10) வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை பலவீனப் படுத்தும் வழிகேடர்கள்
10) வழிகேட்டை காப்பாற்ற ஹதீஸை
பலவீனப் படுத்தும் வழிகேடர்கள்
சூனியத்தை உண்மை என்று நம்பி அதற்கு ஆற்றல் இருப்பதாக வாதிடும் வழிகேடர்கள் தமது கருத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதாரபூர்வமான செய்திகளை பலவீனம் என்று தட்டிச் செல்வதற்கு முயற்சி செய்கின்றார்கள். அந்த வகையில் நபியவர்களின் செய்திகளை எப்படி அனுக வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தும் கீழ்க் கண்ட செய்தியையும் பலவீனம் என்று சொல்லி தட்டிக் கழித்துவிட முயல்கிறார்கள். குறித்த செய்தியின் உண்மை நிலையை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி) மற்றும் அபூஹுமைத் (ரலி)
(குறிப்பு : மேற்கண்ட ஹதீஸை அபூ உஸைத் அறிவித்தாரா? அல்லது அபூ ஹுமைத் அறிவித்தாரா? என்று சந்தேகத்துடன் ஒரு அறிவிப்பாளர் அறிவித்துள்ளார். ஏனெனில் இருவரும் நபித்தோழர்கள். எனவே யார் அறிவித்து இருந்தாலும் அது ஹதீஸின் தரத்தைப் பாதிக்காது) நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளில் எவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்? எவற்றை மறுக்க வேண்டும் என்பதற்குரிய அளவுகோலை மேற்கண்ட நபிமொழி தெளிவாக விளக்குகிறது.
நபியவர்களின் பேச்சில் தவறு ஏற்படும் என்று மேற்கண்ட நபிமொழி குறிப்பிடுவதாக சில வழிகேடர்கள் வாதிக்கின்றனர். இவ்வாறு கூறுவது அவர்களின் அறியாமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. நபியவர்கள் மார்க்கமாகப் பேசும் விசயங்கள் வஹி எனும் இறைச் செய்தி ஆகும். அதில் ஒரு போதும் முரண்பட்ட விசயங்கள் வரவே வராது. நபியவர்கள் ஒரு போதும் குர்ஆனுக்கு எதிராக பேசமாட்டார்கள் என்று நம்பிக்கை கொள்வதே சரியான கொள்கையாகும்.
அதே நேரத்தில் நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் போது நபியவர்கள் கூறாதவற்றையும், தவறான செய்திகளையும் நபியவர்களின் பெயரால் அறிவித்துவிடுவார்கள். நபியவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் ஒரு செய்தி நபியவர்கள் கூறியிருக்கவே முடியாது என்று நிரூபணமாகும்போது அவற்றை ஏற்றுக் கொள்ளாது மறுக்க வேண்டும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் விளக்கமாகும்.
உள்ளத்திற்கும் உணர்வுக்கும் முரண்பட்டால் மறுக்க வேண்டுமா?
எந்த ஒரு நபிமொழியையும் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி தூக்கி எறிவதற்குரிய வாசலை இந்த நபிமொழி திறந்துவிடுகிறது. எனவே இதனை ஏற்றுக் கொள்வது கூடாது என வழிகேடர்களில் சிலர் வாதிக்கின்றனர. இவர்களின் இந்த வாதத்தில் இருந்து இன்னொரு உண்மை வெளிப்பட்டு விட்டது.
அதாவது சில அடிப்படைக் கொள்கைக்கு முரணாக இருக்கும் ஹதீஸ்களை மறுக்கலாம் என்ற கொள்கையில் தான் இவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வாதம் ஆதாரமாக உள்ளது ஒரு நபிமொழியை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குரிய குறைந்தபட்ச அறிவு கூட இவர்களுக்கு இல்லை என்பதை அவர்களின் மேற்கண்ட வாதம் உணர்த்துகிறது. உள்ளத்திற்கும் உணர்விற்கும் முரண்பட்டால் மறுக்க வேண்டும் என்பதின் சரியான விளக்கம் என்னவென்று பார்ப்போம்.
மேற்கண்ட நபிமொழி உலகிலுள்ள அனைத்து முஃமின்களை நோக்கி நபியவர்கள் பேசிய வார்த்தையாகும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒன்றைக் கட்டளையிட்டுவிட்டால் அதில் சிறிது கூட மனோஇச்சைக்கு கட்டுப்படாமல் அதற்கு கட்டுப்படுபவன்தான் உண்மையான முஃமின் ஆவான். இதனைப் பின்வரும் வசனங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூ தருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.
முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் ஒன்றைக் கட்டளையிட்டுவிட்டால் அதில் சுயவிருப்பம் கொள்வது கூடாது என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நம்முடைய மனதிற்குப் பிடிக்கவில்லை என்று கூறி அல்லாஹ்வும். ரசூலும் கூறியதை மறுப்பவன் காஃபிர் ஆவான். இதனைப் பின்வரும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
(அல்குர்ஆன்: 18:28) ➚ தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒன்றைக் கட்டளையிட்டபிறகு அதனை தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி மறுப்பவன் இறைநம்பிக்கையாளனே கிடையாது என்பதை நாம் தெளிவாகப் பார்த்துவிட்டோம். எனவே ஒருவர் தன்னுடைய மனதிற்குப் பிடிக்காதவற்றை மறுப்பதற்கு மேற்கண்ட நபிமொழி இடமளிக்கிறது என்று வாதிப்பவன் ஒரு முஃமினாகவே இருக்க முடியாது. அப்படியென்றால் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்திகளில் எத்தகைய செய்திகளை ஒரு முஃமினுடைய உள்ளம் ஏற்றுக்கொள்ளாது என்பதை நம் திருமறையின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும்.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
மேற்கண்ட வசனம் எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை தெளிவு படுத்திய பிறகுதான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முஃமின்களுக்கு கட்டளையிடுகிறது. செய்திகளிலே மிகவும் முக்கியமானது இறைத்தூதர் போதித்த போதனைகள்தான். எனவே நபியவர்கள் கூறியதாக மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள் இருக்குமென்றால் அதை ஒரு போதும் நபியவர்கள் கூறியதாக முஃமின்களின் உள்ளம் ஏற்றுக் கொள்ளாது.
பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக நபியவர்கள் கூறியதாக வரும் செய்திகளை ஒரு முஃமினுடைய உள்ளம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
அது போன்று திருமறைக்குர்ஆனுக்கு எதிராக நபியவர்கள் கூறினார்கள். என்று அறிவிக்கப்படும் செய்திகளையும் முஃமின்களின் உள்ளம் ஏற்றுக் கொள்ளாது.
அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்த வேதமாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழிகாட்டுபவன் இல்லை.
மேற்கண்ட வசனத்தில் திருமறைக்குர்ஆனின் வசனங்களினால் முஃமின்களின் தோல்கள் சிலிர்த்து விடும் என்றும், உள்ளங்கள் அஞ்சும் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருமறைக்குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியோ அது போன்று மார்க்கம் தொடர்பாக நபியவர்கள் பேசிய பேச்சுக்களும் இறைச்செய்தியாகும்.
மேற்கண்ட நபிமொழியிலும் நபியவர்களின் போதனைகளைக் கேட்பதினாலும் தோல்கள் சிலிர்க்கும், உள்ளம் அதனை ஏற்றுக் கொள்ளும் என்ற உண்மையை நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து திருமறைக்குர்ஆனுக்கு மாற்றமாக நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தி அறிவிக்கப்படுமென்றால் அதைத் தான் முஃமின்களின் உள்ளம் வெறுக்கும்.
அவர்களின் தோல்களும், முடிகளும் அதனை விட்டும் வெருண்டோடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடியும். எனவே நபியவர்கள் கூறியதாக பலவீனமான அறிவிப்பாளர்களின் வழியாக வரும் செய்திகளையும், திருமறைக்குர்ஆனுக்கு எதிரான செய்திகளையும் முஃமின்களின் உள்ளம் ஏற்றுக்கொள்ளாது. அதைக்கண்டு வெருண்டோடும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் சரியான விளக்கமாகும். இமாம் இப்னு கஸீரின் கருத்திலிருந்தும் இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் – இந்த நபிமொழியின் கருத்தாகிறது.
நான் கூறியதாக நல்ல விசயங்கள் உங்களை வந்தடையுமென்றால் உங்களில் அதற்கு மிகத் தகுதியானவன் நானே ! வெறுக்கத்தக்க விசயமாக இருந்தால் அதிலிருந்து உங்களை விட மிகத் தூரமானவன் நானே! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. (அல்குர்ஆன்: 11:88) ➚ (என்று நபி கூறுகிறார்கள்.)
நூல் : தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் : 4 பக்கம் : 345
நபியவர்கள் தாம் தடுத்தவற்றை ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்பதுதான் இந்த நபிமொழியின் விளக்கம் என்று இப்னு கஸீர் தெளிவுபடுத்துகின்றார். இதிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட குர்ஆனுக்கு எதிராக நபியவர்கள் கூறியதாக தனிநபர்கள் அறிவித்தால் அதனை ஏற்பது கூடாது, அவ்வாறு நபியவர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
திருமறை வசனங்களின் அடிப்படையில் மேற்கண்ட நபிமொழியின் சரியான கருத்தை விளங்கிக் கொண்ட பிறகும் ஒருவன் மேற்கண்ட நபிமொழியை தவறான காரணங்களைக் கற்பித்து மறுத்தால் அவன் வழிகேட்டில் இருக்கின்றான் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அது போன்று திருமறைக்குர்ஆனுக்கு எதிரான செய்திகளை நபியவர்கள் கூறியதாக ஏற்றுக் கொள்பவனும் வழிகேட்டில் உள்ளான் என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
பலமான அறிவிப்பாளர் தொடர்
மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் உள்ளது என சிலர் வாதிக்கின்றனர். அவர்களின் வாதத்தில் சிறிதளவேனும் உண்மைத் தன்மை உள்ளதா? என்பதைப் பற்றிக் காண்போம்.
மேற்கண்ட நபிமொழியை நபியவர்கள் கூறியதாக அபூ உசைத் மற்றும் அபூ ஹுமைத் என்ற நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.
- அபூ உசைத் அல்லது அபூ ஹுமைத் ஆகியோரிடமிருந்து அப்துல் மலிக் இப்னு ஸயீத் என்பார் அறிவிக்கின்றார்
- அப்துல் மலிக் பின் ஸயீத் கூறியதாக ரபீஆ இப்னு அபூ அப்திர்ரஹ்மான் என்பார் அறிவிக்கின்றார்.
- ரபீஆ இப்னு அபீ அப்திர்ரஹ்மான் கூறியதாக சுலைமான் இப்னு பிலால் என்பார் அறிவிக்கின்றார்.
- சுலைமான் இப்னு பிலால் கூறியதாக அபூ ஆமிர் என்பார் அறிவிக்கின்றார்.
- அபூ ஆமிர் என்பாரிடமிருந்து கேட்டு இமாம் அஹ்மத் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அப்துல் மலிக் பின் ஸயீத் பின் சுவைத் என்பாரைத் தவிர மற்ற அனைவரும் புகாரியினுடைய அறிவிப்பாளர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் மிகவும் பலமான அறிவிப்பாளர்கள் ஆவர். அது போன்று அப்துல் மலிக் பின் ஸயீத் என்பார் முஸ்லிமினுடைய அறிவிப்பாளர் ஆவார். இவரும் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் ஆவார்.
அப்துல் மலிக் பின் ஸயீத் பலவீனமானவரா?
மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான “அப்துல் மலிக் பின் ஸயீத் பின் சுவைத்” என்பாரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. எனவே இவர் பலவீனமானவர் என சிலர் கூறுகின்றனர். திருக்குர்ஆனை மறுத்து அதற்கு எதிரான தனிநபர் செய்திகளை நபிமொழி என்று வாதிக்கும் வழிகேடர்களும் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் அவர்களின் வாதம் முற்றிலும் பிழையானதாகும்.
அப்துல் மலிக் பின் ஸயீத் என்பார் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் ஆவார்.
இமாம் இப்னு ஹிப்பான், இஜ்லீ, இப்னு கல்ஃபூன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இமாம் நஸாயீ அவர்கள் ‘இவரிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று நற்சான்று அளித்துள்ளார்கள்.
மேலும் இமாம் முஸ்லிம் அவர்கள் தம்முடைய நூலில் ‘அப்துல் மலிக்” அவர்களின் அறிவிப்பை (துணைச்சான்றாக இல்லாமல் முதன்மையான அறிவிப்பாக) கொண்டு வந்துள்ளார்கள்.
(நூல்கள் : தஹ்தீபுல் கமால்,பாகம் : 18 பக்கம் : 316 , இக்மாலு தஹ்தீபில் கமால் பாகம் : 8, பக்கம் 312)
இமாம் முஸ்லிம் அவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது ஓதும் துஆ தொடர்பாக ஒரு செய்தியை தம்முடைய நூலில் (முஸ்லிம்: 1286) இடம் பெறச் செய்துள்ளார்கள். அதில் அபூ ஆமிர் என்ற அறிவிப்பாளரைத் தவிர மேற்கண்ட நபிமொழியில் இடம் பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
முஸ்லிம் இமாம் தம்முடைய நூலில் ஒரு ஹதீஸை முதன்மைச் சான்றாக இடம் பெறச் செய்தால் அதன் அனைத்து அறிவிப்பாளர்களும் இமாம் முஸ்லிம் அவர்களிடத்தில் நம்பகமானவர்கள் என்பதாகும். இதைப்பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் தம்முடைய முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
நான் ஸஹீஹாக கருதும் ஹதீஸ்கள் அனைத்தையும் இந்த நூலில் நான் கொண்டு வரவில்லை. மாறாக எந்த ஹதீஸ்களை அனைவரும் ஸஹீஹ் என்று ஏற்றுக் கொண்டுள்ளார்களோ அதைத்தான் நான் கொண்டு வந்துள்ளேன். (முஸ்லிம் முன்னுரை)
இமாம் முஸ்லிம் அவர்களின் கூற்றிலிருந்து அப்துல்மலிக் என்பார் உட்பட அந்த அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அனைத்து அறிவிப்பாளர்களும் இமாம் முஸ்லிம் அவர்களிடத்தில் நம்பகமானவர்கள் என்று உறுதியாகிறது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் பிறந்த இமாம் இப்னு அபீ ஹாதிம் (ரஹ்) அவர்கள் ‘அல்ஜரஹ் வத்தஃதீல்” என்ற தன்னுடைய நூலில் அப்துல் மலிகை குறிப்பிடுகிறார். ஆனால் இவர் தொடர்பாக குறை, நிறை எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
அபூ ஹாதிம் அவர்கள் குறை நிறை எதும் கூறாத காரணத்தினால் இவர் நம்பகத் தன்மை அறியப்படாதவர் (மஜ்ஹூல்) என்று சிலர் வாதிக்கின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம்களான இஜ்லீ, முஸ்லிம், நஸாயீ ஆகியோரும், ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் அது போன்று ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு கல்ஃபூன் அவர்களும் அப்துல் மலிக் அவர்களை நம்பகமானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே அப்துல் மலிக் என்பவர் “நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டவர்” என்பது மிக உறுதியாகிவிட்டது.
மேலும் மேற்கண்ட இமாம்களின் நற்சான்றின் அடிப்படையில் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்களும் தம்முடைய தக்ரீபுத் தஹ்தீப் என்ற நூலில் “அப்துல் மலிக்” அவர்களை நம்பகமானவர் என்று நன்சான்று அளித்துள்ளார்கள்.
எனவே “அப்துல் மலிக்” என்பாரின் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படவில்லை என்பது மிகவும் அப்த்தமான வாதமாகும். அவர் மிகச் சிறந்த அறிவிப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இச்செய்தியை அப்துல் மலிக் என்பாரிடமிருந்து ரபீஆ என்பவர் அறிவிக்கின்றார்.
இவர் மார்க்கத்தில் சுயக் கருத்தை புகுத்தக் கூடியவர் என்றும், இவர் அறிவிக்கும் இந்தச் செய்தி சுயசிந்தனையைக் கொண்டு நபிமொழியை நிராகரிக்கலாம் என்ற கருத்தைக் கூறுவது போன்று உள்ளது. எனவே இந்த நபிமொழியை ஏற்பது கூடாது என்று திருக்குர்ஆனை மறுத்து அதற்கு எதிரான தனிநபர் செய்திகளை மார்க்கமாக்கும் வழிகேடர்கள் விமர்சித்துள்ளனர். இது மிகவும் அபத்தமான வாதமாகும்.
இந்த வாத்த்தின் மூலமும் கருத்தைக் கவனித்துன் ஹதீஸ்களை மறுக்கலாம் என்ற கொள்கையில் தான் இவர்களும் உள்ளனர் என்பது உறுதியாகிறது. ‘ரபீஆ” என்ற அறிவிப்பாளர் மீது இது போன்ற அபத்தமான காரணங்களைக் கூறி ஹதீஸ்கலை அறிஞர்கள் யாரும் இவருடைய செய்தியை மறுத்தது கிடையாது.
மேலும் மேற்கண்ட நபிமொழி சுயசிந்தனையைக் கொண்டு நபி கூறியவற்றை நிராகரிக்கலாம் என்ற கருத்தைத் தருவதாக இந்த வழிகேடர்கள் திரித்துக் கூறுகின்றனர். மேற்கண்ட நபிமொழியின் சரியான விளக்கத்தை நாம் தெளிவு படுத்தி விட்டோம். குர்ஆனுக்கு முரணாக நபியவர்கள் கூறியதாக தனிநபர்கள் அறிவிக்கும் செய்தியையும், பலவீனமானவர்கள் நபி கூறியதாக அறிவிக்கும் செய்திகளையும் முஃமின்கள் நிராகரிக்க வேண்டும் என்பதே மேற்கண்ட நபிமொழியின் விளக்கமாகும்.
ஹதீஸின் கருத்தை திரித்தும், ரபீஅ என்ற அறிவிப்பாளரின் மீது ஒரு அபாண்டத்தைச் சுமத்தியும் தெளிவான நபிமொழியை மறுக்க முயல்வது வழிகேடர்களின் வழிமுறையாகும். அதைத்தான் இந்தக் குர்ஆன் மறுப்பாளர்கள் செய்துள்ளனர்.
இந்த ரபீஆ என்பவர் மிகச் சிறந்த அறிவிப்பாளர் ஆவார். இவருடைய அறிவிப்புகள் புகாரியில் 18 இடங்களிலும், முஸ்லிமில் 11 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன. இன்னும் ஏராளாமான இமாம்களும் இவருடைய அறிவிப்புகளை தங்களுடைய நூலில் இடம் பெறச் செய்துள்ளனர். இவர் மிகச் சிறந்த மார்க்க மேதை ஆவார்.
இவர் தம்முடைய அறிவாற்றலால் சத்தியமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர் ஆவார். இவருடைய பெயரைக் குறிப்பிடும் போது சிலர் “ரஃயி” (சுயசிந்தனை) என்ற வாரத்தையை இணைத்து “ரபீஅத்துர் ரஃயீ” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இவருடைய பெயருடன் இவ்வாறு இணைத்துக் கூறுவது அறியாமை என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இமாம் அஹ்மத், இஜ்லீ, அபூ ஹாதிம், நஸாயீ, யஃகூப் இப்னு ஷைபா, இமாம் மாலிக், யஹ்யா இப்னு ஸயீத், லைஸ், ஸவ்வார் அல்அன்பரி, வாகிதி, இப்னு ஹிப்பான், அபூ பக்ர் அல்ஹ_மைதி, போன்ற பலர் இவர் மிகவும் உறுதியானர் என்று கூறி இவருடைய நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் “இராக் வாசிகளில் சிலர்தான் இவருடைய பெயருடன் ரஃயீ என்பதை இணைத்துக் கூறினர். இவ்வாறு மக்கள் சிலர் கூறினர் என்ற தகவலை வாகிதி அவர்களும் எடுத்துக் கூறியுள்ளார்.
இவர் மார்கத்தில் சுய கருத்தை புகுத்தக் கூடியவர் என்ற கருத்தில் இராக் வாசிகளில் சிலர் இவ்வாறு கூறியது மிகவும் தவறானதாகும். இதனை அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.
அப்துல் அஸீஸ் பின் அபீ ஸலமா என்பார் கூறுகிறார் : இராக் வாசிகளே ! (ரபீஆ என்ற பெயருடன் ‘ரஃயீ” – சுயசிந்தனை என்பதை இணைத்து) ‘ரபீஅத்துர் ரஃயீ” என்று நீங்கள் கூறுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை விட நபிவழியை மிகவும் பாதுகாப்பவரை நான் பார்த்தது கிடையாது.
நூல் : துஹைரத்துல் உக்பா
மேலும் பல அறிஞர்கள் இவர் மிகவும் மார்க்க ஞானம் உடையவர் என்பதை புகழ்ந்து கூறியுள்ளனர்.
இமாம் மாலிக் அவர்கள் இவரிடமிருந்து (செய்திகளை) எடுத்துள்ளார்கள் என்று முஸ்அப் அஸ்ஸ_பைரி என்பார் கூறுகின்றார்.
ரபீஆ அவர்கள் மரணித்ததோடு ‘பிக்ஹினுடைய இனிமை” போய்விட்டது என்று இமாம் மாலிக் கூறியதாக முதர்ரிஃப் என்பார் கூறுகிறார்.
இவரை விட மகிச் சிறந்த விளக்கசாலியை நான் பார்த்த்து கிடையாது என யஹ்யா இப்னு ஸயீது கூறுகிறார்.
இவர் எங்களுக்கு மிகச் சிக்கலான விசயங்களை தீர்த்து வைப்பவர், எங்களில் மிகவும் ஞானமிக்கவர், எங்களில் மிகச் சிறந்தவர் என உபைதுல்லாஹ் என்பார் கூறுகிறார்.
இவரை விட மிகச் சிறந்த ஞானமிக்கவரை நான் பார்த்தது கிடையாது என ஸவ்வார் என்பார் கூறினார். அப்போது நான் ஹஸன் மற்றும் இப்னு ஸீரினை விடவுமா? எனக் கேட்டேன்.அதற்கவர் ஹஸன் மற்றும் இப்னு ஸீரீனை விடவும்தான் என்று கூறினார் என் முஆத் பின் முஆத் என்பார் கூறுகிறார்.
நூல் : துஹைரத்துல் உக்பா
எனவே ‘ரபீஆ” அவர்கள் மார்க்த்தில் சுயக்கருத்தைக் கூறுவார் என்பது அவர் மீது கூறப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு என்பதை நாம் மேற்கண்ட கூற்றுகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் இமாம் அஹ்மத் அவர்கள் ரபீஆ விடம் ஞானம் எதுவும் கிடையாது என்று விமர்சித்துள்ளார்கள். இதுவும் ஏற்கத்தக்க விமர்சனமல்ல என்பதும் மேற்கண்ட கூற்றுகளிலிருந்து தெளிவாகிவிட்டது. அது போன்று பல இமாம்கள் மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரை மிகப்பலமானது என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து மரணித்த இமாம் பஸ்ஸார் அவர்கள் தம்முடைய “முஸ்னத் பஸ்ஸார்” என்ற நூலில் இந்த நபிமொழியைப் பதிவு செய்துவிட்டு அதனைத் தொடர்ந்து
இவ்வாறு நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் அறிவிப்பாளர் தொடர்களில் இதைவிட மிகச் சிறந்த அறிவிப்பாளர் தொடரை நாம் அறியவில்லை.
நூல் : முஸ்னத் பஸ்ஸார் பாகம் : 9 பக்கம் : 169
ஹிஜ்ரி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ஹைஸமீ அவர்கள் தமது “மஜ்மவுஸ் ஸவாயித்” (பாகம் 1 பக்கம் 150) என்ற நூலில் “ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவற்றிலிருந்து ஸஹீஹானவற்றை அறிதல் பற்றிய பாடம்” என்ற தலைப்பிட்டு மேற்கண்ட ஹதீஸைக் கொண்டுவந்துள்ளார்கள். அதன் இறுதியில்
அஹ்மத், பஸ்ஸார் இதனை அறிவித்துள்ளனர். இதனுடைய அறிவிப்பாளர்கள் ஸஹீஹான அறிவிப்பாளர்கள் ஆவர்” என்று கூறியுள்ளார்.
நூல் : மஜ்மவுஸ் ஸவாயித் பாகம் : 1 பக்கம் : 150
ஹிஜ்ரி 700 ல் பிறந்த இமாம் இப்னு கஸீர் அவர்கள் தம்முடைய தஃப்ஸீரில் இந்த ஹதீஸை இடம் பெறச் செய்துள்ளார்கள். அதன் கீழ்
இது மிக உறுதியான அறிவிப்பாளர் தொடரில் அமைந்த ஹதீஸாகும். (இப்னு கஸீர் பாகம் 3 பக்கம் 487) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் புகாரியின் கூற்று சரியானதா? மேற்கண்ட ஹதீஸின் கருத்தில் அமைந்த ஒரு செய்தியை உபை (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இமாம் புகாரி அவர்கள் தமது “தாரீகுல் கபீர்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
உபை (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக அறிவிக்கப்படும் இந்தச் செய்தியை அப்துல் மலிக் என்பாரிடமிருந்து புகைர் இப்னு அஷஜ் என்ற நம்பகத்தன்மையில் உறுதிமிக்க அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.
நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்டும் செய்தியில் அப்துல் மலிக் என்பாரிடமிருந்து ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் என்பார் அறிவிக்கின்றார். நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தியை விட உபை (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக அறிவிக்கப்படும் செய்திதான் மிகச் சரியானது என இமாம் புகாரி அவர்கள் தமது தாரீகுல் கபீர் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் புகாரி அவர்களின் கருத்தை அடிப்படையாக வைத்து ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் பைஹகி அவர்கள் நபியவர்கள் கூறியதாக வரும் செய்தியை ‘மஃலூல்” (பலவீனமானது) என்று கூறியுள்ளார்கள்.
இது போன்றே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் இப்னு ரஜப் அவர்களும் ஜாமிவுல் உலும் வல்ஹிகம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இன்றைக்கு குர்ஆனுக்கு எதிராக தனி நபர் அறிவிக்கும் செய்திகளை ஏற்று குர்ஆனை மறுக்கும் வழிகேடர்களும் இந்த விமர்சனத்தை வைத்து நபி கூறியதாக வரும் சரியான ஹதீஸை பலவீனம் என்று கூறுகின்றனர்.
ஆனால் நாம் ஆய்வு செய்து பார்த்தவரை இமாம் புகாரி அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாக இல்லை. எனவே இமாம் புகாரியின் விமர்சனத்தை அடிப்படையாக வைத்து பைஹகி, இப்னு ரஜப் ஆகியோர் செய்த விமர்சனங்களும் ஏற்பதற்கு தகுதியற்றவையாகி விடுகிறது.
இமாம் புகாரி அவர்களின் விமர்சனம் எந்த அடிப்படையில் தவறானது என்பதற்கான சான்றுகளைக் காண்போம்.
01. உபை (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக வரும் செய்தியில் புகாரியின் ஆசிரியராக “அப்துல்லாஹ் பின் ஸாலிஹ்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் அறிவிப்பாளர் தொடரை மாற்றி மாற்றி அறிவிப்பவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இமாம் புகாரி அவர்கள் தம்முடைய ஸஹீஹ_ல் புகாரியில் இவருடைய அறிவிப்புகளை துணைச்சான்றாக மட்டும்தான் கொண்டு வந்துள்ளார்கள். இவர் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக தவறான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.
இவரைப் பற்றி இமாம் ஹிப்பான் கூறுகிறார் : இவருடைய ஹதீஸ்கள் முற்றிலும் நிராகரிக்கத்தக்கதாகும். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அவர்களுடைய ஹதீஸில் இல்லாதவற்றை அறிவிப்பார். இவர் தன்னளவில் நல்லவராக இருந்தாலும் இவருடைய அண்டை வீட்டுக்காரர் மூலமாக இவருடைய செய்திகளில் மறுக்கத்தக்கவை புகுந்துவிட்டது. ஷைஹ் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் மீது அவர் அண்டை வீட்டுக்காரர் ஹதீஸை இட்டுக்கட்டி அவருடைய எழுத்தைப் போன்றே எழுதி அவருடைய வீட்டிலே அவருடைய புத்தகங்களுக்கு மத்தியில் நுழைத்துவிடுவார். அப்துல்லாஹ் அதை தன்னுடைய எழுத்து என்று எண்ணி அறிவித்து விடுவார்.
இப்னு அதீ கூறுகிறார் : இவர் என்னிடத்தில் ஹதீஸ்களில் உறுதியானவர் என்றாலும் இவருடைய ஹதீஸில் அறிப்பாளர் தொடர்களிலும், கருத்திலும் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. இவர் திட்டமிட்டு பொய்யுரைக்கமாட்டார்.
ஸாலிஹ் இப்னு முஹம்மத் கூறுகிறார் : இப்னு மயீன் இவரை நம்பகமானவா என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் நான் இவரை ஹதீஸ்களில் பொய்யுரைப்பவர் என்றே கருதுகிறேன்.
இப்னுல் மதீனி கூறுகிறார் : இவருடைய ஹதீஸை நான் எழுதினேன். ஆனால் அவரிடமிருந்து எதையும் நான் அறிவிக்கமாட்டேன். மேலும் அஹ்மத் இப்னு ஸாலிஹ் கூறுகிறார் : இவர் தவறிழைக்கக் கூடியவர். ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை.
இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.
அனைத்து உலகமக்களை விடவும் என்னுடைய தோழர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான்” என்று நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் அறிவிக்கும் செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும் என்று இமாம் நஸாயீ விமர்சிக்கின்றார்.
இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என் இமாம் ஹாகிம் கூறுகிறார். இன்னும் ஏராளமான அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனங்கள் அனைத்தும் ‘தஹ்தீபுத் தஹ்தீப்” பாகம் 5 பக்கம் 256 ல் இடம் பெற்றுள்ளது. உபை இப்னு கஅப் (ரலி) அவர்களின் சொந்தக்கூற்றாக அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரில் புகாரியினுடைய ஆசியராக இடம் பெறும் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்ற அறிவிப்பாளர் ஸனதிலும், மதனிலும் தவறாக அறிவிப்பவர். இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூட அறிவித்துள்ளார். அவருடைய செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்வது கூடாது என்பதற்குரிய சான்றுகளை நாம் மேலே கண்டோம்.
எனவே அத்தகைய பலவீனமான அறிவிப்பாளர் அறிவித்த செய்தியை ஏற்று அதனை மிகச் சரியானது என்று இமாம் புகாரி கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். எனவே நபியவர்கள் கூறியதாக அப்துல் மலிக் என்பாரிடமிருந்து ரபீஆ என்ற நம்பகமானவர் வழியாக வரும் அறிவிப்பே மிகச் சரியானது என்பது தெளிவாகிவிட்டது.
02. உபை பின் கஅப் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக அறிவிக்கப்படும் செய்தியில் மற்றொரு குறையும் உள்ளது. அதாவது அப்துல் மலிக் என்பவரின் ஆசிரியராக அப்பாஸ் இப்னு ஸஹ்ல் என்பார் இடம் பெற்றுள்ளார். அப்துல்மலிக் என்பாரின் ஆசிரியர் அப்பாஸ் பின் ஸஹ்ல் என்பது சரியான தகவல் இல்லை என தஹ்தீபுல் கமால் ஆசிரியர் மிஸ்ஸி சந்தேகப்படுகிறார்.
அப்துல் மலிக் என்பார் அப்பாஸ் பின் ஸஹ்ல் பின் ஸஃத் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார். இது சரியான தகவலாக இருந்தால்தான் (ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்). (இக்மாலு தஹ்தீபில் கமால்) இமாம் புகாரி தாரீகுல் கபீரில் குறிப்பிடும் அறிவிப்பாளர் தொடரைத் தவிர இதற்கு வேறு ஆதாரம் கிடையாது.
அப்பாஸ் பின் ஸஹ்ல் என்பாரிடமிருந்து அப்துல் மலிக் என்பவர் அறிவிப்பதாக தவறாகக் கூறியவர் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர்தான் என்றே நாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அறிவிப்பாளர் தொடர்களில் தவறிழைப்பவர், அவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூட அறிவித்துள்ளார் என்பதற்கான சான்றுகளை நாம் முன்னரே பார்த்துவிட்டோம்.
03. மேலும் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் செவியேற்றார் என்பதற்கு புகாரி குறிப்பிடும் இந்தப் பலவீனமான அறிவிப்பாளர் தொடர் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடையாது. எந்த அறிஞரும் உபை இப்னு கஅப் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் செவியேற்றுள்ளார் என்று குறிப்பிடவில்லை.
மொத்தத்தில் இமாம் புகாரி மிகச் சிறந்த அறிவிப்பாளர் தொடர் என்று கூறியது மிகப் பெரும் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது. இதன் காரணத்தினால் இமாம் புகாரியின் கூற்றை அடிப்படையாக வைத்து நபி கூறியதாக வரும் சரியான அறிவிப்பாளர் தொடரை “ம.ஃலூல்” (பலவீனமானது) என்று விமர்சித்த இமாம் பைஹகி, இப்னு ரஜப், ஆகியோரின் விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்பது தெளிவாகிவிட்டது.
ஷவ்கானி எதை மறுத்தார்?
இமாம் ஷவ்கானீ அவர்கள் ‘அல்ஃபவாயிதுல் மஜ்முஆ” என்ற தன்னுடைய நூலில் நாம் ஆதாரமாக எடுத்துவைக்கும் மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் இரண்டு செய்திகளை பலவீனம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இமாம் ஷவ்கானீ என்ன கூறுகிறார் என்பதை சரியாகப் படிக்காத அரைகுறைகள் இந்த ஹதீஸின் அடிப்படையை வைத்து இந்த ஹதீஸையே இமாம் ஷவ்கானீ மறுத்துள்ளார் என்று கிறுக்குத் தனமாக உளறியுள்ளனர்.
இமாம் ஷவ்கானி என்ன கூறியுள்ளார் என்பதைப் பற்றி நாம் காண்போம். ‘உண்மைக்கு ஒத்துப்போகும் ஒரு செய்தி என்னிடம் இருந்து (நான் கூறியதாக) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் அது நான் அறிவித்ததாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தியை ஷவ்கானீ தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். பிறகு இதனுடைய அறிவிப்பாளர் தொடர் சரியில்லை என்று குறிப்பிடுகிறார்.
பிறகு இதே கருத்தில் அறிவிக்கப்பட்ட இன்னும் இரண்டு செய்திகளைக் கூறுகிறார். அதன் பிறகு இந்தச் செய்திகள் நபியின் மீது பொய்யுரைக்கலாம் என்ற கருத்தை தருகிறது. நபியின் மீது பொய்யுரைக்கக் கூடாது என்ற கருத்தில் வரும் நபிமொழிக்கு எதிராகவும் உள்ளது. இப்னுல் ஜவ்சி அவர்கள் இந்தச் செய்திகளை தம்முடைய “மவ்லூஆத்” (இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதும் சரியானதே எனக் கூறிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இத்துடன் அஹ்மத் அவர்கள் ஸஹீஹ்டைய நிபந்தனைக்கு உட்பட்டது என்று கூறப்பட்ட அறிவிப்பாளர் தொடரில் தன்னுடைய முஸ்னதில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.
இந்த ஹதீஸ் (முன்னர் கூறப்பட்ட) அந்த ஹதீஸிற்கு துணைச்சான்றாக இருந்தாலும் என்னுடைய உள்ளமும், என்னுடைய முடியும், என்னுடைய தோலும் (முன்னர் கூறப்பட்ட) அந்த ஹதீஸை மறுக்கிறது. அது நபிகள் நாயகத்தை விட்டும் மிகத் தூரமானது என்றே நான் எண்ணுகிறேன். என்று ஷவ்கானீ கூறுகிறார்.
நூல் : அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ பக்கம் 289
இமாம் ஷவ்கானீ அஹ்மதில் இடம் பெறும் நபிமொழியை ஸஹீஹ் என்று கூறியதுடன் மட்டுமல்லாமல் அதனை அடிப்படையாக வைத்து அதற்கு முன்னர் கூறப்பட்ட இரண்டு செய்திகளைத்தான் மறுக்கின்றார். ஆனால் சில அரைகுறைகள் ஷவ்கானீயின் வார்த்தைகளை சரியாகக் கவனிக்காகமல் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே இந்த ஹதீஸை ஷவ்கானீ மறுத்துள்ளார் என்று உளறிக் கொட்டியுள்ளனர்.
ஆனால் இமாம் ஷவ்கானீ அவர்களின் நூலிற்கு, கீழே எழுதப்பட்டுள்ள அடிக்குறிப்பை எடுத்துக்காட்டி அதனை இமாம் ஷவ்கானியின் கூற்றாக மக்களிடம் படம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் ஸஹீஹ் அந்தஸ்தில் உள்ளது என்பதே இமாம் ஷவ்கானியின் நிலை என்பது மேற்கண்ட சான்றிலிருந்து தெளிவாகிவிட்டது.