30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி
30) இளைஞருக்குப் பாலூட்டுதல் – ஸாலிம் (ரலி) பற்றிய செய்தி
அபூஹுதைபா (ரலி) அவர்களின் மனைவியால் வளர்க்கப்பட்ட ஸாலிம் எனும் இளைஞர் அபூஹ_தைபாவின் வீட்டுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தார். தமது மனைவியுடன் ஸாலிம் வந்து பேசிக் கொண்டிருப்பது அபூஹுதைபாவிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி அபூஹுதைபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது ஸாலிமுக்குப் பாலூட்டு! இதனால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக(முஸ்லிம்: 2638, 2636, 2639, 2640)ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
அன்னிய இளைஞர் ஒருவருக்குப் பால் கொடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள். பால் ஊட்டுதல் என்பது இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தான் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியை ஏற்காது நாம் விட்டு வருகிறோம். நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை இந்த அறிவிப்பில் இருக்கலாம். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்கிறோம்.
இதைச் சரியானது என்று எவராவது வாதிட்டால் இன்றைக்கு இதன் அடிப்படையில் நடக்கலாம் என்று ஃபத்வா வழங்குவார்களா? நிச்சயம் வழங்க மாட்டார்கள்.
அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களின் கருத்துக்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராக உள்ளன. இது போன்ற ஹதீஸ்களை நம்பி இஸ்லாத்தின் அடிப்படையையும் குர்ஆன் வசனங்களையும் மறுக்கும் நிலை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதைக் குறிப்பிடுகிறோம்.
அபூஹ_தைஃபா (ரலி) அவர்களும் ஸஹ்லா (ரலி) அவர்களும் தம்பதிகளாவர். அன்சாரிப் பெண் ஒருவரிடம் அடிமையாக இருந்த ஸாலிம் என்பாரை இவ்விருவரும் தமது வளர்ப்புப் பிள்ளையாக ஆக்கிக் கொண்டனர். தத்தெடுத்துக் கொள்வது தடுக்கப்படாத காலத்தில் இது நடந்தது. பின்னர் 33:5 வசனத்தின் மூலம் தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக மாட்டார்கள் என்ற சட்டம் அருளப்பட்டது.
இந்த விபரங்களை(புகாரி: 5088)வது ஹதீஸில் காணலாம். இந்த ஹதீஸில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸில் தான் பல கேள்விகள் எழுகின்றன.
ஹதீஸ் – 01
قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَ النَّبِِّ . فَقَالَتْ: يَا رَسُولَ الّلِ! إِنِّي أَرَى فِ وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالٍِ ) وَهُوَ حَلِيفُهُ (. فَقَالَ النَّبِ صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ؟ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ. فَتَبَسَّمَ رَسُولُ الّلِ وَقَالَ: قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ. زَادَ عَمْرٌو فِ حَدِيثِهِ: وَكَانَ قَدْ شَهِدَ بَدْراً. وَفِ رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ: فَضَحِكَ رَسُولُ . الّلِ
ஸஹ்லா பின்த் ஸ_ஹைல் (ரலி) என்ற பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே, ஸாலிம் (எனது வீட்டுக்கு) வருவதில் (எனது கணவரான) அபூஹுதைஃபாவின் முகத்தில் வெறுப்பைக் காண்கிறேன் என்று கூறினார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ அவருக்குப் பாலூட்டு என்றார்கள். அவர் பெரிய ஆளாக இருக்கும் போது அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன் என்று நான் கேட்டேன். இதைக் கேட்டு புன்னகை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் பெரிய ஆள் என்பதை நான் அறிவேன் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
ஹதீஸ் – 02
وَأَهْلِهِ فِ بَيْتِهِمْ. فَأَتَتْ ) تَعْنِ ابْنَةَ سُهَيْلٍ( النَّبَِّ . فَقَالَتْ: إِنَّ سَالِاً قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ، وَعَقَلَ مَا عَقَلُوا، وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا، وَإِنِّي أَظُنُّ أَرْضِعِيهِ تَْرُمِي عَلَيْهِ، وَيَذْهَبِ الَّذِي فِ أَبِي حُذَيْفَةَ مِنْ ذلِكَ شَيْئاً. فَقَالَ لََا النَّبِ أَنَّ فِ نَفْسِ .نَفْسِ أَبِي حُذَيْفَةَ فَرَجَعَتْ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُهُ، فَذَهَبَ الَّذِي فِ نَفْسِ أَبِي حُذَيْفَةَ
அபூஹுதைஃபாவினால் விடுதலை செய்யப்பட்டவரான ஸாலிம் அபூஹுதைஃபாவின் குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டில் இருந்து வந்தார். (ஒரு நாள்) ஸஹ்லா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ஆண்கள் அடைய வேண்டிய பருவத்தை ஸாலிம் அடைந்து விட்டார். ஆண்கள் புரிந்து கொள்வதை அவர் புரிந்து கொள்பவராகி விட்டார். அவர் எங்களிடம் வருகிறார்.
இது என் கணவர் அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் ஏதோ ஒன்றை ஏற்படுத்துவதாக நான் அறிகிறேன் என்று கூறினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு நீ பாலூட்டு, இதனால் நீ அவருக்குத் தாயாகி விடுவாய். அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் இருப்பது இதனால் நீங்கிவிடும் என்று கூறினார்கள்.
அவர் திரும்பிச் சென்று விட்டார். நான் ஸாலிமுக்கு பாலூட்டினேன். உடனே அபூஹுதைஃபாவின் உள்ளத்தில் இருந்தது போய்விட்டது என்றும் ஸஹ்லா குறிப்பிட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
ஹதீஸ் – 03
أَخْبََنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ؛ أَنَّ الْقَاسِمِ بْنَ مَُمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخْبََهُ أَنَّ عَائِشَةَ، أَخْبََتْهُ أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو جَاءَتِ النَّبَِّ . فَقَالَتْ: يَا رَسُولَ الّلِ! إِنَّ سَالِاً ) لِسَالٍِ مَولَ أَبِي حُذَيْفَةَ ( مَعَنَا فِ بَيْتِنَا، وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ. قَالَ أَرْضِعِيهِ تَْرُمِي عَلَيْهِقَالَ: فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيباً مِنْهَا لا أُحَدِّثُ بِهِ وَهِبْتَهُ، ثُمَّ لَقِيتُ الْقَاسِمَ فَقُلْتُ لَهُ: لَقَدْ حَدَّثْتَنِ حَدِيثاً مَا حَدَّثْتُهُ بَعْدُ. قَالَ: فَمَا هُوَ؟ فَأَخْبَْتُهُ. قَالَ: فَحَدِّثْهُ عَنِّ أَن عَائِشَةَ .أَخْبََتْنِيهِ
ஆயிஷா (ரலி) கூறுவதாக அறிவிப்பவர் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் ஆவார். அவர் கூறுவதாக அறிவிப்பவர் இப்னு அபீ முளைக்கா ஆவார். இவர் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துவிட்டு பின்வரும் செய்தியையும் கூறுகிறார். நான் ஒரு வருடம் அல்லது ஏறத்தாழ ஒரு வருடம் இச்செய்தியை யாருக்கும் அறிவிக்காமல் இருந்தேன். இதை அறிவிக்க நான் பயந்தேன்.
பின்னர் காசிம் அவர்களைச் சந்தித்து நீங்கள் எனக்கு ஒரு ஹதீஸைக் கூறினீர்கள். இது வரை அதை நான் அறிவிக்கவில்லை என்று கூறினேன். அது எந்த ஹதீஸ் என்று அவர் கேட்டார். நான் இந்த ஹதீஸைக் கூறினேன். ஆயிஷா (ரலி) எனக்கு அறிவித்து நான் உனக்கு அறிவித்ததாக நீ அறிவித்து விடு என்று விடையளித்தார் என்ற விபரம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் – 04
قَالَتْ أُمُّ سَلَمَةَ لِ عَائِشَةَ، : إِنَّهُ يَدْخُلُ عَلَيْكِ الْغُلاَمُ الأَيْفَعُ الَّذِي مَا أُحِبُّ أَنْ يَدْخُلَ عَلَيَّ. قَالَ: فَقَالَتْ عَائِشَةُ: أَمَالَكِ فِ رَسُولِ الّلِ إِسْوَةٌ؟ قالَتْ: إِنَّ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ قَالَتْ: يَا رَسُولَ الّلِ إِنَّ سَالِاً يَدْخُلُ عَلَيَّ وَهُوَ رَجُلٌ. وَفِ نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْهُ شَيْءٌ. فَقَالَ .رَسُولُ الّلِ صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ حَتَّى يَدْخُلَ عَلَيْكِ
ஆயிஷா அவர்களே, உங்கள் இல்லத்தில் பருவ வயதுக்கு நெருக்கமான இளைஞர்கள் வருகின்றனர். அத்தகைய வயதுடையவர்கள் என் வீட்டில் நுழைவதை நான் விரும்ப மாட்டேன் என்று உம்முஸலமா (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பருவமடைந்த ஆண் மகனான ஸாலிம் என் வீட்டுக்கு வருவதில் என் கணவர் அபூ ஹுதைஃபாவுக்கு அதிருப்தி உள்ளது என்று அபூ ஹுதைஃபாவின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது அவருக்குப் பாலூட்டு இதன் பின் வீட்டுக்குள் ஸாலிம் நுழையலாம் என்று கூறினார்களே? இதில் உங்களுக்கு அழகான முன்மாதிரி இல்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு சில இளைஞர்கள் வந்து செல்வதையும் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த இளைஞர்களுக்குப் பாலூட்டி அதன் மூலம் தாயாக ஆனார்கள் என்பதும் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இல்லையா என்று கேட்டதன் மூலம் அதை ஆயிஷா (ரலி) அவர்களும் கடைப்பிடித்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
ஹதீஸ் – 05
وَالّلِ! مَا تَطِيبُ نَفْسِي أَنْ يَرَانِي الْغُلاَمُ قَدِ اسْتَغْنَى عَنِ الرَّضَاعَةِ. فَقَالَتْ: لَِ؟ قَدْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَ رَسُولِ الّلِ . فَقَالَتْ: يَا رَسُولَ الّلِ وَالله إِنِّي لأَرَى فِ وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالٍِ. قَالَتْ: فَقَالَ رَسُولُ الّلِ صلى الله عليه وسلم: أَرْضِعِيهِ . فَقَالَتْ: إِنَّهُ ذُو لِْيَةٍ . فَقَالَ: أَرْضِعِيهِ يَذْهَبُ مَا فِ وَجْهِ أَبِي حُذَيْفَةَ. .فَقَالَتْ: وَالّلِ مَا عَرَفْتُهُ فِ وَجْهِ أَبِي حُذَيْفَةَ
மேற்கண்ட உம்மு ஸலமாவின் ஹதீஸின் கருத்தில் தான் இந்த ஹதீஸூம் உள்ளது. ஸாலிம் தாடி உள்ள இளைஞராக இருந்தார் என்ற வாசகம் மேலதிகமாக இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட அத்தனை ஹதீஸ்களையும் நாம் அடியோடு மறுக்கிறோம். இவை ஆதாரப்பூர்வமானவை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) மீதும், ஸஹ்லா (ரலி) மீதும், ஸாலிம் (ரலி) மீதும், ஆயிஷா (ரலி) மீதும் களங்கம் சுமத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்று திட்டவட்டமாக சொல்கிறோம்.
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
01 – பால் குடிக்கும் வயது
ஒரு பெண் தான் பெற்றெடுக்காத குழந்தைக்குப் பாலூட்டினால் அக்குழந்தைக்கு அவள் தாய் என்ற நிலையை அடைந்து விடுவாள். (வாரிசுரிமை கிடைக்காது என்பதைத் தவிர) ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
பாலூட்டுதல் என்பது இரண்டு வருடங்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுககுப் பாலூட்டினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படுமே தவிர அதைக் கடந்து விட்டால் தாய் பிள்ளை உறவு ஏற்படாது என்பது சிந்திக்கும் போது தெளிவாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இது தெளிவாகவும் கூறப்படுகிறது.
دَخلَ النَّبيُّ صلى الله عليه وسلّم وعندي رجُلٌ فقال: يا عائشةُ مَن هذا ؟ قلتُ: أخي منَ الرَّضاعةِ قال: يا عائشةُ انظُرْنَ مَن إِخوانُكنَّ، فإِنما الرضاعةُ .مِنَ المجاعة . تابعَهُ ابنُ مَهْديٍّ عن سفيانَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்த போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். இவர் யார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அதற்கு நான் இவர் எனது பால் குடி சகோதரர் என்று கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆயிஷாவே, உங்கள் சகோதரர் யார் என்பதில் கவனமாக இருங்கள். பால்குடி உறவு என்பது பசியினால் தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்
அதாவது பாலை மட்டுமே உணவாகக் கொண்டு பாலருந்தும் பருவத்தில் அருந்தினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும் என்பது இதன் கருத்து. பாலை மட்டுமே அருந்தி அதன் மூலம் மட்டுமே பசியாறும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குப் பால் ஊட்டினால் மட்டுமே பால்குடி உறவு ஏற்படும் என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும்.
பாலூட்டும் சட்டம் இரண்டு வருடத்திற்குத் தான் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல் : தாரகுத்னீ பாகம் : 10 பக்கம் : 152
قالَتْ: قالَ رسولُ الله لاَ يَُرِّمُ مِنَ الرَّضَاعةِ إلاَّ مَا فَتَقَ الأمْعَاءَ في الثَّدْيِ، وكانَ قَبْلَ .الفِطَامِ . قال أبو عيسى: هذَا حديثٌ حسنٌ صحيحٌ
மார்பகத்தின் வழியாக வயிறு நிரம்பும் அளவுக்குப் பால் குடித்தாலே பால்குடி உறவு ஏற்படும். மேலும் பால்குடி மறக்கும் வயதுக்குள் அது இருக்க வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) அவர்கள்
நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் கவனத்தில் வைத்துக் கொண்டு ஸாலிம் தொடர்பான ஹதீஸ்களைப் பாருங்கள். ஸாலிம் என்பவர்.
- தாடி உள்ளவர்
- இளைஞர்
- ஆண்களின் பருவ வயதை அடைந்தவர்,
- ஆண்கள் அறிந்து கொள்ளும் அனைத்தையும் அறிந்தவர்
என்றெல்லாம் கூறப்படுகிறது. மிகமிகக் குறைவாக வைத்துக் கொண்டாலும் சுமார் 18 வயதாவது அவருக்கு இருக்கலாம். ஆனால் தேடிப்பார்க்கும் போது அதை விட அதிக வயதுடையவராக இருக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
குர்ஆனை நான்கு நபர்களிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள்.
1. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
2. அபூஹ_தைபாவின் அடிமை ஸாலிம் (ரலி)
3. உபை பின் கஅப் (ரலி)
4. முஆத் பின் ஜபல் (ரலி)
ஒட்டு மொத்த நபித்தோழர்களிலேயே தேர்வு செய்யப்பட்ட நால்வரில் ஸாலிம் ஒருவராக இருக்கிறார் என்றால் முதிர்ச்சியான நிலையை அடைந்தவராகத் தான் இருக்க முடியும்.
ஸாலிம் அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த மக்களுக்கு இவர் இமாமத் செய்து வந்தார். பத்ருப் போரிலும் இன்ன பிற போர்களிலும் பங்கெடுத்தார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்னால் பல நபித்தோழர்கள் ஹிஜ்ரத் செய்து வந்தனர். அவர்களுக்கு ஸாலிம் தொழுகை நடத்தினார் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வரும் போது இவர் எந்த வயதுடையவராக இருப்பார் என்பதை ஊகம் செய்யலாம்.
எப்படிப் பார்த்தாலும் இளைஞராக அவர் இருந்திருக்கிறார். அத்தகைய இளைஞருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹ்லா (ரலி) அவர்களுக்குக் கூறுவார்களா? இரண்டு வயதுக்குள் பாலருந்தினால் தான் பால்குடி உறவுச் சட்டம் ஏற்படும் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.
இது ஹதீஸ் அல்ல. கட்டுக்கதை என்று கூறுகிறோம். இதைச் சரி என்று வாதிடுவோர் மேலே சொன்ன குர்ஆன் வசனங்களையும், பால்குடிச் சட்டம் தொடர்பாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களையும் மறுத்தவர்களாக ஆவார்கள்.
02- பால் எப்போது சுரக்கும்?
இளைஞருக்கு ஒரு பெண்ணைப் பாலூட்டச் சொன்னதில் இன்னொரு விஷயமும் உள்ளது. பெண்களுக்கு எல்லாக் காலத்திலும் பால் சுரந்து கொண்டிருக்காது. குழந்தை பெற்றது முதல் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தான் பால் சுரக்கும்.
அதன் பின்னர் பால் சுரக்காது. மறுபடி குழந்தை பெற்றால் தான் பால் சுரக்கும். ஸஹ்லா (ரலி) அவர்களை நோக்கி ஸாலிமுக்குப் பாலூட்டு என்று கூறினால் அந்தச் சமயத்தில் அவருக்குக் கைக் குழந்தை இருந்திருக்க வேண்டும். அப்போது தான் பால் சுரக்கும். பால் சுரந்தால் தான் ஸாலிமுக்குப் பாலூட்ட முடியும்.
ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு அந்தச் சமயத்தில் கைக் குழந்தை இருந்தது என்பதை இவர்கள் நிரூபிக்க வேண்டும். (அந்த நேரத்தில் கைக் குழந்தை ஸஹ்லாவுக்கு இல்லை என்பதை நம்மால் நிரூபிக்க முடியும்)
மேலும் இதை முன்மாதிரியாகக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்களும் தம் வீட்டுக்கு வரும் இளைஞர்களிடம் செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) மூலம் குழந்தை இல்லை. நபிகள் நாயகத்துக்குப் பின் வேறு திருமணம் செய்ய அவர்களுக்குத் தடை உள்ளதால் அறவே அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது தெளிவு. இதிலிருந்தே இது இட்டுக் கட்டப்பட்டது என்பதை அறியலாம்.
தம் வீட்டுக்கு எந்த இளைஞராவது வர வேண்டும் என்று விரும்பினால் தமது சகோதரியின் புதல்விகளிடம் அவரை அனுப்பி பாலூட்டச் சொல்வார். இதன் மூலம் பால்குடி உறவு மூலம் பாட்டியாகி விடுவார்கள் என்றும் ஹதீஸ் உள்ளது. (இதைப் பிறகு பார்ப்போம்)
03 – அன்னியப் பெண்ணுடன் நடக்க வேண்டிய முறை
(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும் மார்க்கத்தில் அன்னியப் பெண்ணின் மார்பில் பால் அருந்துவது ஆபாசம் இல்லையா?
உணர்வைத் தூண்டக் கூடியது அல்லவா?
இதை எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருப்பார்கள்?
இறைவன் வகுத்துத் தந்த ஒழுக்க மான்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழி தோண்டிப் புதைத்தார்கள் என்று கூறும் இது ஹதீஸா? இட்டுக்கட்டப்பட்ட பொய்யா?
அந்நிய ஆண்கள் தங்களின் வீட்டுக்குள் வர வேண்டும் என்று விரும்பும் பெண்கள் பால்புகட்டி விட்டால் அதன் பின்னர் பர்தாவைக் கடைப்பிடிக்க வேண்டாமே? தனித்திருக்கவும் செய்யலாமே? இதைக் கற்பிக்கத் தான் அல்லாஹ்வின் தூதர் வந்தார்களா?
மேலும் ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருக்கும் போது மாட்டிக் கொள்கிறாள். நான் பால் கொடுத்து இவருக்கு தாயாகிக் கொண்டு இருந்தேன் என்று இந்தக் கட்டுக் கதையின் படி கூற முடியுமா? முடியாதா?
மார்பகத்தில் வாய் வைத்திருக்கும் நிலையில் ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் மாட்டிக் கொண்டாலும் அப்போதும் இதே பதிலைச் சொல்லி இருவரும் தப்பித்துக் கொள்ள முடியுமே?
இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களையே கேலிக் கூத்தாக்கும் இது போன்ற ஆபாசம் குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் காட்டிய அறவழிக்கும் மாற்றமாகத் தெரியவில்லையா?
நிர்பந்தமான நிலையில் சில சட்டங்கள் தவிர்க்கப்படுவது இஸ்லாத்தில் சட்ட விதியாக உள்ளது. ஒரு பெண்ணின் மார்பகத்தில் கட்டி போன்றவை இருந்து தக்க பெண் மருத்துவர் இல்லாவிட்டால் ஆண் மருத்துவரிடம் காட்டினால் இதை நிர்பந்தம் என்று மார்க்கம் ஏற்றுக் கொள்ளும்.
ஸாலிமுக்கோ, ஸஹ்லாவுக்கோ அப்படி என்ன நிர்பந்தம் இருந்தது?
ஸாலிம் பச்சிளங் குழந்தையா?
ஸஹ்லாவின் அரவணைப்பு இல்லாமல் வாழ முடியாதா?
குழந்தைப் பருவத்தில் உள்ளவரா?
ஸஹ்லா அவர்களின் வீட்டுக்குப் போகாமல் இருக்க வேண்டியது தானே?
அல்லது அவர் வரும் போது ஸஹ்லா ஹிஜாபைக் கடைப்பிடிக்க வேண்டியது தானே?
வீடு வாசலோ ஸாலிமுக்கு இல்லாவிட்டால் எத்தனையோ ஏழை நபித்தோழர்கள் பள்ளிவாசலே வீடாகக் கொண்டு தங்கிக் கொண்டது போல் தங்கியிருக்கலாமே?
எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் ஆபாசத்தை நபிகள் நாயகம் போதித்தார்கள் என்ற கருத்து பரவி இஸ்லாம் எக்கேடு கெட்டாலும் உங்கள் முன்னோர் இதைக் கவனிக்கத் தவறியதால் நீங்களும் கவனிக்காமல் இருப்பீர்களா?
இந்தக் கட்டுக் கதையை உண்மை என்று வாதிடுபவர்களிடம் ஒரு பெண் இப்படியொரு பிரச்சினையைக் கொண்டு வந்தால் இந்த ஹதீஸின் படி ஃபத்வா கொடுப்பார்களா?
மேலும் சிறு குழந்தையில் இருந்து அவரைத் தூக்கி வளர்த்தார்கள் என்பதால் அவரைப் பிரிய முடியவில்லை என்ற அளவுக்குக் கூட இதில் அவசியம் இல்லை.
ஏனெனில் ஸாலிம் இளைஞராக இருக்கும் போது அன்ஸாரிப் பெண்ணுக்கு அடிமையாக இருந்தார். அப்போது தான் அபூஹுதைபா அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்து வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டிய பத்ஹுல் பாரி மேற்கோளில் இருந்தும் இன்ன பிற சான்றுகளில் இருந்தும் இதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் போதனைப்படி தாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழச் செய்யவே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஒழுக்கக் கேடுகளுக்கு பாதை வகுத்துக் கொடுப்பதற்காக தூதராக அனுப்பப்படவில்லை. விபச்சாரத்தைப் பொருத்தவரை அதைச் செய்யக் கூடாது என்று மட்டும் தடை இல்லை. அதன் பக்கம் நெருங்கவே கூடாது என்பதும் கட்டளை.
வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந் தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப் படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.
இளைஞன் ஒருவன் நடுத்தர வயதுப் பெண்ணின் மார்பகத்தில் வாய் வைப்பது விபச்சாரத்தின் பக்கம் நெருங்குவதா இல்லையா?
மேலும் இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணிடம் பால் குடித்தால் அதன் பின்னர் ஆசை நீங்கி தாய் பிள்ளையாகி விடுவார்கள் என்பதும் மடமைத்தனமானது. நடைமுறை உண்மைக்கு மாற்றமானது.
கணவன் தனது மனைவியிடம் பால் அருந்துகிறான். அப்போது மனைவி உடனே தாயாகி விடுவாள் என்று இவர்கள் கூறுவார்களா?
அதன் பின் மனைவியின் மீது ஆசையே ஏற்படாது என்று இவர்கள் கூறுவார்களா?
அல்லது அத்துடன் தம்பதியர் பிரிந்து விட வேண்டும் என்று கூறுவார்களா? இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் இப்படி ஃபத்வா கொடுக்க வேண்டியது தானே?
வாதங்களும் பதில்களும்
ஸாலிம் பற்றிய இந்தச் செய்தி தொடர்பாக எதிர்த்தரப்பினர் முன் வைக்கும் வாதங்களையும் நமது பதில்களையும் இங்கு பார்ப்போம்.
01 – ஸாலிமுக்கு மட்டும் உரியது
உங்கள் மனைவிமார்கள் விஷயத்தில் இப்படி நடப்பீர்களா? என்று யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக ஒரு தடுப்புச் சுவரை எழுப்பி விட்டுத் தான் இது சரியான ஹதீஸ் என்று வாதிடுகிறார்கள்.
இது சரியான ஹதீஸ் தான். ஆனால் இது ஸாலிமுக்கு மட்டும் உரியது. மற்றவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்பது தான் இவர்களின் முதலாவது சமாளிப்பு. இது தங்களை நோக்கி கேள்வி வரக் கூடாது என்பதற்காக இவர்கள் கண்டுபிடித்த தற்காப்பு ஆயுதம் தானே தவிர இதில் கடுகின் முனையளவு கூட இல்லை.
ஆபாசத்துக்கு விதிவிலக்கு உண்டா?
இஸ்லாத்தில் பொதுவான சட்டத்தில் இருந்து சிலருக்கு மட்டும் விதிவிலக்குகள் உள்ளன என்பது நமக்கும் தெரியும். அந்த விதிவிலக்கு வணக்க வழிபாடுகள் தொடர்பானதாகத் தான் இருக்கும். ஆபாசமான அருவருக்கத் தக்கவைகளில் நிச்சயம் இருக்காது.
ஒருவர் விபச்சாரம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அனுமதித்தார்கள் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உதாரணத்துக்குச் சொல்கிறோம்.) என்று ஒரு நூலில் எழுதப்பட்டிருந்தால் அதைப் பொய் என்று சொல்ல வேண்டுமா? அவருக்கு மட்டும் அளித்த விதிவிலக்கு என்போமா? பொய் என்றே கூறுவோம். ஏனெனில் அல்லாஹ் ஆபாசமானதையும் அருவருக்கத் தக்கதையும் ஏவமாட்டான். இதில் விதிவிலக்கையும் தரமாட்டான்.
அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா? என்று கேட்பீராக!\
நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.
கொலை, இணை கற்பித்தல், விபச்சாரம், ஆபாசம் போன்றவைகளை அல்லாஹ்வின் தூதர் சிலருக்கு அனுமதித்தார்கள் என்று கூறப்பட்டால் அது எந்த நூலில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டுக்கதையே. ஹதீஸ் அல்ல. எனவே இது ஆபாசமான செயலாக இருப்பதால் இதில் விதி விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஊகத்தின் அடிப்படையில் விதிவிலக்கு இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைகளில் சுமார் சரி பாதியை எடுத்துக் கொண்டால் அவை தனி நபர்களிடம் சொல்லியதாகத் தான் அமைந்திருக்கும். அது அவருக்கு மட்டும் உரியது என்று இஸ்லாத்தில் சரி பாதியை விட்டு விட முடியுமா? இது உனக்கு மட்டுமே. வேறு எவருக்கும் இல்லை என்று சட்டம் வகுக்கும் அதிகாரம் படைத்த இறைவன் கூற வேண்டும். அல்லது அவனது தூதர் கூற வேண்டும்.
உதாரணத்துக்குப் பின் வரும் ஹதீஸை எடுத்துக் காட்டலாம்.
قال النبيُّ ( 953 صلى الله عليه وسلّم: إِنَّ أوَّلَ ما نبدَأُ في يومِنا هذا أن نُصلِّيَ ثمَّ نرجِعَ فنَنْحرَ. فمن فعلَ ذلكَ فقد أصابَ سُنَّتَنا، وَمَن نَرَ قبلَ الصلاةِ فإِنِّا هوَ لحمٌ قدَّمَهُ لأهلهِ، ليسَ منَ النُّسكِ في شيء. فقال رجلٌ منَ الأنصارِ يقالُ له أبو بُرْدةَ بنُ نِيارٍ: يا رسولَ اللهِ ذَبحتُ وعندي جَذَعةٌ خيرٌ مِن .مُسِنَّةٍ. فقال: اجعلهُ مكانَهُ ولن تُوفيَ أو تَزِي عن أحدٍ بعدَك
இன்று (பெருநாளில்) நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் தொழுகை. பிறகு நம் வீட்டுக்குச் சென்று குர்பானி கொடுக்க வேண்டும். யார் இப்படிச் செய்கிறாரோ அவர் நமது வழியைக் கடைப்பிடித்தார். தொழுகைக்கு முன்னர் யார் அறுத்து விட்டாரோ அவர் தனது குடும்பத்துக்காக அவர் அறுத்த இறைச்சியாகும். இது கிரியைகளில் அடங்காது என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.
அப்போது அபூபுர்தா எனும் தோழர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே, நான் முன்பே அறுத்து விட்டேன். (என்னிடம் ஒரு வருட ஆட்டுக்குட்டி இல்லை). அதைவிடச் சிறந்ததாக ஆறுமாத குட்டி உள்ளது. (அதை அறுக்கட்டுமா) என்று கேட்டார். ஏற்கனவே அறுத்ததற்குப் பதிலாக இதை அறுப்பீராக. உமக்குப் பின் வேறு எவருக்கும் இது இல்லை என்று கூறினார்கள்.
இது போல் கூறப்பட்டால் தான் அது தனி நபருக்கு உரிய சலுகை எனக் கூற வேண்டும். இவ்வாறு கூறுவோர் இதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். ஆபாசத்திலும் விதிவிலக்கு உண்டு என்பதற்கும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
ஒரு வகையில் இவர்களும் அதைச் செயல்படுத்த மறுத்து தங்களையும் தங்கள் குடும்பத்துப் பெண்களையும் காப்பாற்றிக் கொள்ள இந்த ஹதீஸை மறுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் நபியின் மீது இவர்கள் போட்ட பழி அப்படியே உள்ளது. நாமே நபியின் மீதும் நபித்தோழியர் மீதும் இவர்கள் போட்ட பழியைத் துடைத்து விட்டு குறித்த செய்தி ஹதீஸ் இல்லை என்று மறுக்கிறோம். இது தான் வேறுபாடு.
02 – மாற்றப்பட்ட சட்டம்
நபிகள் நாயகம் இப்படிக் கூறியது உண்மை தான். ஆனால் பின்னர் இது மாற்றப்பட்டு விட்டது என்றும் இன்னும் சிலர் சமாளிக்கின்றனர். முன்னர் இது நடைமுறையில் இருந்து இப்போது மாற்றப்பட்டு விட்டது என்று இவர்கள் கூறுவதால் இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
ஆபாசமான அருவருக்கத்தக்க் ஒன்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காலகட்டத்தில் ஏவியுள்ளார்கள் என்று ஆகுமே? அது பரவாயில்லையா? என்று இவர்களிடம் கேட்க விரும்புகின்றோம். இப்படிக் கூறுபவர்கள் இதற்கும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். மாற்றப்பட்டது என்றால் அதற்கான ஆதாரத்தைக் வஹீ இறங்கிய காலத்தில் வாழ்ந்த நபித்தோழரின் சான்றை எடுத்துக் காட்ட வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்த பிறகும் இதை நடைமுறைப்படுத்தியதாக முஸ்லிமில் உள்ள ஹதீஸைக் குறிப்பிட்டுள்ளோம். (இதுவும் பொய் தான். ஆனால் இவர்களின் வாதப்படி இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்)
இந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள், ஸாலிமுக்கு மட்டும் உள்ளதை எப்படி தமக்காக நடைமுறைப்படுத்தினார்கள்? மாற்றப்பட்டிருந்தால் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின் ஆயிஷா (ரலி) எப்படி செயல்படுத்தினார்கள்? இந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
மேலும் முன்னர் இது மாதிரி அனுமதி இருந்து பின்னர் மாற்றப்பட்டிருக்க முடியாது என்பதை இவர்கள் ஏற்றிப் போற்றும் ஹதீஸ்களே (?) தெளிவுபடுத்தி விடுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹ்லாவிடம் மேற்கண்டவாறு கூறியவுடன் அந்தப் பெண்மணி அவர் தாடி உள்ளவராக இருக்கிறாரே, பெரியவராக இருக்கிறாரே? நான் எப்படி பால் கொடுப்பது? என்று கேட்டதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலூட்டுதல் தொடர்பான சட்டம் – அதாவது இரண்டு வயது வரை தான் பால்குடி உறவு என்ற சட்டம் நடைமுறையில் இருந்தால் தான் இவ்வாறு அவர்கள் கேட்டிருக்க முடியும். எனவே இது முன்னர் நடைமுறையில் இருந்து மாற்றப்பட்டது எனக் கூறுவது தங்கள் குடும்பத்துப் பெண்களை நோக்கி இந்தக் கேள்வி எழும்பாமல் இருப்பதற்காகவே என்பதில் ஐயம் இல்லை.
இது சம்மந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில மனைவிகள் “ஸாலிமுக்கு மட்டும் உரிய சலுகையாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.
நாங்கள் கருதுகிறோம் என்று அவர்கள் சொல்வதில் இருந்து தமது ஊகமாகவே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஹதீஸை நேரில் அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களின் வாதத்தை மறுத்து நடைமுறைப்படுத்தினார்கள்.
தன் வீட்டுக்கு வர விரும்பும் அந்நிய இளைஞர்களைத் தனது சகோதரியின் புதல்விகள் வீட்டுக்கு அனுப்பி பால்குடித்து வரச் சொல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆதாரம் : அபூதாவூத், அஹ்மத்
அதாவது இச்செய்தியை அறிவிக்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் இதை நடைமுறைப்படுத்தி உள்ளனர் என்று மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நாம் கூறுவதைப் போல் அவை அனைத்துமே பொய் என்று கூறிவிட்டால் பிரச்சனை இல்லை. சரி என்று வாதிட்டால் இது மாற்றப்படவும் இல்லை: ஸாலிமுக்கு மட்டும் உரியதும் அல்ல: அனைவருக்கும் உரியது என்று தான் அவர்கள் கூற வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் தம் சகோதரிகளின் புதல்விகளிடம் இளைஞர்களை அனுப்பி பால் கொடுக்கச் சொல்வார்கள் என்பது அதை விட ஆபாசமாக உள்ளது. அந்தச் சகோதரியின் கணவன்மார்கள் இதை அனுமதிப்பார்களா? என்பதைப் பொருத்த விஷயத்தில் ஆயிஷா (ரலி) எப்படி முடிவு எடுத்திருக்க முடியும்? என்ற இன்னொரு புதுக் கேள்விக்கும் இவர்கள் பதில் சொல்ல வேண்டும் எனவே இந்தச் செய்தி ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று அல்லாஹ்வின் தூ தர் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
03 – கறந்து கொடுத்தார்களா?
பச்சைப் பொய் என்று பளிச்செனத் தெரியும் ஒரு செய்தியை நியாயப்படுத்த முனைந்து இவர்கள் கண்டுபிடித்த மற்றொரு கயிறு திரித்தல் தான் இதுவாகும். இளைஞரான ஸாலிமுக்குப் பாலூட்டு என்பதன் அர்த்தம் வேறாகும். அதாவது பாலைக் கறந்து குவளையில் பிடித்து அவரிடம் கொடு என்பது தான் இதன் கருத்து என்கிறார்கள். அதாவது இதைச் சரி என்று கூறும் இவர்கள் நடைமுறைப்படுத்திட தயாராக இல்லை. எனவே தான் இப்படியெல்லாம் உளறுகிறார்கள்.
மேற்கண்ட ஸாலிம் தொடர்பான ஹதீஸில் அர்ளியிஹி
என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் மார்பில் வாய் வைத்து குடிப்பது தான். கறந்து குடிப்பது அல்ல என்பதால் இவர்களின் விளக்கம் அடிபட்டுப் போகிறது. பால் கொடுக்கச் சொன்ன போது இவர் இளைஞராகவும் தாடி உள்ளவராகவும் இருக்கிறாரே என்று ஸஹ்லா கேட்டதாக அந்த ஹதீஸ் கூறுகிறது. கறந்து கொடுப்பது தான் அர்த்தம் என்றால் இக்கேள்விக்கு இடமில்லை.
கறந்து கொடுக்கும் போது இளைஞராக இருந்தால் என்ன? சிறுவராக இருந்தால் என்ன? இவர் இவ்வாறு கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) புன்னகை செய்ததாகவும் கூறப்படுகிறது. கறந்து கொடுப்பது என்றால் இவர் கேட்டவுடன் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு சிரிப்பார்களா?
மார்பகத்தில் வாய் வைத்துக் குடித்தாலே பால்குடி உறவு ஏற்படும் என்ற திர்மிதீ ஹதீஸை முன்னர் கூறியுள்ளோம். அதற்கு மாற்றமாகவும் இவ்விளக்கம் உள்ளது. இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு அபீமுலைக்கா என்பவர் ஒரு வருடம் வரை இதன் விபரீதத்திற்குப் பயந்து மக்களுக்கு அறிவிக்காமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கறந்து கொடுப்பது இதன் பொருள் என்றால் அதற்காக ஏன் பயப்பட வேண்டும்? கறந்து கொடுத்தார்கள் என்று பொருள் கொண்டாலும் அதுவும் குர்ஆன், ஹதீஸூக்கு மாற்றமாகவுள்ளதே? அதற்கு என்ன பதில்? இரண்டு ஆண்டுகளுக்குள் பால் குடித்தால் தான் பால் குடி உறவு ஏற்படும் என்பது இப்போதும் மறுக்கப்படுவதாகத் தானே அமையும்?
கறந்து கொடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்போதும் இவர்கள் தப்பிக்க முடியாது. இவர்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறார்களோ அதை இப்போதும் சந்தித்தே ஆக வேண்டும். ஒரு அன்னியப் பெண்ணுடன் ஒரு இளைஞன் தனித்திருக்கும் போது மாட்டிக் கொள்கிறான். நான் இவனுக்கு பால் கறந்து கொடுத்தேன் என்று சொன்னால் இவர்கள் அதைச் சரிகாண்பார்களா?
ஆனால் இந்த விளக்கம் அவளுக்குத் தெரிந்தால் எனக்குப் பால் சுரக்கும் காலத்தில் இவருக்குக் கறந்து கொடுத்து விட்டேன் என்று கூறுவதற்கு வழியமைத்துக் கொடுக்கிறார்கள். இதை நியாயப்படுத்துவோரிடம் நாம் கேட்கிறோம். உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மனைவியுடன் தனித்திருக்க விரும்பும் இளைஞர்களுக்குப் கறந்து பால் கொடுத்து தாயாக்க நீங்கள் உடன்படுவீர்களா? கறந்து கொடுப்பது தான் உங்களுக்குப் பிரச்சினை இல்லையே!
நீங்கள் தான் செய்ய மாட்டீர்கள்! ஒரு இளைஞன் வந்து என் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. அவளது பாலை நான் கறந்து குடித்து விட்டேன். இனி மேல் நான் சர்வ சாதாரணமாக அவள் வீட்டுக்குப் போகலாம் தானே என்று ஃபத்வா கேட்டால் அதற்கு உங்கள் பதில் என்ன?
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்குப் கறந்து பால் கொடுத்தால் அப்போது கூட பால்குடி உறவு ஏற்படாது என்று ஹதீஸ்கள் கூறும்போது அப்படிக் கூறுவது உச்சகட்ட அறியாமையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
பெற்ற பிள்ளைகள் ஸாலிம் வயதை அடைந்து விட்டால் தாயை விட்டு விலகி விடும் போது அந்தக் கட்டுக் கதையை நியாயப்படுத்துவது தான் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளும் முறையா? இஸ்மாயில் சலபியிடமும், அவருக்கு ஹதீஸ் கலையைத் தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் டாக்டர்களிடமும் நாம் கேட்பது இது தான். இந்த ஹதீஸைச் சரியான ஹதீஸ் என்கிறீர்களா? இல்லையா?
ஏற்கவில்லை என்று நீங்கள் கூறினால் நீங்களும் ஹதீஸ்களை மறுத்து நுபுவ்வத்தை மறுத்த குற்றத்தைச் செய்தவர்களாவீர்களே? ஏற்கிறீர்கள் என்றால் இதை ஏற்றதன் மூலம் குர்ஆனை மறுக்கிறீர்களே! நுபுவ்வத்தை மறுப்பதை விட இறைவனை மறுப்பது பயங்கரமான குற்றமாகி விடுமே!
மேலும் பாலூட்டும் சட்டம் தொடர்பான ஏராளமான ஹதீஸ்களை மறுத்து நுபுவ்வத்தையும் நீங்கள் மறுத்தவர்களாவீர்களே! அதாவது இதை ஏற்க மறுத்தால் ஹதீஸை மறுத்தவர்களாவீர்கள். ஏற்றுக் கொண்டால் ஏராளமான ஹதீஸ்களையும் மறுத்து குர்ஆனையும் மறுத்தவர்களாவீர்கள்.