04) ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

04) ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர் குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது என்று சொல்பவர்களைப் பார்த்து யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள் என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் சொல்லப்படவில்லை என்று யார் கூறுகிறார்களோ அவர்களும் அறியாமையில் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம் பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை.

இமாம் ஷாஃபியின் கூற்று

المسألة الخامسة خبر الواحد إذا تكاملت شروط صحته هل يجب عرضه على الكتاب قال الشافعي رضي الله عنه لا يجب لأنه لا تتكامل شروطه إلا وهو غير مخالف للكتاب

ஒரு ஹதீஸ் சரியாவதற்கான நிபந்தனைகள் முழுமையாகி விட்டால் அதை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா? இது குறித்து இமாம் ஷாஃபி அவர்கள் கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும் என்று கூறியுள்ளார்கள்.

நூல் : அல்மஹ்சூல் பாகம் : 4 பக்கம் : 438

இமாம் குர்துபீயின் கூற்று

والخبر إذا كان مخالفا لكتاب الله تعالى لا يجوز العمل به.

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல் : தஃப்சீருல் குர்துபீ பாகம் : 12 பக்கம் : 213

இமாம் ஜுர்ஜானியின் கூற்று

الحديث الصحيح ما سلم لفظه من ركاكة ومعناه من مخالفة آية

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல் : அத்தஃரீஃபாத் பாகம் : 1 பக்கம் : 113

இமாம் சுயூத்தியின் கூற்று

أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة أو يكون منافيا لدلالة الكتاب القطعية

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 276

இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

ومنها مخالفة الحديث صريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவதாகும்.

நூல் : அல்மனாருல் முனீஃப் பக்கம் : 80

فصل مخالفة الحديث الموضوع لصريح القرآن ومنها مخالفة الحديث لصريح القرآن

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி. ஹதீஸ் குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல் : நக்துல் மன்கூல் பாகம் : 2 பக்கம் : 218

இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று

فأما الوجه الاول وهو ما إذا كان الحديث مخالفا لكتاب الله تعالى فإنه لا يكون مقبولا ولا حجة للعمل به

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல் : உசூலுஸ் ஸர்ஹசீ பாகம் : 1 பக்கம் : 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

وَذَلِكَ أَرْبَعَةُ أَوْجُهٍ أَيْضًا مَا خَالَفَ كِتَابَ اللَّهِ

இதை (நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல் : கஷ்ஃபுல் அஸ்ரார் பாகம் : 4 பக்கம் : 492

وَالْأَوَّلُ عَلَى أَرْبَعَةِ أَوْجُهٍ : إمَّا أَنْ يَكُونَ مُعَارِضًا لِلْكِتَابِ

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல் : ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ் பாகம் : 2 பக்கம் : 368

இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று

وقال ابن الجوزي ما أحسن قول القائل إذا رأيت الحديث يباين المعقول أو يخالف المنقول أو يناقض الأصول فاعلم أنه موضوع

சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள் என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 277

وقال ابن الجوزي الحديث المنكر يقشعر له جلد الطالب للعلم وينفر منه قلبه في الغالب

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக்கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறினார்கள்.!.

நூல் : தத்ரீபுர்ராவீ பாகம் : 1 பக்கம் : 275

அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று

عن الربيع بن خثيم قال إن من الحديث حديثا له ضوء كضوء النهار نعرفه به وأن من الحديث حديثا له ظلمة كظلمة الليل نعرفه بها

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல் : மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ் பாகம் : 1 பக்கம் : 62

முஹம்மது பின் அப்தில்லாஹ்வின் கூற்று :

இந்த அறிஞரின் கூற்றை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்இஹ்காம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

الإحكام لابن حزم  جزء 2 – صفحة 209
 وقال محمد بن عبد الله بن مسرة الحديث ثلاثة أقسام فحديث موافق لما في القرآن فالأخذ به فرض وحديث زائد على ما في القرآن فهو مضاف إلى ما في القرآن والأخذ به فرض وحديث مخالف لما في القرآن فهو مطرح

முஹம்மது பின் அப்தில்லாஹ் என்பார் கூறுகிறார் : ஹதீஸ் மூன்று வகையாகும்.

  1. குர்ஆனிற்கு ஒத்து அமைகின்ற ஹதீஸ் (முதலாவது வகையாகும்). இதை ஏற்றுக் கொள்வது கட்டாயம்.
  2. குர்ஆனில் இருப்பதை விட கூடுதலான தகவலைத் தருகின்ற ஹதீஸ் (இரண்டாவது வகையாகும்). இதையும் குர்ஆனுடன் இணைத்து ஏற்றுக் கொள்வது கட்டாயம்.
  3. குர்ஆனுடைய கருத்திற்கு முரணாக வரும் ஹதீஸ் (மூன்றாவது வகையாகும்). இது ஒதுக்கப்பட வேண்டியது.

நூல் : அல்இஹ்காம் பாகம் : 2 பக்கம் : 209

விதியை செயல்படுத்திய மேதைகள்

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் சரியான அறிவிப்பாளர் தொடரில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைத் தருகின்ற ஹதீஸ்களை ஏற்க மறுத்துள்ளார்கள்.

புகாரி முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்து வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இதற்காக நம்மை விமர்சிப்பவர்கள் இவர்களை வழிகேடர்கள் என்று கூற மாட்டார்கள்.

இந்த அறிஞர் கடைபிடித்த விதியை நாம் கடைப்பிடித்தால் நம்மை வழிகேடர்கள் என்று கூறுகிறார்கள். பின்வரும் செய்திகளைப் படிப்பவர்கள் யார் வழிகேடர்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்வார்கள்.

இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்ற அறிஞர் ஆவார். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார்.

புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதில் தரும் போது இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம்பெற்ற ஒரு ஹதீஸை எப்படி குறை காணுகிறார் என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார்.

அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கூறியுள்ளார்.

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹீம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர்.

மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹீம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை. மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது நீங்கள் கூறுவதைப் போன்று கூறியுள்ளாரா? என்று குருட்டுத்தனமாகக் கேட்பவர்கள் இந்த அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்க வேண்டும்.

இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره

குர்துபீ கூறுகிறார் : கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று மாலிக் அவர்கள் கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70

ஹஜ் செய்வதற்குச் சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்மணி கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸைப் பின்தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தந்துள்ளார்கள்.

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்கச் சரிதான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறிப் பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது இந்த அறிஞர்களுக்கு அக்கரை இல்லை என்று பொருளா?

இமாம் இப்னு தய்மியாவின் வழிமுறை

இப்னு தய்மியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்:

கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான்.

வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 4997)

وَلَوْ كَانَ أَوَّلُ الْخَلْقِ يَوْمَ السَّبْتِ وَآخِرُهُ يَوْمَ الْجُمُعَةِ لَكَانَ قَدْ خُلِقَ فِي الْأَيَّامِ السَّبْعَةِ وَهُوَ خِلَافُ مَا أَخْبَرَ بِهِ الْقُرْآنُ مَعَ أَنَّ حُذَّاقَ أَهْلِ الْحَدِيثِ يُثْبِتُونَ عِلَّةَ هَذَا الْحَدِيثِ مِنْ غَيْرِ هَذِهِ الْجِهَة

சனிக்கிழமை படைப்பதைத் துவங்கி வெள்ளிக்கிழமை முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா பாகம் : 4 பக்கம் : 34

வானம் மற்றும் பூமி ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக திருக்குர்ஆன் சொல்லும் போது ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தய்மியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம்.

இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்று இப்னு தைமியா கூறியிருப்பது இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

  1. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.

وَهَذَا بَاطِلٌ لِوَجْهَيْنِ : ( أَحَدُهُمَا أَنَّ الْحَدِيثَ كَذِبٌ بِاتِّفَاقِ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ وَهُوَ مُخَالِفٌ لِلْقُرْآنِ وَالسُّنَّةِ وَالْإِجْمَاعِ ؛ فَإِنَّ اللَّهَ يَقُولُ فِي آيَتَيْنِ مِنْ كِتَابِهِ : { إنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ }  وَذَلِكَ أَنَّ اللَّهَ قَالَ : { قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا }

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்.

(அல்குர்ஆன்: 4:48, 4:116) . . .

மேலும் தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன்: 39:53) என்றும் கூறுகிறான்.

நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னிதய்மியா பாகம் : 2 பக்கம் : 185

இப்னுதய்மியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அனுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொறுத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம்.

உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்து பல செய்திகளை இப்னு தய்மியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை

சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள உலகம் படைக்கப்பட்டதைக் கூறும் ஹதீஸை இப்னு தய்மியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தய்மியாவை விட ஒரு படி மேலே சென்று இட்டுக் கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு என்று இப்னுல் கய்யும் கூறியுள்ளார்.

فصل ويشبه هذا ما وقع فيه الغلط من حديث أبي هريرة خلق الله التربة يوم السبت الحديث وهو في صحيح مسلم . . . لأن الله أخبر أنه خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وهذا الحديث يقتضي أن مدة التخليق سبعة أيام والله تعالى أعلم

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்துவிட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். மொத்தம் ஏழு நாட்களில் இவை படைக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இமாம் அல்பானியின் போங்கு :

  1. இறைவா உன்னிடத்தில் முஹம்மதிற்குரிய அந்தஸ்தின் பொருட்டால் நான் உன்னிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதால் தான் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி இமாம் அல்பானீ அவர்கள் விமர்சிக்கிறார்கள்.
التوسل  جزء 1 – صفحة 114
مخالفة هذا الحديث للقرآن : ومما يؤيد ما ذهب إليه العلماء من وضع هذا الحديث وبطلانه أنه يخالف القرآن الكريم في موضعين منه . . . وثبت مخالفة الحديث للقرآن فكان باطلا

இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது. இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது பொய்யானது என்று அறிஞர்கள் முடிவு செய்ததற்குக் காரணம் இந்த ஹதீஸ் இரண்டு இடங்களில் சங்கை மிக்க குர்ஆனுடன் முரண்படுகிறது. . . இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுவது நிரூபணமாகி விட்டதால் இந்த ஹதீஸ் தவறாகி விட்டது.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 114

 எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்   என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன்: 7:23)

மேற்கண்ட வசனம் கூறும் வார்த்தையை ஆதம் ஹவ்வா ஆகிய இருவரும் கூறியதாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதற்கு மாற்றமாக வேறொரு வார்த்தையைக் கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

  1. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்படுகிறது. அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கு அருகில் வந்து அல்லாஹ்வின் தூதரே உங்களது சமுதாயத்திற்காக மழை வேண்டுங்கள். ஏனென்றால் அவர்கள் (பஞ்சத்தால்) அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மழை வேண்டுமானால் அதற்காகத் தொழுகை நடத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான வழிமுறைக்கும் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேளுங்கள். அவன் உங்களுக்கு மழையைத் தருவான் என்ற குர்ஆன் வசனத்திற்கும் இந்தச் சம்பவம் முரண்படுகிறது.

மழை வேண்டுமானால் நபியவர்களிடத்தில் சென்று கேட்கும் படி குர்ஆன் கற்றுத் தரவில்லை. மாறாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் படி சொல்கிறது. எனவே இந்தச் செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அல்பானீ வாதிடுகிறார்.

التوسل  جزء 1 – صفحة 121
الثاني : أنها مخالفة لما ثبت في الشرع من استحباب إقامة صلاة الاستسقاء لاستنزال الغيث من السماء كما ورد ذلك في أحاديث كثيرة وأخذ به جماهير الأئمة بل هي مخالفة لما أفادته الآية من الدعاء والاستغفار وهي قوله تعالى في سورة نوح : { فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا . . . }

மழை பெய்ய வேண்டுமென நாடினால் மழைத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்து பல ஹதீஸ்களில் வந்துள்ளது. இதையே அதிகமான இமாம்கள் கடைப்பிடித்துள்ளார்கள். மார்க்கத்தில் நிரூபணமான இந்த விஷயத்திற்கு இந்தச் சம்பவம் முரண்படுகிறது. அது மட்டுமல்லாமல் (மழை வேண்டுமென்றால்) பாவமன்னிப்புக் கோர வேண்டும்; துவா செய்ய வேண்டும் என்று குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரண்பாடாகவும் இச்சம்பவம் உள்ளது.

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்  . உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்.

(அல்குர்ஆன்: 71:10) என்பதே அந்த வசனம்.

நூல் : அத்தவஸ்ஸுல் பாகம் : 1 பக்கம் : 121

இமாம் புல்கீனீயின் வழிமுறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பி விடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள்.

குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது உனது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான் (18 : 49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38 : 85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

فتح الباري
وقد قال جماعة من الأئمة ان هذا الموضع مقلوب وجزم بن القيم بأنه غلط واحتج بأن الله تعالى أخبر بان جهنم تمتلىء من إبليس واتباعه وكذا أنكر الرواية شيخنا البلقيني واحتج بقوله ولا يظلم ربك أحد

நரகத்திற்கு புதிய படைப்பை அல்லாஹ் படைப்பான் என்று வருகின்ற இந்த இடத்தில் (தவறுதலாக) மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று இமாம்களில் ஒரு கூட்டத்தினர் கூறியுள்ளார்கள். இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நரகம் நிரம்பும் என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார்.

இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் உனது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான் என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 13 பக்கம் : 437

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அஸ்ஸஹீஹா பாகம் : 6 பக்கம் : 39