35) மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?
மூஸா நபி மலக்குள் மவ்துக்கு அடித்தார்களா?
புனித அல்குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளின் வரிசையில் நபி மூஸா (அலை) அவர்கள் வானவருக்கு அடித்ததாக இடம் பெற்றுள்ள செய்தியும் ஒன்றாகும். அதைப் பற்றிய முழு விபரத்தை இங்கு விரிவாக பார்ப்போம்.
قال:أُرسِلَ ملكُ الموتِ إلى موسى عليهما السلام، فلما جاءهُ صَكَّهُ، فرجَعَ إلى ربهِ فقال: أرسلَتني إلى عبدٍ لا يريدُ الموتَ. قال: ارجِعْ إليهِ فقل له يَضَعُ يدَهُ على مَتنِ ثورٍ، فلهُ بما غطى يدُهُ بكل شعرةٍ سنة. قال: أي ربّ، ثمَّ ماذا ؟ قال: ثمَّ الموت. قال: فالآن. قال: فسأَلَ اللهَ أن يُدنِيَهُ منَ الأرض المقدَّسةِ رميةً بحجرٍ. قال أبو هريرةَ: فقال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: لو كنتُ ثمَّ لأريتُكم قبرَهُ إلى جانب الطريقِ تحتَ الكثيبِ الأحمر. قال: وأخبرَنا .مَعْمرٌ عن هَمامٍ حدَّثنا أبو هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم نحوَه
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மலக்குல் மவ்த் (உயிரை எடுத்துச் செல்ல வரும் வானவர்) மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்த போது மூஸா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறினார்.
இறைவன், நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரது கரம் மூடுகின்றதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.) எனக் கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா (அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டார்கள். இறைவன், மரணம் தான் என்று பதிலளித்தான். மூஸா (அலை) அவர்கள், அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு, (பைத்துல் முகத்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இதை எடுத்துரைத்த போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன் என்று கூறினார்கள். ஹம்மாம் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் இதே போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.
قال أُرسِلَ مَلَكُ المَوتِ إلى موسى عليهما السلامُ، فلمَّا جاءَهُ صَكَّهُ، فرجَعَ إلى ربِّهِ فقالَ: أرسلْتَني إلى عبدٍ لا يُريدُ المَوتَ. فرَدَّ اللهُ عليهِ عَينَه وقال: ارجعْ فَقُلْ لهُ يَضَعُ يدَهُ على مَتنِ ثَورٍ، فلهُ بكلِّ ما غَطتْ بهِ يدُهُ بكلِّ شعرةٍ سنةٌ. قال: أي ربِّ، ثمَّ ماذا؟ قال: ثمَّ الموتُ. قال فالآن. فسألَ اللهَ أن يُدنِيَهُ مِنَ الأرض المقدَّسةِ رميةً بحجَرٍ. قال: قال رسولُ اللهِ صلى الله عليه وسلّم: .فلو كنتُ ثَمَّ، لأريتُكم قبرَهُ إلى جانبِ الطريق عند الكثيب الأحمر
அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது மூசா (அலை) அவர்கள் அவரது கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், இறைவா! இறக்க விரும்பாத ஒரு அடியாரிடம் நீ என்னை அனுப்பி விட்டாய் என்றார்.
பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரிப்படுத்தி விட்டு, நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரது கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கின்றதோ அத்தனை வருடங்கள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும் என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா அலை அவர்களிடம் வந்து கூறிய போது) மூஸா (அலை) இறைவா, அதற்குப் பிறகு? எனக் கேட்டதும் அல்லாஹ், பிறகு மரணம் தான் என்றான்.
உடனே மூசா (அலை) அவர்கள் அப்படியானால் இப்பொழுதே (தயார்) எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது, நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா (அலை) அவர்களது அடக்கவிடத்தைக் காட்டியிருப்பேன் எனக் குறிப்பிட்டார்கள்.
இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் மற்றும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரியில் இது பதிவு செய்யப்பட்டதாலும், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருப்பதாலும் இதை அப்படியே ஏற்க இயலுமா?
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கோ, திருக்குர்ஆன் வசனங்களுக்கோ முரணாக இல்லாவிட்டால் இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இந்த ஹதீஸைப் பொறுத்த வரை திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் நேரடியாக முரண்பட்டு நிற்கிறது.
மலக்குல் மவ்த் தோல்வியடைந்தாரா?
ஒரு வானவர் இறைக்கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகிறது. இது சரி தானா என்பதை முதலில் ஆராய்வோம். வானவர்களுக்கு என்று சில இலக்கணங்கள் உள்ளதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
வானவரைத் தாக்க முடியுமா?
இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பது தான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகிறது.
மேலும் நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா? இறைவனின் ஏற்பாட்டுக்குச் செவி சாய்க்க மறுப்பார்களா என்றால் நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டார்கள். மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டவாறு நடந்திருப்பார்களா? என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகும்.
மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?
இவ்வுலக வாழ்க்கை அற்பமானது. மறுமை வாழ்வு தான் நிலையானது” என்பது எல்லா இறைத் தூதர்களின் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபி அறிந்து கொண்டால் அதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்வார்களே தவிர அதை எதிர்த்து எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டார்கள்.
மேலும் வானவர்கள் சுயமாக எந்தக் காரியத்திலும் இறங்க மாட்டார்கள். அல்லாஹ் இட்ட கட்டளையைத் தான் செய்வார்கள் என்பது நமக்கே தெரியும் போது மூஸா நபிக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்க முடியாது. இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும்” என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த இந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?
இறைவன் கெஞ்சுவானா?
அப்படியே மூஸா நபியவர்கள் வானவரை அறைந்திருந்தால் கூட இறைவன் பணிந்து கெஞ்சிக் கொண்டிருப்பானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
யூனுஸ் நபியவர்கள் இறைவனுடன் கோபித்துக் கொண்டு போனதற்காக அவரை எவ்வாறு நடத்தினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.
உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார். அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார். ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
மூஸா நபி இவ்வாறு நடந்திருந்தால் இது போன்ற கடும் நடவடிக்கை எடுப்பது தான் இறைவனது தனித்தன்மை. தனது பெருமை விஷயத்தில் அவன் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இறைவனைப் பொருத்த வரை அவனது கவுரவம் தான் அவனுக்கு முதன்மையானதாகும்.
இந்த அடிப்படையையும் இந்த ஹதீஸ் அறவே தகர்த்து எறிவதால் இந்த ஹதீஸை உண்மையானது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. .இந்த ஹதீஸை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று வாதிடுபவர்கள் தங்கள் கருத்தில் உண்மையாளர்களாக இருப்பின் கீழ்க்காணும் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
01- மலக்குகள் சுயமாக எந்த அதிகாரமும் படைத்தவர்கள் அல்லர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தும் அடிமைகளே என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. திருக்குர்ஆனில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இறைவன் சொன்னதைச் செய்யாமல் மூஸா நபியிடம் அடி வாங்கிக் கொண்டு தோல்வியுடன் ஒரு வானவர் திரும்பினார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறதே? இது குர்ஆனுக்கு மாற்றமானது அல்லவா? குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இந்த ஹதீஸை ஏற்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்களா?
02- அல்லாஹ் எந்தக் கட்டளை இட்டாலும் ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளை இது தான் என்று தெரிந்து கொண்டு அதை எதிர்த்து நிற்பது இறை மறுப்பாகும். மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளையைக் கூறிய போது ஒரு நபி என்ன செய்திருப்பார்.
உடனே அதற்கு தலை சாய்த்திருப்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. இதோ நான் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தத் தயார் என்று கூறி இருந்தால் ஒரு நபியின் தகுதி அதில் வெளிப்பட்டிருக்கும். அல்லது இறைவா இன்னும் கொஞ்சம் ஆயுளை அதிகமாக்கித் தா என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தால் சராசரி மூமினின் பண்பு அதில் வெளிப்பட்டிருக்கும்.
ஆனால் அல்லாஹ் அனுப்பிய தூதரைக் கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அறைவது ஈமானில் சேருமா? இறை மறுப்பில் சேருமா? இப்படி நடப்பதற்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறானா?
03- ஒவ்வொரு மனிதனும் மரணித்தே ஆக வேண்டும் என்பது ஒட்டு மொத்த மனிதரும் அறிந்து வைத்துள்ள உண்மை. இந்த உண்மை ஒரு நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.
ஆனால் முஸா நபி அவர்கள் மரணத்தை நெருங்கும் வரை இந்தச் சாதாரண உண்மையை அறியாதவராக இருந்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. மனிதன் மரணித்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கடைசி நேரத்தில் அல்லாஹ் சொல்லிக் கொடுத்த பிறகு தான் அவருக்குத் தெரிய வந்துள்ளது என்றால் தனது சமுதாயத்துக்கு அவர்கள் மரணம் பற்றியோ மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றியோ எதுவும் சொல்லித் தரவில்லை என்பதும் இந்த ஹதீஸூக்குள் அடங்கியுள்ளது.
04- மேலும் ஒரு பணியைச் செய்வதற்காக அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான் என்றால் அவர் அதற்கான முழு ஆற்றலும் வழங்கப்பட்டே அனுப்பப்படுவார். மலக்குகள் எந்தப் பணியில் தோற்றாலும் அது அவர்களின் தோல்வி அல்ல. அனுப்பியவனின் தோல்வியாகத் தான் அமையும். இந்தக் கதை அல்லாஹ்வை இயலாதவனாக்கும் வகையில் உள்ளது.
05-வானவர்களின் வலிமையுடன் மனிதர்களின் வலிமையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஒரு வானவருக்கு அல்லாஹ் கட்டளையிட்டால் ஒரு ஊரையே அவர் அழித்து விட முடியும். அத்தகைய வானவரை மூஸா நபி அறைந்து அவரது கண்ணைக் குருடாக்கி விட்டார் என்பதும் வானவர்களின் ஆற்றலை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கு நம்மை எதிர்த்து விமர்சனம் செய்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்.