01) முன்னுரை
01) முன்னுரை
உண்மைத் தோழர் அபூபக்ர் (ரலி) அவர்களின் உண்மை வரலாறு
மறைந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறு மக்களைப் பண்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. செய்ய வேண்டிய காரியங்கள் செய்யக்கூடாத காரியங்கள் இவைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் மனங்களில் குறைவாகவே மாற்றங்கள் ஏற்படும். எனவே தான் உலக மக்களின் வாழ்க்கை வழிகாட்டியான திருக்குர்ஆனில் நல்லவர்களின் வரலாறு பெரும்பகுதியைப் பிடித்திருக்கிறது.
சிறந்தவனாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் நபித்தோழர்களின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் நிறைந்திருக்கின்றன. நல்ல விஷயத்தில் அவர்களைப் போன்று வாழ்ந்தவர்களுக்கு மறு உலக வாழ்வில் வெற்றி இருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
சில நபித்தோழர்களின் வரலாறு தமிழில் எழுதப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. ஹதீஸ் கலையின் விதிகளைப் பேணாமல் தொகுத்ததின் விளைவால் அவற்றில் பல பொய்யான செய்திகளும் பலவீனமான தகவல்களும் நிறைந்து காணப்படுகின்றன. நூலைத் தொகுத்தவர்கள் எந்த நூலில் இருந்து செய்திகளை எடுத்தார்களோ அந்த நூற்களை பாகம் பக்கத்துடன் கூறவில்லை.
ஹதீஸ் எண்களையும் கூறவில்லை. அரபு மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை மாத்திரம் கவனத்தில் வைத்து தொகுக்கப்பட்டதால் புகாரி முஸ்லிம் அபூதாவுத் திர்மிதி போன்ற பிரபலமான நூற்களில் நபித்தோழர்கள் தொடர்பாக வரும் படிப்பினைகளைத் தரும் எத்தனையோ செய்திகளை அவர்கள் தவற விட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அடுத்து வந்த ஆட்சித் தலைவரும் இஸ்லாத்திற்காக எண்ணில் அடங்காத தியாகங்களை செய்தவருமான அபூபக்ர் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் இச்சமுதாயத்திற்கு ஏராளமான படிப்பினைகள் படர்ந்து காணப்படுகின்றன. எனவே முதலாவதாக அவர்களுடைய வாழ்க்கையை ஆதாரப்பூர்வமான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுத்துத் தந்துள்ளோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே