இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்சியமும் சமமா?

கேள்வி-பதில்: பெண்கள்

இரண்டு ஆண் சாட்சியமும் ஒரு பெண் சாட்சியமும் சமமா?

இஸ்லாம் இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாக கூறுவது உண்மை தான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلْ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنْ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَاأَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى (282)2

கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.

அல்குர்ஆன் (2 : 282)

2658حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدٌ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا رواه البخاري

அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், “ஆம் (பாதியளவு தான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறினார்கள்.

புகாரி (2658)

இந்த சட்டம் பெண்களை மட்டம் தட்டுவது போல் சிலருக்குத் தோன்றலாம்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத் திறனுக்கும் சான்றாக உள்ளது.

சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத்திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ள போது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருதுவது ஏன் என்றும் சிலர் நினைக்கலாம்.

பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவுத் திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.

நல்ல, கூரிய மதி உடைய ஆண் மகனின் அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களே உங்களுக்குத் திறமை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பார்க்க:(புகாரி: 304, 1462)

அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களையே தர்க்க ரீதியாக மடக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் இவை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும்.

ஆனால் சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல், அறிவுத் திறன் என்ற இரண்டு தகுதிகள் மட்டும் போதுமா? நிச்சயமாகப் போதாது! இவ்விரண்டை விட மிக முக்கியமான தகுதி ஒன்று அவசியம். உள்ளதை உள்ளபடி கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் கூற வேண்டும். இந்தத் தகுதி தான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம்.

சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர் காலத்தை முடிவு செய்வதுமாகும்.

தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.

பதற்றமின்றி பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும் போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.

இந்தச் சோதனைகளின் போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத் தான் இக்கருவிகள் பெரும்பாலும் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின் போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.

எனவே தான் இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது.

மேலும் சாட்சி கூறுவதற்காக அதற்கான சபைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்பவர்கள் எதிரிகளால் மிரட்டப்படுவதை சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.

ஆண்களை விடப் பெண்கள் மிரட்டலுக்கு அதிகம் அஞ்சுவார்கள் என்பதும் இரு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமமாக்கப்பட்டதற்கான காரணமாகும்.