19) பணிவால் உயர்ந்தவர்
19) பணிவால் உயர்ந்தவர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். என்றாலும் எந்த ஒரு நேரத்திலும் தம் புகழையும், தியாகத்தையும் தாமே வெளிப்படுத்திக் கூறும் பண்பு அவர்களிடத்தில் தோன்றியதில்லை.
மாறாக பணிவையும் அடக்கத்தையும் தான் அவர்கள் வாழ்வில் காண முடிகிறது. இறைப் பணிக்காக ஏதாவது நல்லது செய்தால் அதைச் சுட்டிக்காட்டி பதவியை அடைவதற்கு முனைபவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடத்தில் இருந்த இப்பண்பைக் கட்டாயம் பெற வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அபூபக்ரின் பொருளைத் தவிர (வேறு எவரின்) பொருளும் எனக்குப் பயன்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுது கொண்டே உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான். உங்களின் மூலமாக அல்லாஹ் எனக்குத் தான் பலனைத் தந்தான் என்று கூறினார்கள்.
ஒருவன் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்று விட்டால் அவனுடைய நடை உடை பாவனையில் பெருமை அகம்பாவம் கலந்து விடுகிறது. தன் உயர்வுக்குக் காரணமானவர்களிடத்திலேயே ஆணவத்துடன் நடந்து கொள்வான். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மக்களுக்குத் தொழ வைக்கும் உயரிய அந்தஸ்து கொடுக்கப்பட்டது. என்றாலும் அவர்களிடத்தில் பணிவு அதிகரித்ததே தவிர அகம்பாவம் தலை தூக்கவில்லை.
ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் அவ்ப் கூட்டத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் சென்றிருந்த போது அங்கு தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்போது பாங்கு சொல்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நான் இகாமத் சொல்லட்டுமா? நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள்.
இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டிய போது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி (ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பார்த்து உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள் என்று சைகை செய்தார்கள்.
தமக்கு நபி (ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அபூபக்ர் பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள்.
தொழுது முடித்ததும் அபூபக்ரே நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பிறகும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின்வாங்கி விட்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூகுஹாபாவின் மகனான அபூபக்ர் அல்லாஹ்வின் தூதர் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
பெருமையடிப்பவரில்லை என்று நபி (ஸல்) அவர்களே சான்று தரும் விதத்தில் பணிவுடன் வாழ்ந்து காட்டியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறிதாவது:
எவன் தன் ஆடையை தற்பெருமையின் காரணத்தினால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க் மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதை பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு தம்மை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடுத்த ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களைத் தேர்வு செய்யுமாறு அடக்கத்துடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அந்தஸ்தையும் மரியாதையையும் தேடித் திரியாமல் தானாக வரும் போது அதில் முந்திக் கொள்ளாமல் பிறரை முற்படுத்தி பணிவுடன் அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் கத்தாப் அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் (அன்சாரிகளிடம்) சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்.
எங்களில் சிறந்தவர். எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாய் இருந்தவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.