31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?
31) நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதா?
அல்குர்ஆனுக்கு முரண்படுகின்ற செய்திகளில் மிக முக்கிய இடத்திலிருப்பது சூனியம் பற்றிய செய்திகளாகும். மற்ற செய்திகளை விட இவற்றை நம்புவதே மிகப் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. சூனியத்தை உண்மையென்று நம்புவது இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும் என்று திருமறைக் குர்ஆனும், நபியவர்களும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் சூனியத்திற்கு தாக்கம் உண்டு என்ற கருத்துப்பட புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றிய விபரங்களை சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இஸ்லாத்தின் பல அடிப்படைகளைத் தகர்க்கின்றது. அதை அறிவதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள விபரங்களை அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம்
வைக்கப்பட்டதாகக் கூறும் சில அறிவிப்புகள் இவை தான்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள்.
பிறகு சொன்னார்கள்: என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன? என்று கேட்டார். மற்றொருவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று இவர் பதிலளித்தார். எதில்? என்று அவர் கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று அவர் பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸ_ரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.
(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்: பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள்.
அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை: என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸ_ரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரம்மையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள். பிறகு (என்னிடம் கூறினார்கள்:)
ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார்.
அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று இரண்டாமவர் பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, (பனூ ஸூரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்’ எனும் கிணற்றில் என்று மற்றவர் பதிலளித்தார்.
இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது: அதன் பேரீச்சை மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.- (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார்.
அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸ_ரைக் குலத்தைச் சேர்ந்த நயவஞ்சகனான லபீத் பின் அஃஸம் என்பவர் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும், சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான் குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது.
இதன் பேரீச்சை மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லிவிட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள். நான், தாங்கள் ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் எனக்கு நிவாரணம் அளித்துவிட்டான். மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரம்மை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்து விட்டான் என்று கூறினார்கள்.
நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர்.
பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க, மற்றவர், பனூ ஸூரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார்.
முதலாமவர், எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும், சிக்குமுடியிலும், ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமவர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள்.சுற்றிலும் பேரீச்சை மரங்கள் இருந்தன.
பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்சை மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்தீர்களா? என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள், இல்லை: எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்தி விட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்று வந்ததாகப் பிரம்மையூட்டப்பட்ட நிலையில் நீடித்தார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். இரண்டு பேர் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), இந்த மனிதரின் நிலை என்ன? என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்க, மற்றவர், லபீத் பின் அஃஸம் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு தர்வான்’ (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது என்று சொன்னார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளைதனைப் பிரித்துப் பார்க்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னைக் குணப்படுத்தி விட்டான். நானோ மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்தன லபீத் பின் அஃஸம், பனூ ஸ_ரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரம்மையூட்டப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான் என்று கூறினார்கள்.
அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார்.
அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார். -தர்வான்’ என்பது பனூஸ_ரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.- பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது.
அதன் பேரீச்சை மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் என்று சொன்னார்கள்.
சூனியத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துடையவர்கள் இதைத் தங்களின் முதன்மையான ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்களில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம்.
யூதன் ஒருவன் செய்த சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. மேற்கண்ட ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறும் வாக்கியங்களைக் கவனமாகப் பாருங்கள்.
முதல் ஹதீஸில்
எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டு இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
இரண்டாவது ஹதீஸில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரம்மையூட்டப்பட்டவர்களாக ஆனார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹதீஸில்
தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
நான்காவது ஹதீஸில்
இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரம்மை அவர்களுக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது.
ஐந்தாவது ஹதீஸில்
அவர்கள் இன்னின்னவாறு நடந்து கொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்ததாகப் பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆறாவது ஹதீஸில்
இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்ததாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரம்மையூட்டப்பட்டுக் கொண்டே இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.
உளவியல், உடலியல் தாக்கங்ள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரம்மை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்றும் தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றும் இதில் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தான் செய்யாததைச் செய்ததாகச் சொல்லிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல், சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
மனநோய் மட்டுமின்றி உடல் உபாதையும் ஏற்பட்டதாக முதலாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. مَا وَجَعُ الرَّجُلِ இந்த மனிதரைப் பீடித்துள்ள வேதனை என்ன என்று வானவர்கள் பேசிக் கொண்டதாக இந்த அறிவிப்பில் உள்ளது. (வேதனை என்று மூலத்தில் இருக்க நோய் என்று சிலர் செய்த தமிழாக்கம் தவறானது என்பதைக் கவனத்தில் கொள்க)
ஆறு மாத கால பாதிப்பு
இது ஏதோ ஒருநாள் நடந்ததாகச் சொன்னால் அது மனநோய் என்று சொல்ல முடியாது. ஆனால் இது அதிக காலம் நீடித்தது என்று இந்த அறிவிப்புகள் சொல்கின்றன. சில மொழிபயர்ப்பாளர்கள் இந்தக் கருத்துப்படி தமிழாக்கம் செய்யாவிட்டாலும் மூலத்தில் |கான| என்ற சொல் உள்ளது. இந்த நிலையில் நீடித்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.
இது எவ்வளவு காலம் நீடித்தது என்று அஹ்மதில் உள்ள பின்வரும் ஹதீஸ் தெளிவாகவும் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது
செய்யாததைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறு மாதகாலம் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த ஹதீஸ்கள் சொல்வதால் சூனியத்தினால் எதுவும் செய்ய முடியும் என்று சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்ற கருத்துடையோர் வாதிடுகின்றனர்.
இஸ்லாத்தின் அடிப்படைகளைப் புறக்கணித்து விட்டு இவர்கள் இந்த ஹதீஸ்களை அணுகியுள்ளதால் தான் இவர்களால் இப்படி வாதிட முடிகின்றது. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை மீறாமல் சிந்தித்தால் இந்த ஹதீஸ் கட்டுக்கதை என்ற முடிவுக்குத் தான் அவர்களும் வருவார்கள்.
ஏனெனில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என நம்பும் போது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றத்தைச் செய்யும் நிலை ஏற்படுகிறது. திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களை நாம் மறுக்கும் நிலை ஏற்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்பினால் குர்ஆனின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.
குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும்
இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவர்களின் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் எவ்வாறு நம்புவது? அவர்களுக்கும் ஒரு அற்புதம் வேண்டுமே என்ற கேள்விக்கு அந்த அற்புதம் திருக்குர்ஆன் தான் என்று இஸ்லாம் விடையளிக்கிறது.
“ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் வந்தது என்பதை திருக்குர்ஆனே நிரூபிக்கின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது நிரூபணமானால் அதனைக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதும் நிரூபணமாகிவிடும்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் திருக்குர்ஆன் சொல்லி அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கின்றது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அற்புதம் என்று நாம் மெய்யாக நம்பினால் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டும்.
எனெனில் சந்தேகம் இல்லை என்பதுதான் திருக்குர்ஆனின் தனித்தன்மை என்று அல்லாஹ்(அல்குர்ஆன்: 2:2, 10:37, 32:2) ➚வசனங்களில் அடையாளப்படுத்துகிறான். இந்தக் கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.
திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாத பலருக்குச் சந்தேகம் உள்ளதை நாம் அறிகிறோம். எனவே இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை. இதில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சந்தேகத்துக்கும் இஸ்லாத்தில் விடை உண்டு என்பதுதான் இதன் பொருள்.
மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக குர்ஆனை அல்லாஹ் அருளியுள்ளதால் மனிதர்கள் நம்பும் வகையில் அது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர்கள் வேதம் என்று அதை நம்பி நேர்வழிக்கு வருவார்கள். எனவேதான் இதில் சந்தேகம் இல்லை என்பதை முக்கியமான வாதமாக அல்லாஹ் வைக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் மனநோயாளியாக ஆக்கப்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் சந்தேகத்தைக் கிளப்ப முடியும்.
அந்த ஆறுமாத காலம் எது என்பது குறித்து சூனியத்தை நம்புவோரிடம் ஆதாரம் இல்லாததால் மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் அனைத்தும் அந்த ஆறு மாதங்களில் அருளப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும். திருக்குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று சந்தேகம் ஏற்படுவதை அல்லாஹ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதால் தான் இந்தக் குர்ஆனைப் போல் கொண்டு வா என்று அறைகூவல் விடுகிறான். இதை (அல்குர்ஆன்: 2:23, 10:38, 11:13, 17:88, 52:33-34) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
முஹம்மது சுயமாக இட்டுக்கட்டி விட்டு அல்லாஹ்வின் வேதம் எனக் கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்தபோது நீ என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துகொள்! முஸ்லிம்கள் நம்பினால் போதும் என்று அல்லாஹ் நினைக்கவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கத்தக்க அறைகூவலை விட்டு இது இறைவேதமே என நிரூபிக்கிறான்.
அதுபோல் திருக்குர்ஆனுக்கு எதிராக மற்றொரு சந்தேகத்தையும் அன்றைய எதிரிகள் எழுப்பினார்கள். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மதுக்கு இந்த விஷயங்கள் தெரிய வாய்ப்பு இல்லை: எனவே வெளியூரில் இருந்து ஒருவர் வந்து இவருக்குக் கற்றுக் கொடுத்துச் செல்கிறார். அதைத்தான் முஹம்மது வேதம் எனச் சொல்கிறார் என்று விமர்சனம் செய்து திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிமல்லாதவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் எனக்கு என்ன என்று அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கும் வகையில் தக்க பதில் கூறுகிறான்.
இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.
நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹூல் குதுஸ் (ஜிப்ரீல்) உண்மையுடன் இறக்கினார் என்பதை (முஹம்மதே!) கூறுவீராக! “ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்” என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.
திருக்குர்ஆனின் உயர்ந்த அரபுமொழி நடையை எடுத்துக் காட்டி, வேறு மொழி பேசுபவன் எப்படி இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டு அல்லாஹ் அவர்களை வாயடைக்கச் செய்தான்.
திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் விஷயங்களுக்கெல்லாம் ஏற்கத்தக்க மறுப்பை அளித்த இறைவன் தனது தூதரை மனநோயாளியாக்கி சொல்லாததைச் சொல்ல வைத்து அவனே திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்துவானா?
இதைச் சிந்தித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது கட்டுக்கதை என்று தெரிந்துவிடும். திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் அருளப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படக் கூடாது என்பதற்கு அல்லாஹ் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களை எழுதப்ப டிக்கத் தெரியாதவராக ஆக்கி இருப்பதில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
எழுதுதலும், படித்தலும் மனிதனுக்கு அவசியம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். அல்லாஹ்விடமிருந்து முதன்முதலில் வந்த வசனங்களே இது பற்றித்தான் பேசுகின்றன.
அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக
எழுத்தின் மூலம் தான் அறிவைப் பெருக்கவும், கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் இயலும் என்று சொல்லும் அல்லாஹ் நபியவர்களுக்கு மட்டும் அந்தப் பாக்கியத்தைக் கொடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக அல்லாஹ் ஏன் ஆக்கினான்? இதற்கான விடையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்கிறான்.
இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
படிப்பறிவு மனிதர்களுக்குக் கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும். எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது.
இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும். அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்களில் பலர் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றும், அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.
“எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும்” என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.
எழுத்தறிவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்தால் குர்ஆன் இறைவேதம் என்ற நம்பிக்கையை அது பாதிக்கும் என்பதற்காகவே அல்லாஹ் இந்தப் பாக்கியத்தை அவர்களுக்குத் தரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறுமாதம் மனநோய் ஏற்பட்டதாக நாம் நம்பினால் அதைவிட அதிக சந்தேகத்தை குர்ஆனில் அது ஏற்படுத்தும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது: கட்டுக்கதை என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
அதே போன்று குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (அல்குர்ஆன்: 4:82) ➚ என்றும், சிந்திக்க மாட்டீர்களா? (அல்குர்ஆன்: 4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) ➚ என்றும், தவறுகள் வராது (அல்குர்ஆன்: 41:42) ➚, இது பாதுகாக்கப்பட்ட வேதம் (அல்குர்ஆன்: 15:9, 18:1, 39:28, 41:42, 75:17) ➚ என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. இவை அனைத்துமே குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், “வீனர்கள் சந்தேகப்படுவார்கள் என்பதற்கு ஏற்ப அந்த வீனர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.
மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க எதிரிகளுக்கு அல்லாஹ் வாய்ப்பளித்திருக்க மாட்டான்.
மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை மற்றவர்களை விட அதிகமாக அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான். குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை நபியவர்களுக்கு வழங்கி அவர்களைப் பலப்படுத்தியதாக(அல்குர்ஆன்: 75:17-19) ➚வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது. பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபி அவர்களுக்குப் பலவீனமான உள்ளம் இருந்ததாகச் சித்தரிக்கின்றது.