01) ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

நூல்கள்: ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

01) ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?

 குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டையும் ஒரு முஸ்லிம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இதற்கு மாற்றமாக செயல்படக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக பல வழிகளில் மக்களுக்கு நாம் கூறி வருகிறோம். இதுவே நமது உயிர் மூச்சாக இன்று வரை இருந்து வருகிறது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் நமது பிரச்சாரம் இதை மையமாகக் கொண்டே அமையும்.

குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பிய போது இந்த வழிகேட்டிலிருந்து அவர்களையும் அவர்களிடமிருந்து மக்களையும் காப்பாற்றுவதற்காக விவாதங்களை நடத்தினோம். இதன் விளைவாக ஹதீஸின் அவசியத்தை மக்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

ஆயினும் மிகச் சில ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் அதன் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் இந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் சொல்கிறோம்.

இதைப் புரிந்து கொள்ளாத சிலர், ஹதீஸை மறுப்பதற்கான வழியை நாம் திறந்து விடுவதாகவும் மனோ இச்சையின் அடிப்படையில் ஹதீஸை மறுப்பதாகவும் நமக்கு முன்பு இந்தக் கருத்தை யாரும் கூறியதில்லை என்றும் ஹதீஸை மறுப்பதற்கு இப்படியொரு விதி ஹதீஸ் கலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

தாம் அறியாத விஷயத்திற்கு மக்கள் எதிரிகளாக இருப்பார்கள் என்பதற்கிணங்க இவர்களுக்கு உண்மை தெரியாத காரணத்தினால் நாம் கூறுகின்ற இந்த உண்மையை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதோடு இவர்களது பிரச்சாரத்தால் குழம்பிய மக்களுக்கு தெளிவான வழியைக் காட்டுவதற்காகவும், குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களை நபியவர்கள் கூறியதாக பொது மக்கள் எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும் இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் தவறுகள் ஏதும் இருந்தால் அதை எங்களுக்கு நீங்கள் சுட்டிக் காட்டலாம். இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேரான வழியைக் காட்டுவானாக.