04) முந்தி நிற்கும் தொந்தி

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

04) முந்தி நிற்கும் தொந்தி

சாந்திமாய்ராய்அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு என்றொரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலூக்கு அணிந்துரை வழங்கியுள்ள பி.சி.ஜோசி, சில இந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முஸ்லிம்களின் தியாகங்களைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

அவர்களால் மறைக்கப்பட்டதை வெளிக் கொணர்வதே இந்நூலின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். (விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு. சந்திமாய் ராய் இந்திய விடுதலைப் போரும், தமிழக முஸ்லிம்களும் (இ.வி.த.மு) முனைவர் நா. முகம்மது செரீபு தமிழ்மணி நிலையம் 2006)

சுதந்திரத்திற்குச்சொந்தம் கொண்டாட நினைத்தால் இந்தியாவில் எந்தச் சமூகமும் முஸ்லிம்களின் அருகில் கூட நிற்க முடியாது என்பது தான் உண்மை.

மற்றவர்களை மட்டம் தட்டுவதாக யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. விடுதலை வேள்வியில் பங்கெடுத்த நமது முன்னோர்களின் தியாகம் அது சிறியதோ பெரியதோ எதுவும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

சுதந்திரத்திற்காகஎடுத்து வைக்கப்பட்ட சிறு துரும்பும்கூட பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரத்தில் முஸ்லிம்கள் நிகழ்த்திய துணுக்குகளை விடுங்கள் பேரற்புதங்கள்கூட பேசப்படுவதில்லை என்றால் அதற்கு என்னதான் பொருள்?

500-1000 பக்கங்களில் எழுதப்படும் பெரும், பெரும் வரலாற்று நூல்களில் கூட முஸ்லிம்களின் பெயர்கள் மூன்று நான்கு இடங்களைத் தாண்டி முக்கியத்துவம் பெறாமல் போகிறதே! அது ஏன்? என்று தான் கேட்க விரும்புகிறோம்.

மிகச் சிறந்த எழுத்தாளரும், இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உலகறியச் செய்தவரும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய வருமாகிய குஷ்வந்த் சிங் கூறுகிறார்…

இந்தியவிடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர்களே அதிகம். அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைக்காக உயிர் கொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்.

(இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975 குஷ்வந்த் சிங்)

ஒரு செய்தியைத் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே வரும்போது வழியில் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டிய முக்கியமான கட்டத்தில் ஒரு முஸ்லிம் தியாகியின் பெயர் வந்தால் கூட, அங்கே ஒரு லாங்க் ஜம்ப் செய்து தாவிச் செல்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் பல வரலாற்று ஆசிரியர்கள்.

உதாரணத்திற்கு ஒன்று

மொகலாய வம்சத்தின் கடைசி மன்னர் பகதூர்ஷா ஜஃபர் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு (பர்மா, மியான்மர்) நாடு கடத்தப்பட்டார்.

அடக்கம் செய்யப்படுவதற்கு இந்திய மண்ணில் இரண்டு கெஜ நிலம் கூட இல்லாமல் போனதே என்ற கண்ணீரோடு அங்கேயே காலமானார்.

16-12-1987-ல், பர்மாவுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பகதூர்ஷாவின் சமாதியில் எழுதப்பட்டிருந்த இரண்டு கெஜம் கவிதையைப் படித்தவர் கண்கலங்கி விட்டார். அங்கிருந்து வெளியேறும்போது பார்வையாளர் பதிவேட்டில் தன் எண்ணங்களைப் பதிவு செய்தார்.

ஜஃபர்! இரண்டு கெஜ நிலம் இந்துஸ்தானத்தில் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உனது தியாகத்தால் உதித்தது. பாரத நாட்டின் பெயரிலும் புகழிலும் உன் பெயர் கலந்து விட்டது.

இந்திய சுதந்திரப் போராளிகளின் தானைத் தலைவனாக விளங்கிய தளபதியே உனக்கு என் வீர அஞ்சலியைச் செலுத்துகிறேன். சுதந்திரப் போரில் நாம் வென்றோம். இன்னொரு முறை அடிமைத் தளையில் அகப்படமட்டோம்.

வேற்றுமைகள் பல இருப்பினும் அவற்றிற்கு இடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்போம்.அஹிம்ஸை, சகிப்புத் தன்மை அனைத்தையும் கைக்கொள்வோம். ஐயாயிரம் ஆண்டு கால சமயங்களின் சங்கம வரலாற்றை சிதைவுறாமல் பாதுகாப்போம் என்று எழுதிவிட்டு வந்தார்.

1985 முதல் ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தியின் பேச்சுக்களும், எழுத்துக்களும், இந்திய அரசின் தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகத்தின் சார்பில் தொகுப்பாக வெளியாகிக் கொண்டிருந்தது.

1987-ன் கடைசியில் பிரதமரின் பேச்சு மற்றும் எழுத்தின் மூன்றாம் தொகுதி வெளியானது. ஐநூறு பக்கத்திற்கு ஒரு பக்கம் குறைவாக அச்சிடப்பட்ட அந்நூல் பிரதமரின் பர்மா பயணத்தோடு நிறைவடைகிறது. அதிலும் மிகச் சரியாக பகதூர் ஷாவின் சமாதிப் பயணத்திற்கு முந்தைய நாளான 15-12-87 உடன் முடிவடைகிறது.

அதில் சமாதிப் பயணமும் இல்லை, இரண்டு கெஜ கவிதையும் இல்லை, ராஜீவ்காந்தியின் குறிப்பும் இல்லை.(செ.திவான் இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு (இ.சு.பெ.இ.ப) பக்.431-433 சுஹைனா பதிப்பகம் மே 2007 மணிச்சுடர் நாளிதழ் சென்னை 18.12.1987)

இந்தச் செய்தி வெளியிடப்படாத மர்மத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படுகிறது.பொறுப்பு நிறைந்த ஒரு அமைச்சகமே அதைக் கண்காணிக்கிறது. அதுவும் நாட்டின் பிரதம அமைச்சர் சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால்அரசின் முக்கிய ஆவணத்தைப் போன்றது. பர்மாவுடனானஇந்தியாவின் நெருக்கத்தையும்நேசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று.

அதைவிட ராஜீவ்காந்தியின் எழுத்தாற்றலையும் தேசப்பற்றையும் பறைசாற்றும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பு.

இவ்வளவுமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அரசுத் தொகுப்பில் அச்சேறாமல் போனது எப்படி? ஆவணம் தவறினாலும் சரி. செத்துப் போன பகதூர் ஷா மீண்டும் அரியணை ஏறிவிடக் கூடாது. ராஜீவின் புகழ் குறைந்தாலும் முஸ்லிம்களின் தியாகம் உயர்ந்து விடக்கூடாது என்பதைத் தவிர இதன் பின்ணணியில் வேறென்ன இருந்திருக்க முடியும்?

வரலாற்றுப் பேராசான் செ. திவான் கூறுகிறார். ஒருவேளை நாள் குறைவாலோ அச்சுப் பணியின் சிக்கலாலோ இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கலாம். கண்டிப்பாக அடுத்த ஆண்டின் அடுத்த தொகுப்பில் இடம்பெறக்கூடும் என்று எண்ணி அதன் வருகைக்காகக் காத்திருந்தேன்.

ஓராண்டு காலம் கழித்து எண்பத்தி எட்டாம் ஆண்டின் தொகுப்பும் வெளிவந்தது உடனடியாக வாங்கிப் படித்தேன் அதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்கிறார்.

இதுபோன்ற பிரபலமான பல முக்கிய நிகழ்வுகளில் முந்தி நிற்கும் தொந்தியைப் போல தவிர்க்கவே முடியாத முஸ்லிம் தலைவர்கள் கூட விடுபட்டுப் போவது கவனக்குறைவாக நடந்து விடக் கூடியதா? இப்படி ஒரு கவனக் குறைவு முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும்தான் ஏற்படுமா?

மற்றவர்கள் விஷயத்தில் ஏற்பட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படுகின்றன. எத்தனை முறை சுட்டிக் காட்டினாலும் முஸ்லிம்கள் குறித்த செய்தி மட்டும் சீர்திருத்தப்படுவது இல்லையே, ஏன்?

இப்படி ஏராளமான கேள்விகள் இமயமாய் எழுந்து நிற்கின்றன.

இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாகவும், இதைப் பற்றிய ஆய்வுகளுக்குத் தூண்டுதலாகவும் இந்த மண்ணின் மைந்தர்களது மகத்தான வீரத்தையும், மறுக்க முடியாத தியாகத்தையும்மறைக்கப்பட்ட வரலாற்றின்மறுபக்கத்தையும் இனிவரும் வாரங்களில் பார்ப்போம்…