32) பித்அத்தான காரியத்தை எதிர்த்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

32) பித்அத்தான காரியத்தை எதிர்த்தவர்

நபி (ஸல்) அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அஞ்சினார்கள். இந்தப் பயம் நம் சமுதாய மக்களிடத்தில் இருந்தால் நபிவழியில் இல்லாத புது புது வழிபாடுகள் நம்மிடத்தில் நுழைந்திருக்காது.

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமும் நமக்குத் தூய வழியில் கிடைத்திருக்கும். இனிமேலாவது அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையிலிருந்து முறையான பாடங்களைப் பெற்று பித்அத்தை அங்கீகரிக்காமல் இருப்போமாக.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியில் நியமிக்கப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செய்யாமல்) விட்டிருந்த விஷயங்கள் தொடர்பாக அப்பாஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடத்தில் விவாதித்தார்.

(இது பற்றி அபூபக்ர் (ரலி) யிடம் அப்பாஸ் (ரலி) கூறிய போது) அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்படுத்தாமல் விட்டுவிட்ட விஷயம். எனவே நான் அதை முடுக்கி விடமாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத்: 77, 73)

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். அவர்களுக்கு அருகில் உமர் பின் கத்தாப் (ரலி) இருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) (என்னிடம்) கூறினார்கள்.

உமர் அவர்கள் என்னிடம் வந்து இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். பல்வேறு இடங்களில் குர்ஆனை அறிந்த அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு விட்டனர். எனவே குர்ஆனைத் தாங்கள் திரட்டினால் தவிர அதன் பெரும் பகுதி (நம்மை விட்டுப்) போய்விடுமோ என்று என நான் அஞ்சுகிறேன்.

ஆகவே தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான காரியம்) தான் என்று கூறினார்கள்.

இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) உமர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். முடிவில் உமர் கருதியதை நானும் (உசிதமானதாகக்) கண்டேன்.

(புகாரி: 4679)