29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?
29) விவசாயக் கருவிகளினால் இழிவு வருமா?
விவசாயம் என்பது மனித வாழ்வின் உயிர் நாடியாகும். விவசாயம் இல்லாவிட்டால் ஒரு நாடோ, நாட்டின் குடிமக்களோ உயிர்வாழவும் முடியாது. ஆகவே தான் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தை மிகவும் புகழ்ந்து சொல்கின்றார்கள்.
நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.
இஸ்லாமிய மார்க்கம் புகழ்ந்து சொல்லும் இவ்விவசாயம் தொடர்பில், விவசாயக் கருவிகள் இழிவானவை என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. குறித்த செய்தி இஸ்லாத்தின் மூல வேதமான திருமறைக் குர்ஆனின் கருத்துக்கும் நேர் முரணாக இருக்கின்றது. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தினரின் வீட்டில் புகும் போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்
இதே ஹதீஸ் இமாம் தப்ரானீ அவர்கள் தொகுத்த முஸ்னது ஷாமிய்யீன் என்ற நூலில் கூடுதலான சில வாசகங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அபூ உமாமா (ரலி) அவர்கள் கலப்பையையும் இன்னும் சில விவசாயக் கருவிகளையும் பார்த்த போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தக் கருவிகள் எந்த ஒரு கூட்டத்தாரின் வீட்டில் நுழைந்தாலும் அவர்கள் தங்களுக்குத் தானே இழிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதில்லை. அந்த இழிவு மறுமைநாள் வரைக்கும் அவர்களை விட்டும் அகலாது.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் ஸியாத்
நூல் : முஸ்னது ஷாமிய்யீன் பாகம் : 2 பக்கம் : 6 ஹதீஸ் எண் : 816
அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் ஒருவரின் வீட்டில் ஏர் கலப்பையை (விவசாயக் கருவிகளை) பார்த்ததும் “இந்தக் கருவி இருக்கும் வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்துவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கின்றார்கள்.
அபூ உமாமா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பின் பிரகாரம் விவசாயம் செய்வது இழிவுக்குரிய அல்லாஹ்வின் தண்டனைக் குரிய குற்றமாக நபியவர்கள் கூறுவதாக ஆகின்றது. விவசாயக் கருவிகளை வீட்டில் வைத்திருப்பது இழிவை நமக்கு நாமே தேடிப் பெற்றுக் கொள்வதற்கு சமனானதாக மேற்கண்ட செய்தி தெரிவிக்கின்றது.
உலக மக்களின் உயிர்நாடியாக இருக்கின்ற விவசாயத்தினை செய்வதற்கு பயன்படும் கருவிகள் வீட்டில் இருந்தால் இழிவு ஏற்படும் என்றால், ஒரு மண்வெட்டியைக் கூட ஒருவரும் வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகிவிடும். இப்படியான ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறுவார்களா என்று முதலில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் மாத்திரம் வாழும் ஒரு நாட்டில் இந்த ஹதீஸ் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். விவசாயம் செய்வதற்கு எந்த முஸ்லிமும் முன்வரவும் மாட்டான். அரசும் அதனை செய்யச் சொல்ல முடியாத நிலை உருவாகும்.
மதீனா வாசிகளின் நிலை என்னவாகும்?
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த மதீனா நகரும், மக்கா நகரும் விவசாயத்துடன் தொடர்பான இரண்டு நகரங்களேயாகும். மதீனா நகர் பேரீச்சம் பழ விளைச்சலுக்கு பெயர் போன நகராகும். இப்படியான நிலையில் மதீனா ஸஹாபாக்களின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.
விவசாயக் கருவி இருக்கும் வீட்டில் இழிவுதான் வரும் என்றால் மதீனா நபித் தோழர்களின் வீடுகளின் நிலை என்னவாகியிருக்கும்? அவர்கள் விவசாயக் கருவிகளை வைத்திருந்தார்களே? அப்படியானால் அவை அனைத்தும் இழிவானவையா? இந்தக் கேள்விகளுக்கு மேற்கண்ட செய்தியை உண்மை என்று நம்புபவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
அல்குர்ஆனுக்கு மாற்றமான செய்தி
மேற்கண்ட ஹதீஸை உண்மை என்று ஒப்புக் கொண்டால் விவசாயத்தை வலியுறுத்தி இடம் பெற்றிருக்கும் பல திருமறைக் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். காரணம் விவசாயம் என்பது சிறந்த தொழில் என்று இஸ்லாம் பாராட்டிச் சொல்கின்றது. இஸ்லாம் சிறப்பித்துச் சொல்லும் இந்தத் தொழிலை இழிவானது என்று சொல்லும் செய்தி எப்படி உண்மையானதாக இருக்க முடியும்?
அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.
நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா? நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். நாம் கடன் பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப் பட்டு விட்டோம் என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.
“வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்” என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுப்பட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.
இரண்டு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அவர்களில் ஒருவருக்கு இரண்டு திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அவ்விரண்டுக்கும் பேரீச்சை மரங்களால் வேலி அமைத்து, அவ்விரண்டுக்கும் இடையே பயிர்களையும் ஏற்படுத்தினோம்.
மேலும் கீழுள்ள வசனங்களிலும் விவசாயம் தொடர்பில் பார்க்க முடியும்.
(அல்குர்ஆன்: 02:22, 02:164, 06:99, 06:141, 07:57, 12:47, 13:4, 16:11, 32:27, 39:21, 56:63, 56:64) ➚
விவசாயத்தைப் புகழ்ந்த நபியவர்கள்
நபி (ஸல்) அவர்களும் விவசாயத்தைப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரிச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம் இந்த பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை ஒரு முஸ்லிம் தான் (நட்டுவைத்தார்) என்று விடையளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது ஏதேனும் ஒன்றோ உண்டால் அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : அஹ்மத் (12512) நிலையான தர்மத்தை பெற்றுத்தரும் இத்தொழில் இழிவைத் தரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.