08) புகாரி, முஸ்லிம் போன்ற பெரும் அறிஞர்களுக்குத் தெரியாததா?
8) புகாரி, முஸ்லிம் போன்ற பெரும் அறிஞர்களுக்குத் தெரியாததா
இவர்களுக்கு தெரிந்து விட்டது?
அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. அவை நபி (ஸல்) அவர்கள் சொன்னவை கிடையாது. என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்து வருகின்றது. நமது பிரச்சாரத்தை உரிய வாதங்களை வைத்து ஆதாரத்துடன் மறுக்க திராணியற்றவர்களின் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும்.
இமாம் புகாரி அவர்களின் ஸஹ்ஹீல் புகாரி, இமாம் முஸ்லிம் அவர்களின் ஸஹீஹ் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் நஸயீ, இமாம் அபூதாவுத் அதே போல் ஹதீஸ்களின் தொகுப்புரையாளர்கள் பலரும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.
தமது கால நேரத்தை ஹதீஸ் துறைக்காகவே அவர்கள் செலவு செய்தார்கள். – அல்லாஹ் அந்த அறிஞர்களின் பணியைப் பொருந்திக் கொள்வானாக! ஹதீஸ் துறைக்கு குறித்த அறிஞர்கள் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கும் தவறுகள் ஏற்படும், ஏற்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஹதீஸ்களைத் தொகுத்தவர்கள் அவர்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள், இஸ்லாமிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்கள் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும் அவர் அனைத்தும் அறிந்தவராக இருக்க மாட்டார், இருக்கவும் முடியாது என்பதே இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும். அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்தை விமர்சனம் செய்பவர்கள் புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்களே சொல்லாத விதியை தவ்ஹீத் ஜமாஅத்தினர் சொல்கின்றார்கள், புகாரி, முஸ்லிமை விட அறிந்தவர்களா இவர்கள்? என்ற வரட்டு வாதத்தை இவர்கள் முன் வைக்கின்றார்கள்.
புகாரி, முஸ்லிம் அனைத்தும் அறிந்தவர்களா?
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும். அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்றிருக்கும் போது, புகாரியோ, முஸ்லிமோ அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நம்புவதோ, பிரச்சாரம் செய்வதோ இஸ்லாமிய அடிப்படை அகீதாவுக்கு எதிரானதாகும். புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்களுக்கு தெரியாததா இவர்களுக்குத் தெரிந்து விட்டது? என்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் இஸ்லாமிய அடிப்படை அகீதாவை விட்டும் வெகு தூரம் சென்று விட்டார்கள் என்பதே நிதர்சனமாகும்.
அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
“நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்: ஞானமிக்கவன்” என்று அவர்கள் கூறினர்.
அனைத்தையும் அறிந்தவன் இறைவன் மாத்திரம் தான் என்பதைத் தாண்டி, புகாரி, முஸ்லிமும் அனைத்தையும் அறிந்தவர்கள் என்று நினைப்பது இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானதாகும். புகாரி, முஸ்லிம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இறை பண்பு இருப்பதாக இவர்கள் வாதிடுகின்றார்கள்.
• புகாரி, முஸ்லிமுக்கு தெரியாதது மற்றவர்களுக்கு தெரியக் கூடாதா?
• புகாரி, முஸ்லிமுக்கு தெரிந்த விஷயங்கள் மாத்திரம் தான் சத்தியமா?
• புகாரி, முஸ்லிமுக்குத் தெரியாத விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தால் அது அசத்தியமாகுமா?
• புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் மாத்திரம் தான் சத்தியத்தை சரியாகப் புரிந்து கொள்வார்களா?
இது போன்ற இன்னும் பல கேள்விகள் இதில் எழுப்பலாம். நம்மை எதிர்த்து விமர்சனம் செய்பவர்கள், “புகாரி முஸ்லிமுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது?” என்றெல்லாம் கேள்வி எழுப்புபவர்கள் இவை அனைத்திற்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.
கருத்தைப் பார்த்து ஹதீஸைப் பதியவில்லை
புகாரி, முஸ்லிமுக்கு தெரியாததா இவர்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேள்வி கேட்ப்பவர்களிடம் நாமும் சில கேள்விகளை கேட்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த பெண் குரங்கொன்றை மற்ற குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்ததாக ஒரு செய்தி ஸஹ்ஹீல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.
மேலே நாம் எடுத்துக் காட்டிய செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தார்களே அப்படியானால் குரங்கு விபச்சாரம் செய்யும் என்று புகாரி இமாம் நம்பினார்களா? மனிதர்களைப் போல குரங்கு, பன்றி, ஆடு, மாடு போன்ற மிருகங்களுக்கெல்லாம் விபச்சாரத்திற்கு கல்லெறி தண்டனை உண்டு என்பது தான் இமாம் புகாரி அவர்களின் மார்க்க நிலைப்பாடா? புகாரி இமாமுக்குத் தெரியாததா இவர்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேள்வி கேட்பவர்களிடம் இப்போது நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
மேலே நாம் எடுத்துக் காட்டிய குரங்கு விபச்சாரம் செய்ததாக (புகாரி: 3849) ல் இடம் பெற்றிருக்கும் செய்தி தவறானது. பொய்யானது. இட்டுக்கட்டப்பட்டது என்பது நமது நிலைப்பாடு. ஆனால் இமாம் புகாரி அவர்கள் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். இமாம் புகாரிக்கு அனைத்தும் தெரியும் என்றால் குறித்த செய்தி இட்டுக்கட்டப்பட்ட, போலியான செய்தி என்பது ஏன் தெரியவில்லை? அது போல் புகாரியில் இடம் பெறும் இன்னொரு செய்தியைப் பாருங்கள்.
உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஸூவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப் பட்டார்.
அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.
மேற்கண்ட செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு நீண்ட செய்தியுடன் இணைந்து இடம் பெரும் செய்தியாகும். இந்தச் செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். புகாரி, முஸ்லிமுக்குத் தெரியாததா இவர்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேள்வி கேட்பவர்களிடம் நாம் இந்தச் செய்தி தொடர்பில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலில்லை.
புகாரி இமாமுக்கு அனைத்தும் தெரியும் என்றால், அபூலஹபின் விரல்களில் இருந்து தண்ணீர் புகட்டப்படும் என்பதுதான் புகாரி இமாமின் நிலைபாடா?
புகாரி இமாம் அவர்கள் இதனை நம்பினார்களா?
உர்வா என்பவர் தான் குறித்த செய்தியைக் கூறுகின்றார். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்: நபித்தோழரும் அல்ல அப்படியிருந்தும் இவருடைய கூற்றை புகாரி அவர்கள் ஏன் பதிந்தார்கள்? இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறப்படவில்லை என்பது புகாரி இமாமுக்குத் தெரியவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு நம்மை விமர்சனம் செய்பவர்கள் என்ன பதில் தரப் போகின்றார்கள்?
குர்ஆன், சுன்னா தான் அடிப்படையே தவிர
அறிஞர்களின் கருத்துக்கள் அல்ல
நம்மைப் பொருத்த வரையில் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தான் அடிப்படை மூல ஆதாரங்களே தவிர இமாம்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்கள் அல்ல. இந்த நிலையில் இருந்து நாம் பிரச்சாரம் செய்வதினால் தான் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை எந்த அறிஞர் பதிவு செய்தாலும் அது இட்டுக்கட்டப்பட்டது என்பதை தைரியமாக எம்மால் சொல்ல முடிகின்றது.
போலியான செய்தி புகாரி, முஸ்லிமில் வந்தாலும் அதனை போலியானது என்று நாம் தைரியமாகச் சொல்வதற்கு காரணமே நமது அடிப்படை அல்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மாத்திரம் தான். எந்த அறிஞரையும் கண்மூடிப் பின்பற்ற வேண்டிய எந்தத் தேவையும் நமக்கு இல்லை. குர்ஆன், சுன்னாவை விடுத்து போலியான செய்திகளுக்காக எந்த அறிஞரையும் காப்பாற்ற வேண்டிய தேவையும் எமக்கு இல்லை.
அதனால் தான் போலியை போலி என்று தைரியமாக எடுத்துரைக்கின்றோம். ஆகவே சொல்லும் செய்தி சரியானதா? ஏற்றுக் கொள்ளத் தக்கதா? என்பதைத் தான் பார்க்க வேண்டுமே ஒழிய புகாரி சொன்னாரா? முஸ்லிம் சொன்னாரா?
புகாரிக்கு தெரியாதது, முஸ்லிமுக்குத் தெரியாதது இவர்களுக்கு எப்படித் தெரியும் என்றெல்லாம் தலை கால் புரியாமல் அறிவுக்கு கொஞ்சமும் நெருக்கமற்ற கேள்விகளைக் கேட்பது அறிவுடமையாகாது என்பதை நம்மை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.