33) நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்
33) நபியின் கூற்றுக்கே முதலிடம் கொடுத்தவர்
நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செயல்படுத்துவதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தீவிர கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறு செயல்படுத்தும் போது பலருடைய கோபத்திற்குத் தான் ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை. அல்லாஹ்வின் தூதரே தனக்கு முக்கியம் என்பதை அவர்கள் கடைப்பிடித்துக் காட்டியுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்ட பிறகு நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூபக்ர் (ரலி) யிடம் கேட்டார்கள். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்கள் சொத்துக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்று ஃபாத்திமாவுக்குப் பதிலளித்தார்கள்.
இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டு விட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர் ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விடமாட்டேன். ஏனெனில் அவர்களது செயல்களில் எதனையாவது நான் விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.