33) ஔரங்கஜேப்
33) ஔரங்கஜேப்
வரலாற்றுப் பாடங்களில் மிக மிக மோசமாகச் சித்தரிக்கப்படும் ஒரு மன்னன். இந்துக் கோவில்களை இடித்து தகர்ப்பதில் இவருக்கு நிகராக இன்னொருவர் இல்லை என்று வர்ணிக்கப்படுபவர். மொகலாய மன்னர் ஷாஜஹானின் மகனும் 1659ஆம் ஆண்டிலிருந்து 1688ஆம் ஆண்டு வரை டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சக்கரவர்த்தியுமான ஔரங்கஜேப்.
ஒருமுறை ஔரங்கஜேப் தனது படை பரிவாரங்களுடன், தனக்குக் கீழுள்ள சமஸ்தான சிற்றரசர்களுடன் வங்காளத்தை நோக்கி பயணம் மேற்கொண்டார். வழியில் காசியின் கங்கை நதியில் நீராடி விசுவநாதப் பெருமானை தரிசிக்க விரும்பினார்கள் உடன் வந்த சிற்றரசர்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணத்தை நிறுத்தினார் ஔரங்கஜேப். இந்து ராணிகள் மூடிய பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர். நீராடலும் வழிபாடும் முடிந்து அனைவரும் திரும்பினர்.
அவர்களில் கட்ச் சமஸ்தான ராணியை மட்டும் காணவில்லை. பலரும் சென்று தேடினார்கள் ஆனாலும் அவர் அகப்படவில்லை.. ஆத்திரமடைந்த ஔரங்கஜேப் தனது முக்கிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யச் சொன்னார்
விசுவநாதர் ஆலயத்திற்குள் இருந்த கணபதி சிலை லேசாக அசைந்து ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த அதிகாரிகள் சிலையைக் கொஞ்சம் அகற்றிப் பார்த்தனர். உள்ளே பாதாளச் சுரங்கத்தின் படிகள் தெரிந்தன. அதற்குள்ளே இறங்கிப் பார்த்தால் கட்ச் ராணி மான பங்கப்படுத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார்.
அரசர்களெல்லாம் கொந்தளித்தனர். இதற்குச் சரியான நீதி வேண்டும் என ஔரங்கஜேப் இடம் கோரிக்கை வைத்தனர். கோவிலின் புனிதம் கெட்டு விட்டது என்று அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக விசுவ நாதர் விக்ரஹத்தை வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னார் மன்னர். விக்ரஹத்தை இடமாற்றம் செய்த பின்னர் கோவில் இடிக்கப்பட்டது. கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டார்.
(.Dr.Pattaabhi Sitaramayya, The Feathers And the Stones – B.N. Pande Islam and Indian Culture p.55 வரலாற்று வெளிச்சத்தில் ஔரங்ஜேப் விகடன் பிரசுரம்(வ.வெ.ஔ.வி.பி) செ.திவான் பக் 310 – 312)
இந்த சம்பவத்தை டாக்டர் பட்டாபி சீத்தாராமைய்யா பழைய தஸ்தாவேஜுகளில் இருந்து எடுக்கப்பட்ட தக்க சான்றுகளுடன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றை வளைப்பவர்கள் தமது வசதிக்காக இந்தச் சம்பவத்தின் இடையில் வரும் கோயிலை இடித்தார், கோவில் இடிக்கப்பட்டது என்ற வாசகத்தை எடுத்துக் கொண்டார்கள். அதன் காரண காரியங்கள் அனைத்தையும் கண்ணுக்கெட்டா தூரத்தில் தூக்கிக் கடாசிவிட்டு கோவிலை இடித்தார் என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் கச்சிதமாக வெட்டி எடுத்துக் கொண்டார்கள்.
அதனோடு தங்கள் கற்பனைகளைக் கலந்து தற்போது ஔரங்கஜேப்பை கூறுகட்டி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். காழ்ப்புணர்வில் இடிப்பவர் விக்ரகத்தை வேறு இடத்திற்கு மாற்றி விட்டுத்தான் இடிப்பாரா? முதலில் உடைபடுவது அதுவாகத் தானே இருக்கும்.
கோவிலின் புனிதத்தைக் காக்க அவர் எடுத்த நடவடிக்கையை அதனைக் கெடுக்க நினைத்த நடவடிக்கையாக கேலி செய்யப்படுவதை என்னவென்று சொல்வது? ஔரங்கஜேப் கோவிலை இடித்தார் என்று சொன்னவர்கள் அது போல அவர் இடித்த பள்ளிவாசலைப் பற்றிய செய்திகளை மட்டும் பக்குவமாக மறைத்து விட்டார்கள்.
கோல்கொண்டா சமஸ்தானம் ஔரங்கஜேப்பின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதி. அதன் சிற்றரசர் தானஷா அங்கு வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை டில்லிக்கு அனுப்ப மனமில்லாமல் ஆழக்குழி தோண்டி பணம் அனைத்தையும் அதில் இட்டுப் புதைத்து விட்டார்.
பிறகு அந்தப் புதையலின் மேல் ஒரு பள்ளிவாசலையும் கட்டிக் கொண்டார். செய்தியைக் கேள்விப்பட்ட ஔரங்கஜேப் உடனடியாக கோல்கொண்டா ஜும்ஆப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்க உத்தரவிட்டார்.
(வ.வெ.ஔ.வி.பி) செ.திவான் பக் 309)
அவரது கட்டளையின் பேரில் பள்ளி இடிக்கப்பட்டது. அதன் கீழிருந்த புதையல் கைப்பற்றப்பட்டு மக்களின் நலனுக்காக செலவிடப்பட்டது. (கோல்கொண்டா)
இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் இணைத்துப் பார்த்தால் சமூக அமைதியை நிலை நாட்டவும், குற்றங்களுக்கு தண்டனை வழங்கவுமே அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதையும் மதவெறி அதற்கு காரணமல்ல என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கோவில்களுக்குக் கொடை
ஒரிசா (தற்போது ஒடிசா) மாநிலத்தின் கவர்னரும் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.என்.பாண்டே அவர்கள் அலகாபாத் நகராட்சித் தலைவராக இருந்த போது கோவில் நிலம் குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது.
அது குறித்த தனது குடும்ப ஆவணத்தை ஒருவர் கொண்டு வந்து பாண்டேவிடம் கொடுத்தார். அதில் டில்லி பாதுஷா ஔரங்கஜேப் கோவிலுக்கு நிலம் வழங்கியதகாக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாண்டேவால் அதை நம்ப முடியவில்லை. டாக்டர் தேஜ்பகதூர் சப்ருவிடம் அதை அனுப்பி வைத்து அதிலுள்ள தகவல் உண்மையானவையா? என்று பரிசீலிக்கச் சொன்னார். அந்த செப்புப் பட்டய ஆவணம் ஔரங்கஜேப்பால் வழங்கப்பட்டதே என உறுதி செய்யப்பட்டது.
இது போன்று வேறு கோவில்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இந்தியாவின் பல முக்கிய கோவில்களுக்கு கடிதம் எழுதினார். கிடைத்த தகவல்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார்.
உஜ்ஜைனியினியில் உள்ள பாலாஜி கோவில், கவுஹாத்தியில் உள்ள உமானந்த் கோவில், சத்ருஞ்சையின் ஜைனக் கோவில், சீக்கியர்களின் பல குருத்துவாராக்கள் என ஔரங்கஜேப் அரசாங்கத்தில் மானியம் பெற்ற கோவில்கள் பெரும் பட்டியலாகச் சேர்ந்து விட்டது.
1659 முதல் 1688 ஆம் ஆண்டு வரை ஔரங்கஜேப்பின் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட மானியங்கள், நிலங்கள் குறித்த முறையான ஆவணங்களைத் திரட்டினார். நமது பள்ளி கல்லூரிகளில் ஔரங்கஜேப் குறித்து கற்றுத் தரப்படும் வரலாறுகள் எந்த அளவிற்குத் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதையும் புள்ளி விபரங்களோடு தொகுத்தார்.
1977 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி பாரளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த போது அவற்றை வெளியிட்டு அவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தினார். அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வரலாற்றாசிரியர்களின் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார்.
அதனால் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத விளைவுகளைப் பற்றிய தனது வேதனைகளையும் அங்கே வெளிப்படுத்தினார். இந்தச் செய்தி பாராளுமன்ற அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது.((வ.வெ.ஔ.வி.பி) செ.திவான் பக் 287,288 பி.என்.பாண்டே இஸ்லாமும் இந்திக் கலாச்சாரமும் 1987 டாயல் பொழிபெயர்ப்பு)
குமரகுருபரர்
ஔரங்கஜேப்பிடம் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தவர் குமரகுருபர சுவாமிகள். டில்லி பாதுஷாவிடம் பேச வேண்டும் என்பதற்காகவே ஹிந்தி, உருது, ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டார். காசி கங்கையாற்றங்கரையில் மடம் அமைக்க விரும்பினார். அவர் விரும்பிய இடத்தை மன்னர் அவருக்கு மானியமாகக் கொடுத்தார்.(என்.ராமகிருஷ்ணா ஆதி குமரகுருபரரின் அருட்பரம்பரை மஞ்சரி 1969 ஜூன் பக் 18
(வ.வெ.ஔ.வி.பி) செ.திவான் பக் 292, 293)
அந்த மடத்தில் குமரகுருபரர் இந்தி, தமிழ், உருது, ஆகிய மொழிகளில் சைவ சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். குமாரசாமி மடம் என்ற பெயரில் இன்றும் அந்த இடம் இருந்து வருகிறது.
ஜிஸ்யா வரி
ஔரங்கஜேப் ஜிஸ்யா என்ற பெயரில் வரி விதித்து இந்துக்களைக் கொடுமைப்படுத்தினார் என்பது அவர் மீது சொல்லப்படும் இன்னொரு குற்றச்சாட்டு.
இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்கள்மீது இராணுவச் சேவை கட்டாயமாக்கப் படவில்லை (முஸ்லிம்கள் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும்). எனவே முஸ்லிமல்லா- தவர்களின் பாதுகாப்புக்காக அவர்களிடமிருந்து பெறப்படும் சிறு தொகையே ஜிஸ்யா எனப்படும்
ஜிஸ்யா வரி இந்துக்களைக் கொடுமைப்படுத்துவதற்காக வசூலிக்கப்பட்டது என்று யாராவது கூறினால் ஒன்று அவர்கள் அதன் நடைமுறைகளைப்பற்றி அறிவற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம்கள்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பும் கயவர்களாக இருக்க வேண்டும்.
அதற்கான காரணங்கள் மற்றும் நடைமுறைகள்
- முஸ்லிமல்லாதவர்களிடம் ஜிஸ்யாவைப் போன்று முஸ்லிம்களிடம் ஸகாத் வசூலிக்கப்படும். ஸகாத்திற்காக செல்வந்தர்கள் தமது செல்வத்திலிருந்து இரண்டரை சதவிகிதத்தை வழங்க வேண்டும்.
- முஸ்லிமல்லாதவர் ரூ.2500 சம்பாதித்தால் அதிலிருந்து 13 ரூபாயை ஜிஸ்யாவாக செலுத்த வேண்டும். குறைவாகசம்பாதிப்பவருக்கு அவரதுவருமானத்தைப் பொருத்து பலவிதங்களில் ஜிஸ்யா நிர்ணயிக்கப்படும்.
- தேவைக்கேற்ப இரண்டு மூன்று தவணைகளாக செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
- ஏற்கத் தகுந்த காரணங்களுக்காக ஜிஸ்யா செலுத்தாமல் தாமதமாகி அந்த ஆண்டைக் கடந்துவிட்டால் அந்த ஆண்டின் ஜிஸ்யா தள்ளுபடி செய்யப்படும்
- ஆறுமாத காலம் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவரிடம் ஜிஸ்யா வசூலிக்கப்படாது.
- ஏழைகள்,துறவிகள், ஊனமுற்றவர்கள்,பெண்கள், குழந்தைகள், உழவர்கள் ஆகியோர் ஜிஸ்யாவிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர்.
- இவற்றையெல்லாம்விட ஔரங்கஜேப்பின் ஆட்சியில்தான் அதற்கு முன் நடைமுறையில் இருந்த பல்வேறு வரிகள் ரத்து செய்யப்பட்டன. வரலாற்று அறிஞர் காஃபீகான் அவ்வாறு எண்பது வரிகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
- குறிப்பாக கங்கை நதியில் குளிக்க வரும் யாத்திரீகர்களிடம் பெறப்பட்ட வரி, இறந்த வர்களை எரித்தபின் அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்கான வரி, தீபாவளிப் பண்டிகையின் தீப அலங்காரங்களுக்காக விதிக்கப்பட்ட வரி ஆகியவற்றை ரத்து செய்தார்.
இவையனைத்தும் இந்துக்கள் மட்டுமே செலுத்தி வந்த வரி என்பது குறிப்பிடத் தகுந்தது.(Manoci Stotia Do Mogor 1653 – 1708 Vol 1,2 Constrable and Smith Edn 1908 Caetani Amalidelle Islam vol 4 p.162, Vol 5, p.449 – Census of india 1911 vol 4 , Balusistan part 1 p. 175 வ.வெ.ஔ.வி.பி) செ.திவான் பக் 117 – 135)
இவற்றை நடுநிலையோடு பார்த்தால் ஜிஸ்யா என்பது இந்துக்களைக் கசக்கிப் பிழிந்த கொடுமை என்று யாரும் கூற மாட்டார்கள். மனதிருப்தியோடு அந்தக் காலத்து மக்களால் வழங்கப்பட்ட தொகையை பிரிட்டிஷார் தமது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தினார்கள். இன்று மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக மதவெறிக் கும்பல் பயன்படுத்துகிறது.