10) மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

10) மார்க்கத்திற்கே முன்னுரிமை தந்தவர்

மார்க்கத்தின் அருமையைப் புரியாதவர்கள் மார்க்கத்தை விடவும் மற்றவைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைப் பெரும் பொக்கிஷமாக எண்ணி பல தியாகங்களைச் செய்து ஏற்றுக் கொண்டதால் இதன் அருமையை உணர்ந்து மற்ற அனைத்தையும் விட மார்க்கத்திற்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.

وحَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ أَبِي سُفْيَانَ، وَسَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ
بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَوْمَ الْجُمُعَةِ، إِذْ قَدِمَتْ عِيرٌ إِلَى الْمَدِينَةِ، فَابْتَدَرَهَا أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى لَمْ يَبْقَ مَعَهُ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا، فِيهِمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ، قَالَ: وَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} [الجمعة: 11]

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவுடைய நாளில் நின்று (உரையாற்றிக்) கொண்டிருந்த போது ஒரு ஒட்டகக் கூட்டம் (வியாபாரப் பொருட்களுடன்) வந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரும் அதை நோக்கிச் சென்று விட்டார்கள். இறுதியாக அவர்களுடன் 12 நபர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

(நபி (ஸல்) அவர்களுடன் இருந்த) அவர்களில் அபூபக்ரும் உமரும் அடங்குவர். (முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்றுவிடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும் வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன் என கூறுவீராக என்ற வசனம் (62 : 11) இறங்கியது.

(முஸ்லிம்: 1568)

வணக்க வழிபாடுகளை வீட்டிற்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இப்னு தகினா அடைக்கலம் கொடுத்தார். ஆனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு பகிரங்கமாகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: 

உடனே இப்னு தகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து எந்த அடிப்படையில் நான் உனக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர். நீ அதன்படி நடக்க வேண்டும். இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்து விட வேண்டும்.

இப்னு தகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறி விட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் பேசக் கூடாது என்று நான் விரும்புகிறேன் எனக் கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உன்னிடமே திருப்பித் தந்து விடுகிறேன். அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன் என்று கூறினார்கள்.

(புகாரி: 2297)

வேறுபட்ட இரு மதங்களைத் தழுவியவர்கள் ஒருவருக்கொருவர் வாரிசாக முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது. தம் மகன் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்த போது இந்தச் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தம் வாரிசாக அவரை ஆக்க மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்திமிட்டுக் கூறினார்கள். மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு உறவினர்கள் அழைக்கும் போது மார்க்கத்தை உதறிவிட்டு உறவை தேர்வு செய்பவர்கள் இந்த நிகழ்விலிருந்து படிப்பினை பெறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உம்மு சஃத் பின்த் ரபீஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நீங்கள் யார் விஷயத்தில் (வாரிசாக ஆக்க மாட்டேன் என்று) சத்தியம் செய்தீர்களோ அவர்களுக்கு அவர்கள் பங்கைக் கொடுத்து விடுங்கள். (4 : 33) இந்த வசனம் அபூபக்ர் மற்றும் அவரது மகன் அப்துர் ரஹ்மான் விஷயத்தில் தான் இறங்கியது. அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்க மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானை தனது வாரிசாக நான் ஆக்க மாட்டேன் என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். பின்பு அவர் இஸ்லாத்தைத் தழுவிய போது அவருக்குரிய பங்கை அவருக்குக் கொடுக்குமாறு அல்லாஹ் தன் நபிக்குக் கட்டளையிட்டான்.

(அபூதாவூத்: 2923, 2534)