03) நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

03) நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை: அதனடிப்படையில் செயல்படவுமில்லை என நம்மை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம். நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒரேயடியாக தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன்.

அதற்கு அந்தப் பிரதிநிதி அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை. (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்) என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அவர் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி)

(முஸ்லிம்: 2953)

அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது :

நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது  ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்  என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.

(அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எரிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெக்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (அல்குர்ஆன்: 65:1) என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஇஸ்ஹாக் (ரஹ்)

(முஸ்லிம்: 2963)

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது. எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத் தன்மையில் உமர் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒரு போதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இந்தச் சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் எந்த வாதத்தை முன் வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம். இப்போது ஹதீஸின் போலிப் பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல்  உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்  என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா?

சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால்  எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா? தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம்  என்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் சஹாபாக்களின் செயல்பாடுகள் ஆதாரத்திற்குரியது என்பதற்காக அல்ல. முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப் வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம்.

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுக்கு முரண்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிப்பாகக் கூறியிருக்க மாட்டார்கள். அந்தச் செய்தியை அறிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து தான் தவறு ஏற்பட்டிருக்கும் என்ற இந்த நியாயமான கருத்தை உமர் அவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஹதீஸ்களை நம் சமுதாயத்திற்குத் தந்த அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களும் முன் வைத்துள்ளார்கள்.

அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள்  ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53 : 43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (அல்குர்ஆன்: 35:18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 1694)

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது : இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது

(அல்குர்ஆன்: 27:80)

(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது திருக்குர்ஆன்

(அல்குர்ஆன்: 35:22)

அறிவிப்பவர் : உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)

(முஸ்லிம்: 1697)

உமர் மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப்பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : காசிம் பின் முஹம்மத் (ரஹ்)

(முஸ்லிம்: 1693)

குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச்சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக ஆயிஷா அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை.

மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (அல்குர்ஆன்: 57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)

(அஹ்மத்: 24894)

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி(புகாரி: 2858, 5093, 5753, 5772)ஆகிய எண்களிலும்(முஸ்லிம்: 4127, 4128)ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது.

யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. வீடு பெண் கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுணம் பார்க்கலாம் என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம்.

இந்த மூன்று செய்திகளிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் மட்டும் கூறவில்லை. நமக்கு முன்பு நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்பதற்காகத் தான் இவற்றைக் கூறியுள்ளோம்.