28) அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

28) அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டவர்

நபி (ஸல்) அவர்கள் மரண வேளையில் இருக்கும் போதே அபூபக்ர் தான் அடுத்த ஆட்சித் தலைவர் என்று நபியவர்கள் தெளிவாகவும், மறைமுகமாகவும் அறிவித்துவிட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தனது இறுதி நாட்களில்) நோயுற்றிருந்த போது உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்து வா. நான் மடல் ஒன்றை எழுதித் தருகிறேன். ஏனென்றால் (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ நானே (அதற்குத்) தகுதியானவன் என்று யாரும் சொல்லிவிடவோ கூடும் என நான் அஞ்சுகிறேன்.

(ஆனாலும் அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறை நம்பிக்கையாளரும் மறுத்து விடுவர் என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 4757)

தாம் இல்லாத போது தமது பணியை அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்வார்கள் என்பதை ஒரு பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மனி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மனியைத் திரும்பவும் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மனி நான் வந்து தங்களைக் காணமுடியவில்லையென்றால் ….? என்று நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் (என்ன செய்வது) என்பது போல் கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ரிடம் செல் என்று பதில் சொன்னார்கள்.

(புகாரி: 3659)

அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தமக்குப் பின் ஆட்சிக்கு வருவார். அவர்களது ஆட்சி சொற்பக் காலத்தில் முடிவடைந்து விடும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் கணவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கினார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது.

அல்லாஹ் அவரை மன்னிப்பானாக, பிறகு அதை உமர் எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரையும் நான் கண்டதில்லை.

(புகாரி: 3634)