39) காவலர்களின் கைங்கர்யம்.

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

39) காவலர்களின் கைங்கர்யம்

மீடியாக்கள்தான் மிதமிஞ்சிய வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள் என்றால் பயங்கரவாத வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக மட்டுமே இருப்பது ஏன்? என்ற கேள்வி எழலாம்.

நம் நாட்டு காவல்துறையும், உளவுத் துறையும் முஸ்லிம் வெறுப்பில் மீடியாக்களோடு சேர்ந்து செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளாகத் தான் இருக்கிறார்கள்.

ஏதேனும் ஒரு பயங்கரவாதச் செயல் நடைபெற்று விட்டால் காவலர்கள் தமது பராக்கிரமத்தை நிரூபிப்பதற்காக உடனடியாக சில முஸ்லிம்களைக் கைது செய்வார்கள். கைதிகளின் பக்கத்தில் நின்று மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பார்கள். அவர்களும் பரபரப்பான செய்திகளைத் தந்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு நன்றியாகக் கொடுத்த செய்தியை வளைத்து வளைத்து வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

முஸ்லிம்கள் குண்டு வைத்து விட்டார்கள் என்று மக்கள் மனதில் பதியும்வரை இந்த வாசிப்புத் தொடரும். இந்தப் பிராணியை இதற்கு மேல் அடிக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் ஏற்பட்ட உடன் அடுத்து செய்திக்குத் தாவி விடுவார்கள்.

பரபரப்புகள் ஓய்ந்தபிறகுதான் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் உண்மையான பகுத்தாய்வு ஆரம்பமாகும். இதுவரை திரைக்கு முன்னால் காவல்துறைக் காட்டிய காட்சிகள் அனைத்தும் பொய் என்பது திரைக்குப் பின்னால் அம்பலமாகும். சில நேரங்களில் சில நல்ல நீதிபதிகள் சம்பந்தப்பட்ட காவலர்களைக் கடுமையாக கண்டிக்கவும் செய்வார்கள்.

அப்பாவிகள் மீது ஏன் இப்படி பொய் வழக்குப் போடுகிறீர்கள் என கோபத்தூடு கூடிய கேள்விகளையும் முன்வைப்பார்கள். இந்தச் செய்திகள் எதுவும் வெளி உலகுக்குத் தெரியாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் காவல்துறை அதிகாரிகள்.

ஒருவேளை இதை வெளியிட்டாலும் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஏழாம் பக்கத்தின் ஓரத்தில் நாலுவரிச் செய்தியாக நறுக்கி விடுவார்கள் நம் மீடியாக்காரர்கள்.

முஸ்லிம்கள் குற்றவாளிகள் இல்லை என்பது தக்க ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும் வேறுசமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் இந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டாலும், இந்தச் செய்திகள் மக்கள் மன்றத்தில் வெளிப்பட்டு விடாமல் மறைக்கப்பட்டு விடுகிற காரணத்தால் அல்லது உரிய முக்கியத்துவத்தோடு வெளிவராத காரணத்தால் மக்கள் மனங்களில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

கடந்த 24.9.2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் காந்தி நகர் அக்ஷர்தாம் கோவிலுக்குள் இரண்டு தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கிருந்த பக்தர்களைக் கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். 86 பேர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் இருவரும் சம்பவ இடத்திலே தீர்த்துக் கட்டப்பட்டனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக குஜராத் காவல்துறை ஆறு முஸ்லிம்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது. வழக்கை விசாரித்த பொடா சிறப்பு நீதிமன்றம் கடந்த 1.7.2006ல் ஆதம்பாய் அஜ்மீரி, அப்துல் கைய்யூம் முஃப்தி சாஹிப், சந்த் கான் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

முஹம்மது சமீம் ஹனீப் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் அப்துல்லாமியா,யாசீன்மியா இருவருக்கும் பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கியது.

2010ல் குஜராத் உயர்நீதி மன்றம் அந்த தண்டனையை உறுதி செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதனை ஏ.கே.பட்நாயக், இ.கோபால் சாமி கௌடா ஆகிய நீதிபதிகள் விசாரித்தனர். 16வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 16.5.2014 அன்று வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.

தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்த வழக்கில் துளிகூட சம்பந்தப்படாத நிரபராதிகள்.இவர்களுக்கு எதிரான ஆவணங்கள் அனைத்தும் காவல்துறையால் போலியாக தயாரிக்கப்பட்டவை. ஆறு பேர் மீதும் போடப்பட்ட பொய் வழக்கு இது.

வழக்கின் முக்கிய ஆதாரத்தின் நம்பகத் தன்மையை சிறப்பு நீதிமன்றமும், உயர்நீதி மன்றமும் உறுதி செய்யத் தவறிவிட்டது” என்று அனல் பறக்கும் வார்த்தைகளில் தமது தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் கைதிகள் எழுதிய ஒரு கடிதம்தான் கீழ்க் கோர்ட் நீதிபதிகள் மரண தண்டனை கொடுத்ததற்குரிய அடிப்படை ஆதாரம். இந்தக் கடிதத்தை சம்பவ இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு கொலையாளிகளின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றியதாக குஜராத் காவல் துறை கூறியது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவனின் உடலில் 46 குண்டுகள் பாய்ந்து சல்லடையாகத் துளைக்கப் பட்டிருந்தான். இன்னொருவன் 60 தோட்டாக்களைப் பெற்று சின்னாபின்னமாகச் சிதறிக் கிடந்தான். இரத்தச் சகதியிலிருந்து உடலின் எந்தப் பகுதியும் இருவரில் எவருக்கும் மிச்சமாக இருக்கவில்லை.

ஆனால் அதிசயம் பாருங்கள், சட்டையில் இருந்த கடிதம் மட்டும் மடிப்புக் கலையாமல் இரத்தத்தின் வாடைகூடப் படாமல் பவித்ரமாய் பாதுகாப்பாய் இருந்தது.

இது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார் நீதிபதி. இந்தக் கேள்வியின் வாலைப் பிடித்துத்தான் பொய் வழக்கின் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்து அவர்களை விடுதலை செய்து வெளியில் அனுப்பியது உச்சநீதி மன்றம்.

பெங்களூரில் அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் அஜாஸ் மிர்ஸா அஹமது எனும் 25 வயது வாலிபர். ஆங்கில நாளிதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் 26 வயது மத்தியுர் ரஹ்மான் சித்தீகி. பல்வேறு தீவிரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் கூறி இவ்விருவரையும் பெங்களூர் காவல்துறை கைது செய்தது.

ஆறுமாதங்களுக்குப் பின் இவர்கள் மீதான குற்றத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறி 2012 ஆகஸ்ட் 25ல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆறுமாத கால இடைவெளியில் பார்த்துக் கொண்டிருந்த வேலையும் பறி போனது.

ஆந்திர மாநில மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசதுத்தீன் உவைசி பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுகிற இராணுவத்தின் கர்னல் புரோஹித்திற்கு சிறையிலிருக்கும்போதே சம்பளமும் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஆனால் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட அஜாஸ் மிர்சா அஹமது வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது பாரபட்சமான நடவடிக்கை.

ஆகையால் மத்திய மாநில அரசுகள் இதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

முஹம்மது அமீன் கசாம். காஷ்மீர் வருவாய்த் துறையில் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சகோதரியின் திருமணத்திற்கு நகை எடுப்பதற்காக, டில்லி வந்தார்.

கடந்த 10.12.2006 அன்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டில்லியில் வைத்து அவரைக் கைது செய்தனர். இவர் லஷ்கரே தொய்பா தீவிரவாதி என்றும் இவரிடமிருந்து ஆறு லட்ச ரூபாய் ரொக்கமும் ஒன்றைரைக் கிலோ வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறியது.

விசாரணையின்போது எந்தப் பேருந்தில் வைத்து அமீன் கசாமைக் கைது செய்ததாக காவல்துறை கூறியதோ, அந்தப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் அளித்த வாக்குமூலத்திற்குப் பிறகு வழக்கின் போக்கு அமீன் கசாமுக்கு சாதகமாகத் திரும்பியது. கைது காட்சி அரங்கேறியதாகக் காவல்துறைக் கூறும் குறிப்பிட்ட அந்த நாளில் எங்கள் பேருந்து ஓடவேயில்லை என அவ்விருவரும் சாட்சியமளித்தனர்.

ஐந்தாண்டு கால தீவிரப் போராட்டத்திற்குப் பின் குற்றமற்றவர் என அமீன் கசாம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் “வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் கண நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு தவறான அணுகுமுறை. அரசுத் தரப்பின் தடுமாற்றத்தையும் தவறுகளையும் வைத்துப் பார்க்கும் போது இது ஒரு புனையப்பட்ட வழக்கு” என்று மிகத் தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார் தற்போது 78 வயது நிரம்பிய காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் முஹம்மது சுர்தி. இவரோடு மேலும் பத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர்.

1993 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடா சட்டம் இவர்கள்மீது பாய்ந்தது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகூர், சி. நாகப்பன் ஆகியோர் 17.7.2014 அன்று இந்த வழக்கில் அரசுத் தரப்பு ஆதாரங்கள் எதுவும் ஏற்கத் தகுந்ததாகவும் நம்பும்படியாகவும் இல்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தனர்.தில்வார், டில்லியின் வடகிழக்கில் உள்ள இமாமுல் உலூம் மதரஸாவின் ஆசிரியர். மசூத் பகவாலி அதே பகுதியின் பள்ளிவாசல் இமாம்.

டேராடூனில் உள்ள இராணுவப் பள்ளியைத் தாக்குவதற்கு திட்டமிட்டதாகக் கூறி டில்லி காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மார்ச் 2005ல் இருவரையும் கைது செய்தது.

இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் ஜனவரி 2010ல் இவர்களை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

நீதிபதி சர்மா தனது தீர்ப்பில் இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.அரசுத்தரப்பில் வைக்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. அனைத்தும் ஜோடிக்கப்பட்டவையாகவே தெரிகின்றது. கைது செய்யச் சென்ற காவல் ஆய்வாளர்கள் இருவரும் எங்கு கைது செய்தோம் எப்படி கைது செய்தோம் என்பதில் முரண்பட்ட தகவல்களைத் தருகின்றனர். இதில் அப்பட்டமாக அதிகார துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

குண்டுவெடிப்புகளைக் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றின் உண்மை நிலையை அம்பலப்படுத்திய முதுபெரும் அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீனுடைய ‘குண்டு வைத்தவர்கள் யார்?’ என்ற ஆய்வேடு இதுகுறித்து மேலும் பல விரிவான தகவல்களை நமக்குத் தருகிறது

  • 25.8.2003 அன்று 6 பேரைப் பலி வாங்கிய மும்பை கார் குண்டு வெடிப்பு,
  • அதே ஆண்டில் 11 பேரைப் பலி வாங்கிய மும்பை ரயில் குண்டு வெடிப்பு,
  • 29.8.2005 அன்று 66 பேரை பலி வாங்கிய புது டெல்லி தொடர் குண்டு வெடிப்பு,
  • 7.3.2006 அன்று 15 பேரை பலி வாங்கிய வாரணாசி குண்டு வெடிப்பு,
  • 19.2.2007 அன்று 66 பேரை பலிவாங்கிய சம்ஜாவுதா ரயில் குண்டு வெடிப்பு,
  • 25.8.2007 அன்று 40 பேரை பலிவாங்கிய ஹைதராபாத் பூங்கா குண்டு வெடிப்பு,
  • 13.5.2008 அன்று 63 பேரை பலி வாங்கிய ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு.

இப்படி இன்னும் பலவற்றைப் பட்டியலிட்டு அனைத்திலும் முஸ்லிம்களே குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளை முஸ்லிம்கள் தான் மேற்கொண்டனர் என்பதற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் கிடையாது.

விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள்மீது ஆண்டுகள் பல கடந்த பின்னும் குற்றப்பத்திரிக்கை கூட காவல்துறையால் தாக்கல் செய்யப்படவில்லை.எவ்வித விசாரணையுமின்றி கிடப்பில் போடப்பட்டிருப்பதே இவ்வழக்குகள் காவல்துறையால் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்பதற்குப் போதுமான ஆதரமாகும் என்று அவர் தனது ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மத்திய காங்கிரஸ் அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு மாநில அரசும் சிறைச்சாலைகளில் அப்பாவி முஸ்லிம்கள் அடைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஏனெனில் திருட்டு, வழிப்பறி, கற்பழிப்பு என்று எல்லா மதத்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தீவிரவாத வழக்குகளின் கீழ் எந்த அடிப்படை ஆதாரமும் விசாரணையும் இல்லாமல் முஸ்லிம்கள் மட்டுமே கைது செய்யப்படுவதால் இப்படி ஓர் அறிவுரையைக் கூற வேண்டிய அவசியம் மத்திய அரசிற்கு ஏற்ப்பட்டிருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால் முஸ்லிம்களின் குடியிருப்புகளிலும் பள்ளிவாசல்களிலும் குண்டு வைக்கப்பட்டு கொத்துக் கொத்தாக முஸ்லிம்களே கொல்லப்பட்ட நேரத்திலும்கூட காவல்துறையும் உளவுத் துறையும் சேர்ந்து முஸ்லிம்களையே கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை அதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

  • 21.11.2003: மாராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் சித்தார்த் நகர் மதரஸா மற்றும் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை மதியம் ஜும்ஆ தொழுகை நேரத்தில் குண்டு வெடித்தது,
  • 21.11.2003: மும்பை ஜால்னா நகர் காதிரிய்யா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின் போது குண்டு வெடித்தது,
  • 8.9.2006: மும்பை மாலேகான் பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையில் குண்டு வெடித்தது,
  • 29.9.2007: மும்பை மாலேகான் முஸ்லிம் குடியிருப்பில் சிமி அலுவலகம் அருகில் குண்டு வெடித்தது,

2008ல் அஜ்மீர் தர்ஹா, ஹைதராபாத் மக்கா மசூதி என முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோதும் கூட ஈவிரக்கமில்லாமல் எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் முஸ்லிம்கள்மீதே பழி சுமத்தி எடுத்த எடுப்பில் முஸ்லிம்களையே கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வர்க்கம்.

முஸ்லிம்கள் தம் மீது போடப்பட்ட பல வழக்குகளைப் பொய்யென்று நிரூபித்து விடுதலை பெற்று வெளியில் வந்து விட்டார்கள். ஆயினும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவப் பெயர் மட்டும் அழியாமல் நிலை பெற்று விட்டது.