06) மக்களில் மிக அறிந்தவர்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

06) மக்களில் மிக அறிந்தவர்

அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி கோத்திரத்தாரின் வம்சாவழித் தொடரைப் பற்றி மக்களில் மிக அறிந்தவராக இருந்தார்கள். ஒட்டு மொத்த குரைஷிகளின் வம்சாவழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமானால் விசாலமான அறிவும் சிறந்த மனன சக்தியும் தேவைப்படும். இந்த ஆற்றலை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

(குரைஷியர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்த போது தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களைக் கிழித்தெறிவேன் என்று ஹஸ்ஸான் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரப்படாதீர். அபூபக்ர் குரைஷிகளின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குரைஷியரோடு எனது வமிசமும் இணைந்துள்ளது. அபூபக்ர் உம்மிடம் எனது வமிசாவளியைத் தனியாப் பிரித்தறிவிப்பார் என்று கூறினார்கள். ஆகவே ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 4903)

நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு சமயோசித அறிவை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்றார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அழ ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த முதியவர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்தெடுக்க ஒரு அடியாருக்கு அல்லாஹ் சுதந்திரம் அளித்த போது அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக அழ வேண்டுமா என்ன? என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன்.

அந்த அடியார் நபி (ஸல்) அவர்கள் தாம். (தமது மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு நான் அறிந்து கொண்டேன்). அபூபக்ர் (ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

(புகாரி: 466)

மக்கத்து இணை வைப்பாளர்களிடமிருந்து தப்பித்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம் செய்த போது தனது சீறிய அறிவைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களை மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் தொடர மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூத்தவராகவும் அறிமுகமானவராகவும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளையவராகவும் அறிமுகமற்றவராகவும் இருந்தார்கள்.

(அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் சென்ற பயணத்தின் போது) அபூபக்ர் (ரலி) அவர்களை ஒரு மனிதர் சந்தித்து அபூபக்ரே உமக்கு முன்னால் உள்ள இந்த மனிதர் யார்? என்று கேட்கிறார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த மனிதர் எனக்கு வழிகாட்டுபவர் என்று (நபி (ஸல்) அவர்களை எதிரிக்கு காட்டிக் கொடுத்து விடாமலும் அதே சமயம் உண்மைக்குப் புறம்பில்லாமலும் இரு பொருள் படும்படி) பதிலளித்தார்கள்.

இதற்கு (பயணத்தில்) பாதை (காட்டுபவர்) என்றே அபூபக்ர் பொருள் கொள்கிறார் என எண்ணுபவர் எண்ணிக் கொள்வார். ஆனால் நன்மார்க்கத்திற்கு (வழிகாட்டுபவர்) என்ற பொருளையே அபூபக்ர் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 3911)