01) முன்னுரை
01) முன்னுரை
முஸ்லிம் தீவிரவாதி (?)
வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்
ஊரான் ஊரான் தோட்டத்திலே,
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி,
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்!
ஆண்டாண்டு காலமாக அடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நம்; ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவர்கள் நமது முன்னோர்கள்.
“ஆங்கிலேயன் வந்தான் ஆசனத்தைக் கொடுத்து விட்டு அகன்று போ என்றான்”, “விளைந்திட்ட காய்களுக்கும், விற்கின்ற கனிகளுக்கும் வரி கொடு என்றான்”, “இங்குள்ள வளங்களையெல்லாம் வாரிச் சுருட்டி, இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துச் சென்றான்”.
எனக்கும், என் தேசத்திற்கும், என் உழைப்பிற்கும், எவ்வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவன் என் வீட்டிற்குள் புகுந்து, என் உழைப்பைச் சுரண்டி, என்னையே அடிமைப்படுத்தி, என் மீது ஆதிக்கம் செய்கிறானே என்று ஆர்ப்பரித்து எழுந்த போது இந்தியர்கள் அனைவரையும் கசக்கிப் பிழியவும், எதிர்ப்பின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யவும் வெள்ளையர் கண்டெடுத்த ஆயுதமே பிரித்தாளும் சூழ்ச்சி.
இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணையவிடாமல் தடுத்து விட்டால் நம்முடைய இருப்புக்கு கேடுகள் நேராது என்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை வக்கிரமாக எழுதி வாசிக்கக் கொடுத்தார்கள். அதை வாங்கிப் படித்தவர்கள் நெஞ்சில் முஸ்லிம்களுக்கெதிரான நஞ்சை விதைத்தார்கள்.
விளைவு, இந்துக்களும் முஸ்லிம் களும் முட்டிக் கொண்டனர். வெள்ளையன் தனது கொள்கையை வெற்றிகரமாக செய்து முடித்தான்.
அன்று அவன் செய்த வேலையை சிலர் இன்றும் தொடர்கிறார்கள். காலத்திற்கேற்ப காட்சியை மாற்றி, ஏலத்திற்கேற்ப விலையையும் கூட்டி இந்தியச் சந்தையில் அதை விற்பனை செய்து வருகிறார்கள்.
“விற்கப்படும் கடைச் சரக்கே, இந்த தொடரின் தலைப்பு”
கடைச் சரக்கென்றால் கலப்படம் இல்லாமலா? சர்க்கரைக்குள் ரவையும், தேயிலைக்குள் சாயமும் நம்மால் சகித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்காக பாலுக்குள் கள்ளிச் சாறும், கரும்புச் சாறுக்குள் அரளி விதை நீரும் கலக்கப்பட்டால்..?
“இக்கேள்வியின் பரிதவிப்பே இந்த தொடரின் பிரதிபலிப்பு”
இந்து முஸ்லிம் எனும் இணை பிரியா இன்பச் சங்கமத்தை இரண்டாக்கத் துடிக்கும் ஆங்கிலேயர் காலத்து வாதங்களும், பொய்யான பல வரலாறுகளும் நம்மைச் சுற்றிலும் வலம் வருகின்றன. அதன் பொய் முகம் கிழித்து உள்ளிருக்கும் உள்ளார்ந்த அன்பை உணரச் செய்வதுதான் இந்த தொடரின் நோக்கம்.
முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கருதுவதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமானவை. அந்த மூன்று பிரிவுகளையும் இந்தத் தொடர் உள்ளடக்கியிருக்கிறது.
- தேச விடுதலையில் முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டிருப்பது
- முஸ்லிம் மன்னர்களின் வரலாறு உண்மைக்குப் புறம்பாக திரிக்கப்பட்டிருப்பது
- இஸ்லாமிய மார்க்கமும், முஸ்லிம் களின் வாழ்வும் மிகைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்லப்படுவது.
இம்மூன்று விஷயங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டியவை. காலத்தின் அவசியத்தையும்,தொடரின் விரிவையும் கவனத்தில் கொண்டு மிகவும் சுருக்கமாகவே இந்தத் தொடர் எழுதப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பற்றிய பார்வையை உண்மையான திசை நோக்கித் திருப்பிவிடும் வேலையை மட்டுமே இதன் மூலம் செய்ய முயன்றுள்ளேன்.
இதனை வாசிப்பவர்கள் யாரேனும் இந்தத் துறை சார்ந்த அறிவும், அதனை தொகுப்பதற்குரிய ஆற்றலும் பெற்றிருந்தால் உடனடியாகத் தம் ஆய்வைத் துவக்கி, மக்களின் அறிவுக் கண்களை திறந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.