25) பீர் முஹம்மது பாவலர்
25) பீர் முஹம்மது பாவலர்
விடுதலை நெருப்புக்கு தம் கவிதை வரிகளால் கனல் வார்த்தவர் கம்பம் பீர் முஹம்மது பாவலர். காந்தியின் கதர் இயக்கத்திற்காக தன் காலம் முழுவதையும் அர்ப்பணித்தவர். திருச்சி கல்லூரியில் இண்டர் மீடியட் வரை படித்த பாவலர், ஆங்கில அரசின் காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கையிலெடுத்து குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து குறுகிய காலத்தில் திறமையான அதிகாரி என்று பெயரெடுத்தார்.
இந்த நிலையில் நாட்டு விடுதலைக் காக உங்கள் பட்டம் பதவிகளைத் துறந்து விடுங்கள் என்ற அறிவிப்பைக் கேட்டு, 1923 ஆம் ஆண்டு தனது பதவியைத் துறந்தார். அதன் பிறகு அவரைத் தேடி வந்த தாசில்தார் பதவியையும் வெறுத்து ஒதுக்கினார். அதன் பின் ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரப் பேச்சுப் போராளியாக உருவெடுத்தார்.
அவரது பேச்சினால் எழும் பிரளயத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் பேசுவதற்கு தடை விதித்தனர். உடனே வாயில் துணியைக் கட்டிக் கொண்டு தன் உடல் மொழியால் மக்களுக்கு உணர்ச்சியூட்டினார்.
1941 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவருடன் மைதீன் பிள்ளை இராவுத்தர், எஸ்.எஸ். மரைக்காயர், போடி கான் முஹம்மது புலவர், கே.சி. முஹம்மது இஸ்மாயீல், வழக்கறிஞர் எம்.கே. மீரான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆறு மாத சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. அபராதம் கட்ட மறுத்ததால் ஒராண்டு காலம் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது எழுத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பதை ஆங்கிலேயர்எடுத்த நடவடிக்கையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பாவலரின் 13 கையெழுத்துப் பிரதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சேறுவதற்கு முன்பே தேசத்துரோக புத்தகங்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நெருப்பிலிட்டுக் கொளுத்தப்பட்டது.
(வி.போ.மு) வி.என்.சாமி பக் 649-654, (இ.வி.போ.த.மு) நா.முகம்மது செரீபு பக்.123, (தி.நி.ப) பேராசிரியர் அப்துஸ் ஸமது பக். 95-96)