24) காணாமல் போன இரண்டு வசனங்கள்
24) காணாமல் போன இரண்டு வசனங்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் தனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது தான் திருமறைக் குர்ஆன் ஆகும். திருமறைக் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட இறைவேதம் என்பதுடன், அல்குர்ஆனை எதிர்க்கும் அனைவருக்கும் சவால் விடுக்கும் புனித வேதமுமாகும்.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
திருமறைக் குர்ஆனில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இறைவன் மிகத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றான். உலகில் எவ்வித சந்தேகமோ, தவறுகளோ, முரண்பாடுகளோ அற்ற ஒரே வேதம் திருமறைக் குர்ஆன் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
அல்குர்ஆனில் சந்தேகத்தை உண்டாக்கும் செய்தி
நபித் தோழியர் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தி அல்குர்ஆன் மீது சந்தேகத்தை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளது. குறித்த செய்தி பற்றிய விபரங்களை இப்போது ஆராய்வோம்.
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
குறித்த செய்தி இன்னும் கொஞ்சம் விளக்கமாக அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
(திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது.
எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
குறிப்பிட்ட 10 தடவைகள் பால் அருந்தினால் தான் பால் குடி உறவு உண்டாகும் என்றொரு வசனம் குர்ஆனில் அருளப்பட்டு இருந்தது. பின்னர் 05 தடவைகள் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உண்டாகிவிடும் என்று சட்டம் மாற்றப்பட்டது. இந்த வசனம் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்ற வரை திருமறைக் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டுதான் இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
குறித்த வசனம் பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டுவது தொடர்பாகத் தான் இறங்கியது என்று அஹ்மதில் இடம் பெற்றிருக்கும் செய்தி மேலதிக தகவலாக அமைந்துள்ளது. நபியவர்கள் நோய்வாய்ப்பட்ட போது நபிக்கு பணிவிடை செய்யும் காரியத்தில் அனைவரும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் வீட்டுப் பிராணி ஒன்று வீட்டுக்குள் நுழைந்து குறித்த வசனம் எழுதப்பட்டிருந்த தாளைச் சாப்பிட்டு விட்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பல விதங்களில் மேற்குறித்த செய்தி தவறானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். குறித்த வசனம் பருவ வயதை அடைந்தவர்களுக்குப் பால் புகட்டுவது தொடர்பானது என்று மேற்கண்ட செய்தி சொல்கிறது. பால்குடி சட்டம் என்பது இரண்டு வயதிற்கு உட்பட்டவர்களுக்குத் தான் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்கிறது.
அல்லாஹ் பால்குடி சட்டத்திற்கு குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.
பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண) வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.
தாய் பிள்ளை உறவு உண்டாகுவதற்கான பால்குடி எல்லை என்பது இரண்டு வருடங்களுக்குள் தான் என்று மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனங்கள் சொல்கின்றன. ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸில் பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் ஊட்டுவது தொடர்பான சட்டம் கொண்ட வசனம் இறங்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இது தெளிவான முரண்பாடாகும். பால் குடித்தலின் கால எல்லை இரண்டு வருடங்கள் தான் என்று சொல்லும் குர்ஆன் அதற்கு மாற்றமாக பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற சட்டத்தை கண்டிப்பாகக் கூறாது.
மாத்திரமன்றி, பருவ வயதை அடைந்தவருக்கு பால் ஊட்டுவதென்பது ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயலே தவிர நல்ல வழிமுறையல்ல. இப்படியான வழிமுறைகளை இஸ்லாம் கண்டிப்பாக காட்டித் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பால்குடி உறவு இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குத் தான் என்று குர்ஆன் கூறும் போது பெரியவர்களுக்கு 10 முறை பால் புகட்டுமாறு முரண்பாடாக குர்ஆன் கூறாது. 10 தடவையாக இருந்ததை 5 தடவையாக மாற்றி பருவவயதை அடைந்தவர்களுக்கு பால்புகட்டும் அசிங்கத்தை குர்ஆன் கூறுமா? (பால்குடிச் சட்டம் தொடர்பில் விரிவான விளக்கங்களை ஸாலிம் (ரலி) பற்றிய தலைப்பில் காண்க).
இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்பவர்கள் இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு பருவ வயதை அடைந்தவர்களுக்கு பால் புகட்டலாம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? இதைத் தங்களது வாழ்க்கையில் செயல்படுத்துவார்களா?
பால்குடி உறவு ஏற்படுவதற்கு ஐந்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக இரண்டுக்கு மேல் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் இந்த ஹதீஸ் மற்ற விமர்சிக்கப்படாத ஹதீஸ்களுடன் மோதுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்முல் ஃபள்ல் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி)
ஒரு செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளரிடமிருந்து முரண்பட்ட பலவிதங்களில் செய்தி அறிவிக்கப்பட்டால் குறித்த செய்தி முள்தரப் (குளறுபடியானது) என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுவார்கள். இவ்வாறு முரண்பட்டு வரும் செய்திகள் அனைத்தும் நம்பகமான உறுதிமிக்க ஆட்கள் வழியாக வந்தாலும் முரண்பாடு வந்து விட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஐந்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்று நாம் விமர்சித்துக் கொண்டிருக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் கூறுகிறது. பத்து முறை பால் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் மூன்று முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஏழு முறை பால்குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கருதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று, ஐந்து, ஏழு, பத்து என்று முரண்பட்டு அறிவிப்பு வருவதால் ஹதீஸ் கலை விதிப்படியும் இந்த செய்தி குளறுபடியானதாகி விடுகிறது.
எனக்குப் பால்புகட்டுவதற்காக ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை அவர்களின் சகோதரியும் அபூபக்கர் (ரலி) அவர்களின் மகளுமான உம்மு குல்சூம் (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். இவர் என்னிடம் வந்து செல்வதற்காக 10 முறை இவருக்கு நீங்கள் பால் புகட்டுங்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் (உம்மு குல்சூமிடம்) கூறினார்கள். உம்மு குல்சூம் எனக்கு மூன்று தடவை பால் புகட்டினார்கள்.
பின்பு அவர்கள் நோயுற்றதால் எனக்கு மூன்று தடவை தவிர அவர்கள் பாலூட்டவில்லை. உம்மு குல்சூம் (ரலி) அவர்கள் எனக்கு முழுமையாக 10 முறை பாலூட்டாததால் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து செல்லவில்லை.
அறிவிப்பவர் : சாலிம் பின் அப்தில்லாஹ்
நூல் : பைஹகீ பாகம் : 7 பக்கம் : 457
மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் சாலிம் என்பவர் வேறு, சஹ்லா (ரலி) அவர்கள் தொடர்பான பால் குடி செய்தியில் இடம்பெற்றுள்ள சாலிம் என்பவர் வேறு ஆகும். இவர் சாலிம் பின் அப்தில்லாஹ் ஆவார். இவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் பிறக்கிறார். இந்த சாலிமிற்கு 10 முறை பால் புகட்டுமாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி)
நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466
பல குழப்பங்கள் இந்தச் செய்தியில் இருப்பதால் எதிர்த் தரப்பினர் ஆதரிக்கும் அறிஞர்களில் பலர் நாம் எடுத்து வைத்திருக்கும் கேள்விகளை எழுப்பி இந்த ஹதீஸை மறுத்துள்ளார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் மாலிக் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளவில்லை.
இமாம் இப்னு ஹஜரின் கூற்று :
இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார்.
குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.
ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.
நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147
அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லையா?
பால்குடி தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட செய்தி இன்னும் பல விதங்களில் தவறானதாகும். குறித்த செய்தியை உண்மை என்று ஒப்புக் கொண்டால் புனித அல்குர்ஆன் மீதே பாரிய சந்தேகத்தை அது ஏற்படுத்தி விடும்.
குறித்த வசனம் அல்குர்ஆனில் விடுபட்டு விட்டதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி சொல்கின்றது. ஆனால் குர்ஆனில் எதுவும் விடுபடமாட்டாது, விடுபடவில்லை என்றும் அல்குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குர்ஆன் கூறுகின்றது.
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆனில் யாருக்கும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ்வே அதனைப் பாதுகாக்கின்றான் என்று திருமறைக் குர்ஆன் கூறும் போது நபியவர்களின் மரணத்திற்குப் பின் அல்குர்ஆனில் இருந்த ஒரு வசனத்தை ஸஹாபாக்கள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்.
நாம் இன்றைக்கு பயன்படுத்தும் அல்குர்ஆன் முழுமையானதல்ல, அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட பால்குடி வசனம் இணைக்கப்பட வேண்டியுள்ளது என்று ஆயிஷா (ரலி) அவர்களின் குறித்த செய்தி கூறுகின்றது. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
உள்ளங்களில் பாதுகாக்கப்பட்ட புனித குர்ஆன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.
பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காணலாம். நினைவாற்றல் மூலமாக மட்டும்தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.
எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன் ஒட்டுமொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம். 23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும்.
23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட திருக்குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்திட முடியும்.
மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள். ‘முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்” என்பது தான் அந்த ஏற்பாடு.
திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள். எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக்குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.
இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் அவர்கள் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக ஏற்கத்தக்க நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(புகாரி: 6, 1902, 3220, 3554, 4998)
இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். குறிப்பாக,
- அபூபக்ர் (ரலி)
- உமர் (ரலி)
- உஸ்மான் (ரலி)
- அலீ (ரலி)
- தல்ஹா (ரலி)
- ஸஅது (ரலி)
- இப்னு மஸ்வூத் (ரலி)
- ஹுதைஃபா (ரலி)
- ஸாலிம் (ரலி)
- அபூஹுரைரா (ரலி)
- இப்னு உமர் (ரலி)
- இப்னு அப்பாஸ் (ரலி)
- அம்ர் பின் ஆஸ் (ரலி)
- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
- முஆவியா (ரலி)
- அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
- அப்துல்லாஹ் பின் ஸாஇப் (ரலி)
- ஆயிஷா (ரலி)
- ஹஃப்ஸா (ரலி)
- உம்மு ஸலமா (ரலி)
- உபை பின் கஅபு (ரலி)
- முஆத் பின் ஜபல் (ரலி)
- ஸைத் பின் தாபித் (ரலி)
- அபுத்தர்தா (ரலி)
- மஜ்மா பின் ஹாரிஸா (ரலி)
- அனஸ் பின் மாலிக் (ரலி)
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள்.
சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள். இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது.
மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் தாம் எழுதிவைக்கப்பட்டிருந்த தாளை பிராணி சாப்பிட்டதால் தான் அந்த வசனம் குர்ஆனில் இல்லை என்று கூறியதாக குறித்த ஹதீஸ் கூறுகின்றது. இது சரியான காரணம் அல்ல. ஏனென்றால் எழுதி வைக்கப்பட்ட தாள் தொலைந்து விட்டாலும் பலருடைய உள்ளங்களில் அந்த வசனம் பாதுகாக்கப்பட்டிருக்கும். வசனம் தொலைந்து போனதற்குச் சொல்லப்படும் தவறான இந்தக் காரணத்தை வைத்தே இது உண்மை இல்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
அத்துடன் நபியவர்களின் காலத்திலேயே அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களுடன் இன்னும் பல நபித்தோழர்களும் உள்ளடங்குகின்றார்கள். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் குறித்த வசனம் அல்குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழரும் அறிவிக்கவில்லை. இந்த அடிப்படையிலும் இது தவறான செய்தி என்பது புலப்படுகின்றது.
முழு சமுதாய அங்கீகாரம் பெற்ற
அல்குர்ஆனில் குறைபாடா?
குர்ஆனுடைய தனித்தன்மை என்னவென்றால் பல நபித்தோழர்களின் அங்கீகாரத்துடன் ஏக மனதாக குர்ஆன் தொகுக்கப்பட்டது. இக்குர்ஆனைத் தொகுக்கும் பணியை ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் செய்தார்கள். பல நபித்தோழர்களிடம் சென்று அவர்கள் வைத்திருந்த வசனங்களை ஒன்று திரட்டி பல நபித்தோழர்கள் முன்னிலையில் உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்டது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது திருக்குர்ஆனை எழுத்து வடிவில் முறைப்படுத்தும் குழுவுக்கு தலைமை வகித்தவர். எனவே குர்ஆன் அத்தியாயங்களை வரிசைப்படுத்தவும், பல்வேறு பிரதிகள் தயாரிக்கவும் உஸ்மான் (ரலி) நியமித்த குழுவுக்கும் அவரையே தலைவராக நியமித்தார்கள்.
இந்தக் குழுவில் அப்துல்லாஹ் பின் ஸ_பைர் (ரலி), ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஐந்து தடவை பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர வேறு எந்த நபித்தோழர்களும் கூறவில்லை. குர்ஆனை மனனம் செய்து வைத்திருந்த பல நபித்தோழர்கள் இந்த வசனம் குர்ஆனில் உள்ளது என்று கூறவில்லை. குர்ஆனைத் தொகுக்கும் வேலை முடிக்கப்பட்ட போது ஏன் இந்த வசனத்தை விட்டு விட்டீர்கள் என்று யாரும் கேட்கவும் இல்லை.
அல்குர்ஆனைத் தொகுக்கும் பணியில் இடம் பெற்றிருந்த எந்த நபித் தோழரும் இந்த வசனம் விடுபட்டதாகக் கூறவில்லை. அந்த நேரத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் கூட எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்லாஹ் இறக்கிய வசனத்தை ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து அந்த சமுதாயம் முழுவதும் எப்படி மறந்திருக்கும்?
ஆகவே மேற்கண்ட பலவிதங்களில் அல்குர்ஆனில் பால்குடி தொடர்பான வசனம் காணாமல் போனதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு மாறிவிடுகின்றது.
எதிர்வாதங்களும் நமது பதில்களும்
எதிர்வாதம்
ஆயிஷா (ரலி) அவர்கள் அல்குர்ஆன் தொடர்பில் இட்டுக்கட்டினார்களா?
நமது பதில்
அல்குர்ஆனில் இரண்டு வசனங்கள் அருளப்பட்டு நபியவர்கள் மரணிக்கும் வரை நாங்கள் அவற்றை குர்ஆனில் ஓதிக் கொண்டிருந்தோம். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தவறானது என்றால் அல்குர்ஆனில் இரண்டு வசனங்கள் இறங்கியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் பொய் சொல்கின்றார்களா? அல்குர்ஆன் பெயரில் இட்டுக் கட்டினார்களா? என்று எதிர்த்தரப்பினர் கேள்வியெழுப்புகின்றார்கள்.
குறித்த செய்தியைப் பொருத்த வரையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அதனை அறிவிக்கவில்லை. ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரில் யாரோ ஒருவர் இட்டுக் கட்டியுள்ளார் என்பதே நமது நிலை. ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள செய்தியே இது.
குறித்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் வெளிப்படையில் சரியானதாக இருந்தாலும். செய்தியின் கருத்து இஸ்லாத்தின் மூல வேதமான அல்குர்ஆனில் பாதுகாப்புக்கே சந்தேகத்தை உண்டாக்கும் விதத்தில் அமைந்துள்ளதினால் கண்டிப்பாக இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். அவர்களின் பெயரில் யாரோ ஒருவர் இட்டுக் கட்டியுள்ளார் என்பதே சரியானதாகும்.
எதிர்வாதம்
அல்குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறும் வசனத்தில் திக்ர் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. திக்ர் என்பது குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளும். ஹதீஸைப் பாதுகாப்பதாகவும் அல்லாஹ் கூறுவதால் ஐந்து தடவை பால்குடித்தால் பால்குடிஉறவு ஏற்படும் என்ற வசனம் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
நமது பதில்
போலியான ஒரு செய்தியைக் காப்பாற்றப் போய் தன்னிலை மறந்து இவர்கள் உளருகின்றார்கள் என்பதை இவர்களின் விளக்கங்களில் இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
அல்குர்ஆனில் இல்லாத ஒரு வசனம் இருந்ததாகக் கூறுவதோடு தமது அலட்சியத்தால் தான் குறித்த வசனம் காணாமல் போனது என்று ஆயிஷா (ரலி) கூறுவதாக குறித்த செய்தி கூறுகின்றது. இதனால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதப்பட்டு வந்த அந்த வசனம் இதன் பிறகு ஓதப்படவில்லை. இன்று வரை நாமும் அந்த வசனத்தை ஓதுவது கிடையாது.
குர்ஆனில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓதப்பட்டு வந்த ஒரு வசனம் தொலைக்கப்பட்டு ஓதப்படாமல் இருந்தால் அவ்வசனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். மாறாக குர்ஆனில் மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதப்படும். இந்தக் கருத்தை அந்தச் செய்தி தரும் போது ஹதீஸின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று முற்றிலும் முரணாக சொல்வது ஏற்புடையதல்ல.
அந்த இரண்டு வசனமும் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அந்த இரண்டு வசனத்தையும் இன்று தொழுகையில் இவர்கள் ஓதுவார்களா?
பருவ வயதை அடைந்தவர்களுக்கு பெண்கள் 05 தடவை பால் புகட்ட வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா?
இறைவனுடைய இந்தச் சட்டத்தைச் செயல்படுத்துவார்களா?
ஹதீஸையும் இறைவன் பாதுகாத்துள்ளான் என்பதை நாம் மறுக்கவில்லை. அது உண்மை இதுதான் நமது தெளிவான நிலைபாடும் கூட. இருப்பினும் குர்ஆனுடன் ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை மறுக்க வேண்டும் என்ற விதி ஹதீஸைப் பாதுகாப்பதற்கான விதிகளில் ஒன்று.
மேலுள்ள செய்தி குர்ஆனிற்கு முரண்படுவதால் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறிய செய்திகளுக்குள் இச்செய்தி அடங்காது. ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்துள்ளது. ஒருவரிடமிருந்து மாறுபட்ட பல கருத்துக்கள் வந்தால் அந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஹதீஸ் கலையின் விதியின் பிரகாரமும் இது பாதுகாக்கப்பட்ட செய்திகளுக்குள் அடங்காது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எதிர்வாதம்
ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் தான் தவ்பா என்ற அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்கள் இருந்ததாக ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்தச் செய்தி புகாரியில் (4989) வது எண்ணில் இடம் பெற்றுள்ளது. பலரது கூற்று அவசியமென்றால் ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் மட்டும் இருந்த இந்த வசனங்களை குர்ஆன் என்று முடிவு செய்திருக்கக் கூடாதே?
ஹுசைமா மட்டும் அறிவித்த அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டதைப் போல் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் அறிவிக்கும் இந்த வசனத்தையும் குர்ஆனில் உள்ளது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.
நமது விளக்கம்
எதிர்தரப்பினர் குறிப்பிடுவதைப் போல் ஹுஸைமா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தி புகாரியில் இடம்பெற்றிருப்பது உண்மை தான். ஹுசைமா (ரலி) அவர்களிடத்தில் இருந்த இரண்டு வசனம் குர்ஆனில் சேர்க்கப்பட்ட போது எந்த நபித்தோழரும் அதை மறுக்கவில்லை. மாறாக எல்லோரும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று ஏற்றுக் கொண்டார்கள்.
குர்ஆனை முழுவதும் மனனம் செய்திருந்தவர்கள் கூட இதை மறுக்கவில்லை. இந்த அடிப்படையில் பல நபித்தோழர்களின் அங்கீகாரம் அந்த இரண்டு வசனத்திற்கும் கிடைத்துள்ளது. இது போன்ற அங்கீகாரம் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் செய்திக்குக் கிடைக்கவில்லை.
இது மட்டும் தான் குர்ஆன் என்று சிலர் முடிவு செய்திருக்கும் போது அவர்களுக்கு மாற்றமாக ஹுசைமா (ரலி) அவர்கள் இந்த வசனங்களைக் கொண்டுவரவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்ததை ஸைத் (ரலி) அவர்களுக்குச் சொன்னார்கள். தங்களிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று அவர்கள் வாதிடவும் இல்லை.
ஆனால் இன்று நம்மிடம் இருப்பது மட்டும் தான் குர்ஆன் என்று பல நபித்தோழர்கள் முடிவு செய்துவிட்ட போது இன்னும் இருக்கிறது என்று கூறுவது அந்த ஒட்டு மொத்த சமூகம் எடுத்த முடிவுக்கு எதிரானதாகும்.
ஹுசைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இரண்டு வசனங்களை நான் பெற்றுக் கொண்டேன் என்று ஸைத் (ரலி) அவர்கள் கூறுவதால் வேறு யாரும் இந்த வசனங்களைத் தெரிந்திருக்கவில்லை என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. எழுதி வைக்கப்பட்டதாக யாரிடத்திலும் இல்லை என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பல நபித்தோழர்கள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார்கள்.
ஸைத் (ரலி) அவர்கள் குர்ஆனை நன்கு விளங்கியவராக இருந்தார்கள். அமானிதத்தைப் பேணக்கூடியவர். அறிவுள்ள இளைஞர். நபி (ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை எழுதக் கூடியவர். இவ்வாறு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைப் புகழ்ந்து சொல்கிறார்கள்.
வஹீயை எழுதி வந்த ஸைத் (ரலி) அவர்களுக்கு குர்ஆனைப் பற்றி நிறைய அறிவு இருந்தது. அதனால் தான் குர்ஆனைத் தொகுக்கும் பணிக்கு இவர்களை அபூபக்கர் (ரலி) அவர்கள் தேர்வு செய்தார்கள். குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் அதில் தவறு ஏதும் வந்து விடக் கூடாது என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் மற்ற மற்ற நபித் தோழர்களிடமிருந்த வசனங்களைத் திரட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
பல முறை அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத தான் கேட்டிருப்பதாக ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த வசனம் குஸைமா (ரலி) அவர்களிடம் மட்டும் தான் இருந்தது என்றும் கூறுகிறார்கள். தனக்கு நினைவில் இருக்கும் வசனத்தை ஏன் குஸைமாவிடம் சென்று கேட்கிறார்கள் என்றால் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான்.
இன்னும் குஸைமா (ரலி) அவர்கள் தன்னிடம் இருந்த குர்ஆன் வசனங்களை எழுத்தில் பாதுகாத்து வைத்திருக்கலாம். குர்ஆனுடைய பாதுகாப்பிற்கு இம்முறை ஏற்றது என்பதால் தனக்கு குர்ஆன் மனனமாக இருந்தாலும் எழுத்தை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று ஸைத் (ரலி) அவர்கள் கருதியுள்ளார்கள்.
எதிர்வாதம்
இந்தச் செய்தியில் குறிப்பிடப்படும் அல்குர்ஆன் வசனம் அல்குர்ஆனில் இல்லாவிட்டாலும் சட்டம் அதுதான். இப்படியான முறையில் தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வசனம் கிராஅத்தில் (ஓதலில்) இல்லை. ஆனால் ஹ_க்கும் (சட்டத்தில்) இருக்கிறது.
நமது பதில்
குறித்த ஹதீஸில் அல்குர்ஆனில் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்படும் வசனம் குர்ஆனில் இல்லை. ஆனால் அதுதான் சட்டம். இப்படித்தான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் புது விளக்கம் சொல்கின்றார்கள். குறித்த ஹதீஸின் வாசகமே இவர்களின் விளக்கத்திற்கு முரணாக இருக்கின்றது.
குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இறந்தார்கள் என்ற வார்த்தை பிரயோகம், குறித்த வசனம் ஓதலில் இருந்துள்ளது என்ற தவறான கருத்தைத் தான் தருகிறது.
போலி ஹதீஸ்களைக் காப்பாற்றுவதாக நினைத்து கண்டதையும் விளக்கமாகச் சொல்லும் இந்த போலிக் காவலர்கள் தங்களையும் மறந்து இது போன்ற விளக்கங்களைக் கூறி வருகின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது அல்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த வசனம் இப்போது எங்கே போனது?
நபித் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை இல்லாமலாக்கி விட்டார்கள் என்று இவர்கள் பதில் சொல்லப் போகின்றார்களா?
ஒரு போலியான, இட்டுக்கட்டப்பட்ட செய்திக்காக அல்குர்ஆனில் தூய்மைத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கும் காரியத்தையே இவர்கள் செய்து வருகின்றார்கள் என்பது தெளிவானதாகும்.