13) நபி வழியா? புது வழியா?
13) நபி வழியா? புது வழியா?
அல்குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேச மாட்டார்கள் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு அமைவாக அல்குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நாம் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
அல்குர்ஆனும், அல்குர்ஆனுக்கு முரண்படாத ஹதீஸ்களும் மாத்திரமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்று இன்று நாம் செய்து வரும் பிரச்சாரம் திருமறைக் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் மூலம் பெறப்பட்டதே என்பதை பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கின்றோம்.
இதே நேரத்தில் நாம் இன்றைக்கு என்ன பிரச்சாரத்தைச் செய்து வருகின்றோமோ அதே பிரச்சாரத்தை நபித் தோழர்களும் செய்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில செய்திகளை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்டபோது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸூஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “ஸூஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள்.
உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின் மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (அல்குர்ஆன்: 53:43) ➚ ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (அல்குர்ஆன்: 35:18) ➚ (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
உர்வா பின் அஸ்ஸூபைர் அவர்கள் கூறியதாவது :
இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை)
இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் அறிவித்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள்.
(அப்போது உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க) நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார். நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள். (நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.
(அல்குர்ஆன்: 27:80) ➚ (நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது (அல்குர்ஆன்: 35:22) ➚
அறிவிப்பவர் : உர்வா பின் அஸ்ஸூபைர் (ரலி)
உமர் மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப்பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : காசிம் பின் முஹம்மத் (ரஹ்)
குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச்சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக ஆயிஷா அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒரேயடியாக தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை. (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்) என்று கூறினார்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் உனக்கு (ஜீவனாம்சம் தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பாத்திமா பின்த் கைஸ் (ரலி)
அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது :
நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை. ஜீவனாம்சமும் இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என்ற ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.
(அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள். உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை.
மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. பகிரங்கமான வெட்க்கக்கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (அல்குர்ஆன்: 65:1) ➚ என்று வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறியுள்ளான் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஇஸ்ஹாக் (ரஹ்)
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்குக் கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள். ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது.
எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத் தன்மையில் உமர் அவர்கள் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவில்லை.
குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒரு போதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் எந்த வாதத்தை முன் வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது ஹதீஸின் போலிப் பாதுகாவலர்கள் நம்மை விமர்சனம் செய்ததைப் போல் “உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர்” என்றெல்லாம் விமர்சனம் செய்வார்களா?
விஷயங்களில் சகுனம் இருக்கின்றதா?
குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளில் சகுனம் பற்றிய செய்தியும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே அது பற்றியும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். சகுனம் பார்ப்பது மற்றும் நம்புவதைத் தடை செய்து பல செய்திகள் வந்திருந்தாலும் விஷயங்களில் சகுனம் இருக்கின்றது என்ற கருத்திலும் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி(புகாரி: 2858, 5093, 5753, 5772), ஆகிய எண்களிலும்(முஸ்லிம்: 4127, 4128)ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது.
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழூம் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை.
மாறாக அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (அல்குர்ஆன்: 57:22) ➚ என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)
மேற்கண்ட செய்தியிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. விஷங்களில் சகுனம் இருக்கின்றது என்று நபியவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் என்ற செய்தி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்ட நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் அதனை உடனடியாக மறுத்தது மாத்திரமன்றி, அப்படி நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்பதையும் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுவதின் மூலம் தெளிவாக விளக்குகின்றார்கள்.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
யாருக்கு எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அது இறைவனின் நாட்டப்படியே நடக்கும் என்று மேலுள்ள திருமறை வசனம் தெளிவாகக் குறிப்பிடும் போது வீடு, பெண், கால்நடை ஆகியவற்றிலும் துன்பங்கள் வரும் என்றும், ஆகவே இந்த மூன்றிலும் சகுனம் பார்க்கலாம் என்றும் நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையாக ஒரு விஷயத்தை அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின் நபியவர்கள் அதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள். ஆனால் அபூஹுரைராவின் செய்தியில் நபியவர்கள் அல்லாஹ்வின் வசனத்திற்கு மாற்றமாகக் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது. அதனால் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் வசனத்தைச் சுட்டிக் காட்டி நபியவர்கள் அப்படி சொல்லவில்லை என்பதை தெளிவாக விளக்குகின்றார்கள்.
விமர்சனமும் விளக்கமும்
புகாரியில் இடம் பெறும் இன்னொரு செய்தியில் கால்நடை என்பதற்கு பதிலாக குதிரை என்று இடம் பெற்றுள்ளது. அதிலும் இந்த மூன்று விஷயங்களில் பீடை – சகுனம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குதிரை, பெண், வீடு ஆகியவற்றில் பீடை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :இப்னு உமர் (ரலி)
(புகாரி: 2858, 5093, 5094, 5753)ஆகிய ஹதீஸ்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஷயங்களில் மட்டும் பீடை – சகுனம் உண்டு என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இம்மூன்று மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு பெறுகின்றது என்று சில அறிஞர்கள் கூறி இதை நியாயப்படுத்தியும் எழுதி உள்ளனர். ஆனால் இந்தச் செய்தியை ஆய்வு செய்து பார்க்கும் போது இது ஏற்கத்தக்க செய்தியல்ல என்பது இன்னும் தெளிவாக உறுதியாகின்றது. இந்த ஹதீஸ் வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு அதே புகாரியில் அதே இப்னு உமர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகுனம் என்று ஒன்று இருக்குமானால் அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் தான் இருக்க முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)
சகுனம் என ஒன்று இருக்குமானால் இந்த மூன்றில் தான் இருக்க முடியும் என்ற வாசகம் சகுனம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் கருத்து யாரும் யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது என்பது தான். அது போல் உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அது போல் சகுனம் என்று இருக்குமானால் மேற்கண்ட மூன்றில் தான் இருக்க முடியும் என்பது சகுனம் இல்லை என்ற கருத்தைத் தருகிறது.
ஆனால் முதலில் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் மேற்கண்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாகச் சொல்கிறது. இரண்டுமே ஒரே அறிவிப்பாளரைக் கொண்டு அறிவிக்கப்படுவதால் குர்ஆனின் கருத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டாம் அறிவிப்பை ஏற்று முதலாம் அறிவிப்பை நபிகள் சொன்னது அல்ல எனக் கூறி நிராகரித்து விடலாம்.
அல்லது இரண்டும் முரண்படுவதால் இரண்டையும் நாம் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். வேறு ஆதாரங்கள் மூலம் எதிலும் சகுனம் இல்லை என்று பொதுவாக கூறும் ஹதீஸ்கள் அடிப்படையில் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும்.
முரண்பட்ட இரண்டையும் நாம் தள்ளிவிட்டாலும் குர்ஆனுக்கு நெருக்கமான அறிவிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற கருத்து நிரூபணமாகி விடும்.
விதி பற்றிய வசனங்களுக்கு மாற்றமானது.
கால்நடை, பெண், வீடு ஆகியவற்றில் சகுனம் இருக்கின்றது என்று நபியவர்கள் கூறிய செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை அறிந்த ஆயிஷா (ரலி) அவர்கள் அதனை மறுக்கும் விதமாக விதி பற்றிய இறை வசனத்தை எடுத்துக் காட்டுகின்றார்கள். சகுனம் உண்டு என்று பொதுவாகச் சொன்னாலும், அல்லது குறிப்பிட்ட 03 விஷயத்தில் தான் சகுனம் உண்டு என்று வேறு பிரித்துச் சொன்னாலும் அது விதி தொடர்பான இஸ்லாமிய, குர்ஆனிய கருத்துக்கு மாற்றமாகவே அமையும்.
அதனால் தான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை மறுக்கும் போது விதி பற்றிய வசனத்தைக் குறிப்பிட்டு மறுக்கின்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரே ஒரு வசனத்தை மாத்திரம் குறித்த செய்தியில் குறிப்பிட்டிருந்தாலும், குர்ஆனில் இடம்பெறும் இன்னும் அநேகமான வசனங்களுக்கு மாற்றமாகவே அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பு அமைந்துள்ளது. உதாரணத்திற்குச் சில வசனங்களை குறிப்பிடுகின்றோம்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
(நபியே) ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், (மனிதர்களே!) நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
அல்லாஹ் உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
ஆதாரப்பூர்வமான மற்ற செய்திகளுக்கும் மாற்றமானது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது.
அப்போது “உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று: மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!” எனும் (அல்குர்ஆன்: 2:189) ➚ இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : பரா (ரலி)
மொத்தத்தில் சகுனம் என்பது எதிலும் கிடையாது என்பதை மேலுள்ள செய்திகளும் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே எந்த விதத்தில் நாம் ஆய்வு செய்து பார்த்தாலும் குறித்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் வசனத்தை காட்டி மேற்கண்ட செய்தியை மறுத்துள்ளார்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் “எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா? தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம்” என்கிறார்கள். இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் சஹாபாக்களின் செயல்பாடுகள் ஆதாரத்திற்குரியது என்பதற்காக அல்ல.
முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப்வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையைக் கடைப்பிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம். குர்ஆன் ஹதீஸை மாத்திரம் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது.