36) வாளின் துணை கொண்டு வளர்ந்ததா இஸ்லாம்?

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

36) வாளின் துணை கொண்டு வளர்ந்ததா இஸ்லாம்?

இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் அதை ஒரு கோரமான மதமாக சித்தரிக்க கடும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் இஸ்லாத்தின் வளர்ச்சி இயற்கையாக நிகழ்ந்ததல்ல. உருட்டி மிரட்டி செயற்கையாகச் செய்யப்பட்டது என்று கூறி வருகிறார்கள். அதன் உண்மைத் தன்மையைக் கொஞ்சம் ஆய்வோம்.

இஸ்லாத்தில் இடமில்லை

ஒருவருக்கு நாம் செய்யும் மரியாதை அவர் ஏற்றுக் கொண்ட அடிப்படையில்தான் இருக்க முடியும். அந்த வகையில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணையச் சொன்னால் அந்த இணைப்பை இஸ்லாம் ஏற்க வேண்டும்.

இந்த மார்க்கத்தில் எவ்வித வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்.

(அல்குர்ஆன்: 2:256)

மார்க்கத்தில் நிர்பந்தப்படுத்தி யாரையும் இணைக்க முடியாது என்று திருமறையின் இவ்வவசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த வசனம் இறங்கிய பின்னணி இன்னும் அழுத்தமாக இந்தக் கருத்தை கூறுகிறது.

நபிகளாரின் வருகைக்கு முந்தைய மதினாவில் ஒரு குழந்தைக்கு கடுமையான நோய் ஏற்பட்டால் குழந்தையின் தாய் நோய் நீங்கி விட்டால் என் குழந்தையை யூதனாக்கி விடுகிறேன் என்று நேர்ச்சை செய்து கொள்வாள். இப்படி சில குழந்தைகள் யூதர்களிடம் வளர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இஸ்லாம் மதினாவிற்குள் அடியெடுத்து வைத்தது. நபிகளாரிடம் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து துரோகம் செய்த காரணத்தால் பனூ நளீர் என்ற யூதக் கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை நபியவர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சிலருடைய வாரிசுகளும் அந்த யூதர்களோடு வெளியேறும் நிலை இருந்தது.

அவர்களை யூதர்களோடு செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்கள் எங்கள் வாரிசுகள், கட்டாயமாக இஸ்லாத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரியபோதுதான் இறைவன் இந்த வசனத்தை இறக்கி வைத்தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 2307)

தமது சொந்தப் பிள்ளைகள் மீதே தாம் விரும்பும் கொள்கையைத் திணிக்க முடியாத மார்க்கத்தில் அன்னியர்களை அடித்து சித்ரவதை செய்து ஏற்க வைப்பது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

கட்டாயத்தின் பேரிலாவது மக்கள் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று இறைவன் விரும்பியிருந்தால் வானவர்களைப் படைத்ததைப் போல இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக மனிதர்களையும் இறைவன் படைத்திருப்பான்.

மனிதப் படைப்பின் நோக்கம் அதுவல்ல. நன்மை தீமையை அவனுக்கு நாம் தெளிவு படுத்தி விட வேண்டும். தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி தனக்கான வழியை தேர்வு செய்து வாழும் சுதந்திரத்தை அவனுக்கு வழங்கி விட வேண்டும். அதன் பிறகு அவனது வாழ்வை பரிசீலித்து அதற்குத் தகுந்த பரிசளிக்க வேண்டும். இதுதான் மனிதப் படைப்பில் இறைவனின் விருப்பம். திருக்குர்ஆனும் இதைத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள்.உம்மை அவர்களுக்கு காவலராக நாம் ஆக்கவில்லை. நீர் அவர்களுக்குப் பொறுப்பாளரும் இல்லை.

(அல்குர்ஆன்: 6:107)

(முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும் பார்க்கலாம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகிவிடாதீர்.

(அல்குர்ஆன்: 6:35)

(நபியே)அவர்கள் நம்பவில்லைஎன்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். நாம் நினைத்திருந்தால் வானிலிருந்து அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம்.அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.

(அல்குர்ஆன்: 26:3-4, 18:7)

(நபியே) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

(அல்குர்ஆன்: 28:56)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது ஏற்க மறுத்தவர்களை நினைத்து மிகுந்த கவலை கொண்டார்கள். அந்தத் தருணங்களில்தான் இந்த வசனங்கள் அனைத்தும் இறக்கியருளப்பட்டிருக்கின்றன. அவர்கள் இஸ்லாத்தை ஏற்று விட வேண்டும் என்று எல்லை மீறி விரும்புவதையே இறைவன் கண்டிக்கிறான்.

ஏற்பவர்கள் ஏற்கட்டும் மறுப்பவர்கள் மறுக்கட்டும்.

(அல்குர்ஆன்: 18:29)

உமக்கு ஏன் இத்தனை வருத்தம்? ஏற்றுத்தான் ஆக வேண்டுமென்றால், என்னால் அப்படி ஆக்கியிருக்க முடியாதா என்று கேட்கிறான். இத்தகைய மார்க்கத்தில் இறுக்கிப் பிடித்து இடையூறு செய்து ஏற்கச் செய்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

ஒரு வாதத்திற்கு கட்டாயத்தின் பேரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி ஏற்றுக் கொண்டால் அவர் முஸ்லிமாகி விடுவாரா என்றால் ஆகமாட்டார் என்கிறது இஸ்லாம்.

மனதில் இறை நம்பிக்கை நிறைந்திருக்க கட்டாயத்தின் பேரில் இறைவனை மறுத்தவர், உண்மையில் இறைவன மறுத்தவராக ஆக மாட்டார் என்கிறது திருமறைக் குர்ஆன். மறுப்பவரின் நிலைதான் ஏற்பவருக்கும்.

(அல்குர்ஆன்: 16:106)

எண்ணங்களின்படியே செயல்களுக்கு கூலி வழங்கப்படும் என்றார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

அறிவிப்பாளர் : உமர் (ரலி)

(புகாரி: 1, 54, 2529, 3898, 5070, 6689, 6953)

(முஸ்லிம்: 3530)

(திர்மிதீ: 1571)

(நஸாயீ: 74, 3383, 3734)

(இப்னு மாஜா: 4277)

எண்ணங்களுக்கு எதிராக செயல்படுகிறவருக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் கூலி எப்படி கிடைக்கும்?

நபிகளாரின்காலத்தில் முஸ்லிம்களோடு சேர்ந்து கொள்வதால்கிடைக்கும் ஆதாயங்களுக்கு ஆசைப்பட்ட சிலபேர், முஸ்லிம்களைப் பார்த்து நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று நடிக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் அவர்களுடைய உள்ளத்தில் இஸ்லாம் இல்லை. இவர்களை முனாஃபிக் சந்தர்ப்பவாதி என்ற பெயரில் இஸ்லாமிய வரலாறு அறிமுகப்படுத்துகிறது.நரகில் அடித்தட்டில் இருப்பவர்கள் இவர்களே என்று திருமறைக் குர்ஆன் தீர்ப்பளிக்கிறது.

(அல்குர்ஆன்: 4:145)

இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லையென்றாலும் இஸ்லாத்தின்மீது கொண்ட வெறியால் முஸ்லிம் மன்னர்கள் இப்படி செய்திருக்கிறார்கள் என்று சிலர் கூறலாம். இந்த வாதத்திலும் உண்மையில்லை.

இஸ்லாத்தின்மீதுபற்றுக் கொண்டவன்தான்அதை வளர்க்கநினைப்பான். தங்கள்வாழ்க்கையிலேயே இஸ்லாத்தைக் கடைபிடிக்காத மன்னர்கள் இஸ்லாத்தை எப்படி வளர்த்திருப்பார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.

  • பதவி சுகத்திற்கு படையெடுத்து வரக்கூடாது
  • ஆடம்பர வாழ்வில் அமிழ்ந்து போகக் கூடாது
  • மக்கள் பணத்தில் அநியாயமாக சல்லிக் காசைக்கூட தொட்டு விடக்கூடாது
  • பொருள் வசதிப் படைத்தவர் ஜகாத், ஹஜ் போன்ற செலவு பிடிக்கும் வணக்கங்களைச் செய்திட வேண்டும்.

இப்படி இஸ்லாம் கூறும் ஏராளமான சட்டங்களை ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் காலில் போட்டு மிதித்தவர்கள் இஸ்லாத்தை வளர்க்கப் பாடுபட்டார்கள் என்று கூறுவது சொல்பவர்களுக்கே கொஞ்சம் கூடுதலாகத் தெரியவில்லையா?

மொகலாயர்கள், லோடிகள், செய்யதுகள், கில்ஜிகள், சுல்தான்கள், நிஜாம்கள் என 231 மன்னர்கள் தலைமையில் 1170 ஆண்டுகள் இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை அவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்திருக்க முடியுமா?

நவீன ஆயுதங்களோடு வந்து நம்மைஅடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களை ஆயுதங்களே இல்லாத நம் முன்னோர்கள் இருந்த இடம் தெரியாமல் துரத்தி அடிக்கவில்லையா? அப்படிப்பட்டவர்களுக்கு இந்த முஸ்லிம் மன்னர்கள் எம்மாத்திரம்?

இவர்கள்இந்தியாவைச் சுரண்டி இங்கிலாந்தை வளர்த்த ஆங்கிலேயர்களைப் போலல்லாமல் இங்கு வந்தவர்கள் இந்தியர்களாகவே மாறிப் போனார்கள். இந்துக்களின் வெறுப்புக்கு ஆளாகி விட்டால் நம்மை இருக்க விடமாட்டார்கள் என்பதை உணர்ந்து தம்முடைய வாழ்க்கை முறையை அவர்களுக்கு இசைவாகவே மாற்றிக் கொண்டார்கள். மாட்டிறைச்சி உண்பதை மார்க்கம் அனுமதித்தாலும் இந்துக்களை ஈர்ப்பதற்காக வேண்டாம் என விலக்கிக் கொண்டார்கள்.

அதனால்தான் இங்குள்ள இந்துக்கள் ஆங்கிலேயர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஆயுதப் போர் நடந்தபோது முஸ்லிம்களின் வெற்றிக்காக தங்களது கோவில்களில் யாகம் நடத்தி ஆண்டவனை அழுதழுது பிரார்த்தித்தார்கள்.(பாலகிருஷணன் எழுதிய டணாயக்கன் கோட்டை)

முதல் இந்திய சுதந்திரப் போரில் கூட எத்தனையோ மன்னர்கள் இருக்க ஆங்கிலேயனை எதிர்ப்பதற்கு ஒரு முஸ்லிம் மன்னரையே தம் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டாய மதமாற்றம் நடந்திருந்தால் இந்தியாவில் முஸ்லிம்கள் ஏன் சிறுபான்மையினராக இருக்கிறார்கள்?

இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் மன்னர்கள் மதம் மாற்றினார்கள் என்றால் அவர்களின் வருகைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இஸ்லாம் நுழைந்து விட்டது என்பதற்கு ஏராளமான சரித்திரச் சான்றுகள் இருக்கின்றனவே அது எப்படி நடந்தது?

மன்னர்கள் வந்த பிறகும் அவர்களின் செல்வாக்கு செல்லுபடியாகாத தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்ததே அது எப்படி?

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அதாவது நபிகளார் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த நூற்றாண்டில் கேரளாவின் கொடுங்களுரில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக அப்போதே கட்டப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது.

அதே ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் கூன்பாண்டிய மகாராசாவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் நிலம் வாங்கியதற்கான ஆதாரம் மதுரை கோரிப்பாளையம் கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது.

சோழர்களின் தலை நகர் திருச்சி உறையூரில் எட்டாம் நூற்றாண்டில் கிபி.734 இல் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றும் திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகில் முஸ்லிம்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான கல்லுப் பள்ளிவாசல்கள் தமிழகம் முழுவதிலும் முஸ்லிம்களின் வருகை குறித்த வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

அப்போதுஇஸ்லாத்தைத் தழுவியவர்கள் எப்படித் தழுவினார்கள்? எந்த முஸ்லிம் மன்னன் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தான்?

எந்தக்காலத்திலும் இஸ்லாம் ஆதிக்க சக்தியாக தனது அடிகளை எடுத்து வைக்கவில்லை. அடிமைகளாகவும் பலஹீனர்களாகவும் இருந்தவர்கள் வழியாகத்தான் இஸ்லாம் வளர்ந்திருக்கிறது.

நபிகள் நாயகத்திற்கு முந்தைய இறைத் தூதர்கள் காலத்தில்கூட இதுதான் இஸ்லாத்தின் நிலையாக இருந்தது. அற்பர்களின் கூட்டம் தான் உம்மை அண்டியிருக்கிறது. ஆற்றலும் அதிகாரமும் படைத்த நாங்கள் எப்படி அவர்களோடு சேர்ந்து உமக்குப் பின்னால் வரமுடியும்? என்று ஒவ்வொரு காலத்திலும் இறைத் தூதர்களைப் பார்த்து அதிகார வர்க்கத்தினர் கேட்டிருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் அவர்களிடம் கூட செல்வந்தர்களும் உயர் குலத்தார் என கருதப்பட்டவர்களும் வந்து தாழ்ந்த மக்களே உம்மை தாங்கிப் பிடிப்பதால் உம்மைப் பின்பற்ற எங்களுக்கு தயக்கமாக இருக்கிறது.

எனவே சட்டத்தில் கொஞ்சம் சமரசம் செய்து எங்களுடைய மேன்மைக்கிணங்க அவற்றை சரி செய்து தாரும் நாங்களும் உம்மோடு சேர்ந்து கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்த நிகழ்ச்சி கூட நடைபெற்றிருக்கிறது.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)

(திர்மிதீ: 3254)

இந்த நிலைதான் இன்று வரைத் தொடர்கிறது.ஒருகாலத்திலும் அடக்கு முறையின் வழியாக இஸ்லாம் அரியணை ஏறியதில்லை.

வாள் முனையில்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றால்கூட இஸ்லாமியர்களின் வாட்களே வாலாட்டாத நாடுகளுக்குள் அது புகுந்தது எப்படி? இன்றைக்கு அந்த நாடுகளில் முழுக்க முழுக்க முஸ்லிம்களாக இருக்கின்றனரே இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

தொடர்ச்சியாக இந்துக்களின் ஆட்சியின்கீழ்இருந்த இந்தோனேஷியா உலகிலேயே முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட முதல் நாடாக இருப்பது எப்படி?

700 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினில் இப்போதுதான் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டுக் கொண்டிருப்பது ஏன்?

காஷ்மீரில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய இந்து மன்னர்களின் ஆட்சி நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட அவர்களின் கைகளில் தான் இருந்தது. அங்கே முஸ்லிம்கள் 90 சதவீதமும் மற்றவர்கள் 10 சதவீதம் மட்டுமே இருப்பதற்குக் காரணம் என்ன?

மலேசியா, ஜாவா, சுமத்ரா, போர்னியோ, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளிலெல்லாம் எந்த முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளும் இன்றி கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனரே அது எப்படி? இன்று உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்குமாறுவோரின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டிருக்கிறதே.

கத்தோலிக்ககிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் இரண்டாம் ஜான்பால் கிறிஸ்தவத்தைவிட வேகமாக இஸ்லாம்வளர்கிறது, கிறிஸ்தவர்கள் முன்னிலும் வேகமாகப் பணியாற்ற வேண்டும் என வாடிகன் இணைய தளத்தின் வழியாக உலக கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கி.பி.2000-2010க்கு இடைப்பட்டகாலத்தில் அமெரிக்காவில் மட்டும் 1200 பள்ளிவாசல்கள் புதிதாக கட்டப்பட்டிருப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது இதுவெல்லாம் எப்படி நடக்கிறது? இவர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால், மிரட்டி ஆள் பிடிக்கும் வேலையை புத்தியுள்ளவன் எவனும் செய்யவே மாட்டான். ஏனெனில் அதைப் போல ஆபத்தான காரியம் எதுவுமில்லை.

கட்டாயத்தின் பேரில் முஸ்லிமாகி இருப்பவனை வைத்துக் கொண்டு எந்த வேலையும் செய்ய முடியாது. வெறுப்பில் இருப்பவன் காலை வாரத் தான் காத்திருப்பான். நம்முடைய நடவடிக்கைகளையெல்லாம் எதிரிகளுக்குப் போட்டுக் கொடுப்பான். தனிமையில்கூட தீர்த்துக் கட்ட வாய்ப்புக் கிடைத்தால் அதையும் செய்து முடிப்பான். இப்படிப்பட்ட ஆபத்தான வேலையில் யார் தான் ஈடுபடுவர்?

இஸ்லாத்தின் வளர்ச்சி அதன் கொள்கையால், எளிமையால், அறிவார்ந்த வழிகாட்டலால் நிகழ்ந்தது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கிற அறிவியல் பூர்வமான சான்றுகள் குர்ஆன் முழுவதிலும் நிரம்பியிருக்கின்றன. அதைப் படிக்கிறவர்கள் தமது வாழ்க்கை நெறியாக அதை அரவணைத்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் சாதியின் பெயரால் இழிவுபடுத்தப்பட்டவர்கள் சமூக விடுதலைக்காக இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவக் கோட்பாடு அவர்களைப் பெரிதும் கவர்ந்தது.

சாதிக்கொடுமைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தலைவர்கள் இஸ்லாத்தைத்தான் தீர்வாக முன்வைத்தார்கள். அதன் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன் தமிழக கிராமங்களில் பல இஸ்லாமிய சோலையில் இளைபாறத் துவங்கியது. தமிழகத்தில் எண்ணற்ற ஊர்களை அதற்கு உதாரணம் காட்டலாம்

குறிப்பாக சமணர்கள், பௌத்தர்கள், தலித்கள், நாடார்கள், கள்ளர்கள் ஆகிய சாதியினர் தமிழகத்தில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தனர். இவர்கள் அனைவருமே இந்துக்கள் என்ற பொதுச் சொல்லில் இன்று குறிப்பிடப்பட்டாலும் இவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதிகள் நடத்திய காட்டு தர்பார் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

இந்தியாவில் கோலோச்சிய பௌத்தம் இன்று இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டு விட்டது. இலங்கை, சீனா, ஜப்பான் என கரையேறி இந்தியாவில் காணாமலே போய்விட்டது. காரணம் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள்.

தமிழகத்தில் சில இடங்களில் முஸ்லிம்கள் அஞ்சு வர்ணத்தார் என்று அழைக்கப்படுகின்றனர். நான்கு வர்ணத்தைத் தாண்டி பஞ்சமன் என்றும் அஞ்சாம் சாதி என்றும் அழைக்கப்பட்ட தலித்துகளின் நெருக்கமும் அங்கிருந்த நிலையில் மதமாற்றம் நடைபெற்றிருக்கிறது என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

சமணர்கள் பேசி வந்த தொழுகை, நோன்பு, பள்ளிவாசல் போன்ற தூய தமிழ்ச் சொற்கள் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் கலந்திருப்பதிலிருந்து அங்கிருந்து கணிசமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

தமிழக கிராமங்களில் முஸ்லிம்களுக்கும் சில குறிப்பிட்ட சாதியினருக்கும் இடையில் நிலவும் சித்தப்பா, பங்காளி, மாமன், தம்பி போன்ற உறவு முறைச் சொற்களும் செயற்கையாக உருவாக்கப்பட்ட சொற்களாக இருக்க முடியாது. நிஜமான அந்தந்த உறவு நிலையில் உள்ளவர்களின் மதமாற்றத்தால் மாறாமல் அப்படியே இருந்தவர்களுக்கிடையில் இந்த உறவுகள் உருவாகியிருக்கக் கூடும்.

இவ்வாறு தென்னிந்திய வரலாற்றைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இஸ்லாம் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்து மதத் துறவி விவேகானந்தர் கூறினார்: ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் முகம்மதியரின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பங்கினர் முகம்மதியர்களாக மாறினர்.

இதை சாதித்தது வாளால் என்பதற்கில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதிகேட்டின் உச்ச நிலையாகும் என்று கூறினார். (விவேகானந்தர், இஸ்லாமும் இந்தியாவும் ஞானைய்யா அலைகள் வெளியீட்டகம் பக் 124)