்டி, ஆளைக் கைது செய்து அழைத்து வருவார்கள்.

இந்தக் கதைகளை எல்லாம் நமக்கும் சொல்வார்கள். என்ன நடந்ததென தெரியாமல் நாம் விழிக்கக் கூடாதல்லவா? அதற்காக.!

பாவம் ஓரிடம், பழி வேறிடம் என்பார்களே அதற்கு சங்; பரிவாரங்களால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளையும் அதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் மிகப் பொருத்தமான உதாரணமாகக் கொள்ளலாம்.

கலவரங்களும் கர்த்தாக்களும்

ஏராளமான கலவரங்கள் நம் நாட்டில் நடந்துள்ளன. ஒவ்வொரு கலவரத்தின் பாதிப்புகளையும் தொகுத்து எழுதத் துவங்கினால் ஏடுகள் கொள்ளாது எனும் அளவுக்கு கொடுமைகள் விரியும். ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட அனைத்துக் கலவரங் களிலும் சங்பரிவாரின் கரங்களே சம்பந்தப்பட்டுள்ளன.

இந்த உண்மையை கலவரங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளின் கமிஷன்களும், தனி நபர் ஆய்வறிக்கைகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மனித உரிமை இயக்கங்களும் வெளிக்கொண்டு வந்துள்ளன.

1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்புக்கு மறுநாள் தலை நகர் டில்லியில் மிகப்பெரிய கலவரம் ஒன்று நடைபெற்றது. அதை விசாரித்த மனித உரிமை அமைப்பான P.U.C.L தனது அறிக்கையில் இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தல்ல.

இந்துத்துவா பயங்கரவாதிகளால் மிகச்சரியாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கலவரம் என்று கூறியது.(இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களும் கமிஷன் அறிக்கைகளும் ச.அ.முஹம்மது அலிகான், பக்கம் – 24)

1967ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் ராஞ்சியில் (தற்போது ஜார்கண்ட்) ஒரு வகுப்புக் கலவரம் நடைபெற்றது. இதை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபர் தயாள் கமிஷன் தனது அறிக்கையில் பீஹாரில் ஜனசங்கம் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக நடத்திய கலவரம் என்று குறிப்பிட்டது.

(இ.மு.எ.க.க.அ பக்கம் – 106)

1979 ஏப்ரல் மாதம் பீஹார் ஜாம்ஷெட்பூரில் (தற்போது ஜார்கண்ட்) கலவரம் நடைபெற்றது. இதை ஆய்வு செய்த ஜதீந்தர் தலைமையிலான மூவர் கமிஷன் விரிவாக தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில்…

கலவரத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்.ன் பயிற்சி முகாமில் தலைவர் தேவரஸ் நிகழ்த்திய உரை வன்முறைக்கு வித்திட்டது. ராம் நவமீ ஊர்வலத்திற்கு ஆயுதத்தோடு அவர்கள் கலந்து கொண்டதைப் பார்க்கும்போது இது முன்பே திட்டமிடப்பட்டது தெளிவாகிறது.

மாவட்ட காவல்துறையின் கடைக்கண் பார்வை அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ், பாரத் மஸ்தூர் சங் இரண்டின் கூட்டு மற்றும் திட்டமிட்ட சதியே இக்கலவரம் என்று குறிப்பிட்டது.

(அலிகான் 113)

  • 1969 ஆம் ஆண்டு அஹமதாபத்தில் கலவரம் நடைபெற்றது. அதை விசாரிக்க நீதிபதி ஜகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டு பிவாண்டியில் நடைபெற்றகலவரத்தை விசாரிப்பதற்காக நீதிபதி டி.பி. மதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
  • 1971 தலைச்சேரி கலவரத்தை விசாரிப்பதற்காக நீதிபதி விதாயத்தின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
  • 1979 ஜாம்செட்பூர் கலவரத்தை விசாரிப்பதற்காக நீதிபதி ஜிதேந்திர நாராயணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
  • 1982 மண்டைக்காடு கலவரத்தை விசாரிப்பதற்காக நீதிபதி வேணு கோபால் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
  • 1992-1993 மும்பை கலவரத்தை விசாரிப்பதற்காக நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. (இஸ்லாமும் இந்தியாவும், அலைகள் பதிப்பகம், டி.ஞானைய்யா, பக். 278)

அனைத்து விசாரணை அறிக்கை களிலும் குறிப்பிடப்பட்டிருந்த பொதுவான அம்சம் இவையனைத் தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தான் முன்னின்று நடத்தியிருக்கின்றன என்பதுதான்.

சுதந்திர இந்தியாவில் ஓரளவிற்கு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்ட காலம் என்பது 1949ல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆரிய சமாஜ் அமைப்பு தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்த காலம் மட்டும்தான் என்கிறார் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களும் கமிஷன் அறிக்கைகளும் என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் முஹம்மது அலிகான்.

(இ.மு.எ.க.க.அ பக்கம் 19)

கலவரத்திற்குப் பின்னும் கயமைத்தனம்

1970ஆம் ஆண்டு மே மாதம் மாகாராஷ்டிர மாநிலம் பீவாண்டியில் நடைபெற்ற கலவரத்தை ஆய்வு செய்த S.I.S சிறப்புப் புலனாய்வுத் துறை அரசுக்கு முதற்கட்ட அறிக்கையை வழங்கியது.

பீவாண்டி கலவரத்திற்கு முஸ்லிம் களே காரணம். முஸ்லிம்களால் முன்பே அது திட்டமிடப்பட்டிருந்தது. சிவ ஜெயந்தி ஊர்வலத்தில் தாக்குதலைத் துவக்கியது முஸ்லிம்களே என சிறப்புப் புலனாய்வின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கலவரத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட D.G.P மதன் கமிஷன் புலனாய்வின் அறிக்கையை புடலங்காயின் நிலையில் வைத்து விமர்சித்தது. முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கும் கலவரத்திற்காகமுன்பே திட்டமிட்டிருந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

முறையான ஆய்வின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஒரேயொரு பொய்யான அறிக்கையும் அப்போதே தோலுரிக்கப்பட்டு விட்டது.

கலவரத்தின் முழு பொறுப்பும் ராஷ்ட்ரீய உத்சவ் மண்டல், ஜனசங், R.S.S-இன் தலைமை ஆகியவற்றையே சாரும் என்று பல்வேறு சான்றுகளோடு மதன் கமிஷன் தெளிவுபடுத்தியது.

(இ.மு.எ.க.க.அ பக்கம் 134)

பெட்டி பெட்டியாய் ஆதாரங்கள்

உ.பி. மாநில அரசில் உள்துறைச் செயலாளராக இருந்தவர் ராஜேஷ்வர் தயாள். மத்திய அரசின் அயலுறவுத் துறை செயலாளராகவும் பல வருடங்கள் பணி புரிந்தவர். இவர் எழுதிய நம் காலத்தில் ஒரு வாழ்க்கை (A Life of our Times) என்ற புத்தகம் நாட்டு நடப்புகளைத் துல்லியமாகக் காட்டும் கண்ணாடி.

அதில் அவர் எழுதுகிறார்: ஒரு நாள் உ.பி. மாநில DIG ஜெய்ட்லி இரண்டு பெரிய ஸ்டீல் பெட்டிகளுடன் என் வீட்டிற்கு வந்தார். அந்தப் பெட்டிக்குள் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் வகுப்புக் கலவரத்தை நடத்த திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன.

RSS தலைவர் கோல்வால்க்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட மறுக்க முடியாத சதித் திட்டங்கள், மிகத் துல்லியமான தொழில் நுட்பத்துடன் குறி வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அந்த இடங்களுக்கு போகும் வழிகள், செய்ய வேண்டிய வேலைகள் என அனைத்தும் விலாவாரியாக தொகுக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக அதனை முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த் வீட்டிற்கு கொண்டு சென்றோம். மிகக் கச்சிதமாக அதை அவர் அடக்கம் செய்து விட்டார் என்று எழுதியுள்ளார்.