13) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்-2

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

13) நபி (ஸல்) அவர்களும் அற்புதங்களும்

வழிகெட்டவர்களின் வாதம்

நபி (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சிலவேளை விமர்சனம் செய்தனர்.

வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்கு சூனியம் வைக்கப்பட்டு அதனால் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

(அல்குர்ஆன்: 51:52)

நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்   என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 26:153)

நீர் சூனியம் செய்யப்பட்டவர்   என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 26:185)

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக!  மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்   என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

(அல்குர்ஆன்: 17:101)

மற்ற நபிமார்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக எதிரிகள் விமர்சனம் செய்ததைப் போலவே நபி (ஸல்) அவர்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்ததாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

(அல்குர்ஆன்: 17:47)

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?   என்றும்  சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்   என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 25:8)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று சொல்பவர்கள் அநியாயக்காரர்கள் என்று இவ்வசனங்கள் பிரகடனம். செய்கின்றன. இறைத்தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாதாரண விஷயம். அதனால் அவரது தூதுப்பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றிருந்தால் இவர்கள் செய்த விமர்சனத்தை இறைவன் மறுக்க மாட்டான்.

இறைத் தூதர் சாப்பிடுகிறார் குடிக்கிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்ட போது சாப்பிடுவதாலோ குடிப்பதாலோ தூதுப் பணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் அதை இறைவன் மறுக்கவில்லை. எல்லாத் தூதர்களும் சாப்பிடத் தான் செய்தார்கள் என்று பதிலளித்தான்.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?   என்று கேட்கின்றனர்.

(அல்குர்ஆன்: 25:7)

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போ ராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். இன்னும் பொறுமை யைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, மற்றும் சிலருக் குச் சோதனையாக ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 25:20)

ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறிய போது அநியாயக்காரர்கள் இப்படியெல்லாம் கூறுகிறார்களே என்று மறுத்துரைக்கிறான். சூனியம் வைக்கப்பட்டு இறைத்தூதர் பாதிக்கப்பட்டால் அது தூதுப் பணியைப் பாதிக்கும் என்பதால் தான் இதை மறுக்கிறான். நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் வரம்பு மீறியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர். எனவே (முஹம்மதே!) அவர்களை அலட்சியம் செய்வீராக! நீர் குறை கூறப்பட மாட்டீர்.

(அல்குர்ஆன்: 52:52)

சூனியக்காரன் வெற்றி பெறமாட்டான்

யூதர்கள் நபி (ஸல்) அவர்களைத் தாக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தனர். நபியவர்களுக்கு சூனியம் செய்து அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தங்களது முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டார்கள் என்று நம்புவது குர்ஆனிற்கு மாற்றமானது. ஏனென்றால் சூனியக்காரன் வெற்றிபெற முடியாது என்று குர்ஆன் கூறுகிறது.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்   (என்றும் கூறினோம்.)

(அல்குர்ஆன்: 20:69)

நல்லவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் செய்ய முடியாது

சூனியம் என்பது ஒரு வித்தை தான். இதனால் யாரையும் முடக்க முடியாது என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுகிறது. ஒரு பேச்சிற்கு சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்று வைத்துக் கொண்டாலும் சூனியத்தினால் நல்லவர்களுக்கு எந்தத் தீமையும் செய்ய முடியாது.

நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானிற்கு) எந்த ஆதிக்கமும் இல்லை. அவனைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு ஆதிக்கம் உள்ளது.

(அல்குர்ஆன்: 16:99)

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

(அல்குர்ஆன்: 26:221)

ஷைத்தான் நல்லவர்களை ஒன்றும் செய்ய முடியாதென்றும் தீயோர்களின் மீது தான் அவனது ஆதிக்கம் உள்ளது என்றும் இந்த வசனம் கூறுகிறது. சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானின் ஆதிக்கத்திற்கு உள்ளானார்கள் என்று கூறினால் நபி (ஸல்) அவர்கள் நல்லவர்கள் இல்லை.

இறைவனின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவும் இல்லை. ஷைத்தானைக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டார்கள். இணை வைத்தார்கள். இட்டுகட்டும் பாவியாக இருந்தார்கள் என்றெல்லாம் மிகவும் மோசமான கருத்துக்களை கூற வேண்டிவரும்.

சூனிய நம்பிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது என்பதால் நபி (ஸல்) அவர்கள் சூனியத்தை நம்பக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள். சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று கூறினார்கள்.

நிரந்தரமாக மது அருந்துபவன் உறவுகளைப் பேணாதவன் சூனியத்தை உண்மை என்று நம்பியவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)

(அஹ்மத்: 18748)

எனவே நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று நம்புவது அவர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் இழுக்கை ஏற்படுத்தும். நம்முடைய கொள்கைக்கு ஊறு விளைவிக்கும்.

அடிப்படையற்ற விளக்கம்

இந்த வசனம் அருளப்படும் போது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்படாமல் இருந்து பின்னர் சூனியம் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? என்று சிலர் விளக்கம் கொடுக்கலாம். இது ஏற்க முடியாத விளக்கம்.

பின்னர் சூனியம் வைக்கப்படும் என்றால் அது நிச்சயம் இறைவனுக்குத் தெரிந்திருக்கும். நாளைக்கு வைக்கப்படும் சூனியத்தை அறிந்த இறைவன் இன்றைக்கு அதை மறுப்பதால் எந்த நன்மையும் இல்லை. மேலுள்ள வசனங்களையும் பின்வரும் வசனங்களையும் கவனித்தால் இந்த விளக்கம் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?   என்றும்  சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்   என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் (நேர்) வழி அடைய இயலாது.

(அல்குர்ஆன்: 25:8)

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதனையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள் என்று கவனிப்பீராக! எனவே அவர்கள் வழி கெட்டனர். அவர்கள் (நேர்) வழியை அடைய இயலாது.

(அல்குர்ஆன்: 17:47)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று கூறுபவர்கள் வழிகெட்டவர்கள் என்று அல்லாஹ் இந்த வசனங்களில் பிரகடனம் செய்கிறான். சூனியம் செய்யப்பட முடியாத ஒருவரை சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறுகிறார்களே என்பதால் தான் உம்மை எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதைக் கவனியும் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் தெளிவான தீர்ப்பின் படி நபிகள் நாயகத்திற்கோ வேறு எந்த இறைத்தூதருக்கோ எவரும் சூனியம் செய்யவோ முடக்கவோ முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

முரண்பாடுகள்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டபோது அப்புறப்படுத்தவில்லை. அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக(புகாரி: 3268, 5763, 5766)ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று(புகாரி: 5765, 6063)வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்புகளிலும் முரண்பாடு காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக(புகாரி: 5765, 6063)ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால்(நஸாயீ: 4012)வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அங்கு செல்லாமல் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும் அப்புறப்படுத்திய பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.(அஹ்மத்: 18467)வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

எநதப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் இருந்தது. அப்போது நீங்கள் வெளியேற்றிவிடவில்லையா என்று நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறியதாக(புகாரி: 3268)வது செய்தியில் இடம் பெற்றுள்ளது.

ஆனால்(புகாரி: 5765)வது செய்தியில் இதற்கு மாற்றமாக உள்ளது. சூனியம் வைக்கப்பட்டப் பொருள் வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டப் பொருளை மக்களுக்கு திறந்து காட்டக் கூடாதா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போது தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்களுக்கு இதைத் திறந்து காட்டி அவர்களிடத்தில் தீமையைப் பரப்புவதை நான் விரும்பவில்லை என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக்கொண்டதாகவும் அதன் மூலம் தனக்கு சூனியம் செய்யப்பட்டதை நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும்(புகாரி: 6391)வது ஹதீஸ் கூறுகிறது.(நஸாயீ: 4012)வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து உமக்கு யூதன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான் என்று நேரடியாகக் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்துவிட்டு பிறகு ஆயிஷாவே எனக்கு எதில் நிவாரணம் இருக்கிறது என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துவிட்டான் என்று கூறியதாக(புகாரி: 5763)வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்த உடன் தான் கண்ட கணவை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியதாக(அஹ்மத்: 23211)வது செய்தி கூறுகிறது.

ஆயிஷாவே நான் எதிர்பார்த்த விஷயத்தில் அல்லாஹ் எனக்கு பதிலளித்து விட்டான் என்று நான் உணர்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக(அஹ்மத்: 23165)வது செய்தியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அல்லாஹ் எனக்கு பதிலளித்ததை நீ உணர்ந்தாயா? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டதாக புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ்கள் சொல்கிறது.

இந்த முரண்பாடுகளே இந்த ஹதீஸ் இறைவனிடமிருந்து வரவில்லை என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டது. ஏனென்றால் இறைவனுடைய கூற்றில் எந்த விதமான முரண்பாடும் வராது.

கருத்துப் பிழைகள்

நபி (ஸல்) அவர்கள் கணவில் கண்டதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஆயிஷாவே எனக்கு அல்லாஹ் பதிலளித்ததை நீ பார்த்தாயா? என்று கேட்டதாக(அஹ்மத்: 23211)வது செய்தியில் இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய கனவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட விஷயத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் பார்த்திருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல. நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படியிருக்க நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் எப்படி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்பார்கள்?.

.மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனிற்கு எதிராக அமைந்துள்ளதாலும் அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதினாலும் இதை நாம் ஏற்கக் கூடாது.

இது போன்ற ஹதீஸ்களைத் தான் நாம் ஏற்கக் கூடாது என்று சொல்கிறோம். இவ்வாறு இல்லாத பல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்ளும் படி வலியுறுத்தி வருகிறோம். குர்ஆன் மட்டும் போதும் ஹதீஸ் வேண்டாம் என்று கூறுவோருடன் விவாதம் புரிந்து ஹதீஸின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்குக் கூறி வருகிறோம்.